மிருதன் விமர்சனம்

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை மனசோடு போகிறவர்களுக்கு குதூகலத்தையும், குந்தாங்குறையாகப் போகிறவர்களுக்கு குழப்பங்களையும் அள்ளி வழங்குகிறது ‘மிருதன்’! ஆனால் தமிழ்சினிமாவில் புதிய முயற்சி என்பதால், இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜனுக்கு ஒரு லாரி துப்பாக்கி ரவைகள் பார்சேல்ல்ல்ல்ல்!

ஊட்டியில் ஏதோ ஒரு ரசாயனக் கழிவை நாய் ஒன்று நக்கி வைக்க, அதற்கப்புறம் அது கடிக்கிற ஒரு கடிதான் இந்த படத்தின் முதல் படி! கடிபட்ட ஆசாமி அம்மாவை கடிக்க, அந்த அம்மாவோ மருமகளை கடித்து வைக்கிறாள்… அதற்கப்புறம் அவர்களும் ஒவ்வொருவராக கடித்து வைக்க… கடிபடுகிற எல்லாரும் ரத்தவெறி பிடித்து மற்றவர்களை கடிக்க ஓடுகிறார்கள். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி… (தமிழ்சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு அதிக சம்பளம் கொடுத்த படம் இதுவாகதான் இருக்கும்) இந்த களேபரத்துக்கு நடுவில் எங்கேர்ந்து வர்றாரு ஹீரோ? அவருடைய ரோல் என்ன? இதுதான் பர்ஸ்ட் ஹாஃப், மற்றும் செகன்ட் ஹாஃப். இதற்குள் தங்கச்சி சென்ட்டிமென்ட், காதல், சோகம் என்று சாமர்த்தியமாக நுழைத்து, சபாஷ் போட வைத்திருக்கிறார் ஷக்தி சவுந்தர்ராஜன்.

போர்ட்டர் கிடைச்சுட்டாரே என்று பெட்டியையும் அடுக்கி, போதாக்குறைக்கு ஒரு ரயில் பெட்டியையும் அவர் தலைக்குள் ஏற்றி வைக்கிற ஆள் போலிருக்கிறது டைரக்டர். இவருக்கு கிடைத்த பலசாலி மிஸ்டர் ஜெயம் ரவி. இந்த முழு படத்தையும் அவர் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது. நன்றாகவே தாங்குகிறது அவர் தோள்களும், சிரசும்! அதுவும் தன் கண்ணெதிரிலேயே உயிர் தங்கை பலியாகப் போகிறாள் என்பதும், அவளும் ஸோம்பியாக மாறி கடிக்கப் போகிறாள் என்பதும் தெரிந்த பின்பும், தப்பித்து ஓடாமல் அவளுக்காக சாகத் துணிகிற ஜெயம் ரவிக்கு, கண்ணும் உதடும் துடிக்கிறது. அந்த நேரத்தில் துப்பாக்கியோடு உள்ளே வரும் டாக்டர்களை அவர் பார்க்கும் பார்வை மிரள வைக்கிறது. படத்தில் வரும் அந்த ஒரு பகுதி, பாசமலர் பார்ட் 2.

ஹீரோ, ஹீரோயின் என்று ரவியும், லட்சுமிமேனனும் இருந்தாலும், இப்படத்தில் சொல்லப்படும் காதல் புதுசு. பிடித்த காதலி அருகே இருந்தும் இருவரையும் காதலிக்கவா விடுகிறார்கள் அந்த ஸோம்பிகள்? நல்லவேளை… எல்லாவற்றுக்கும் சேர்த்து கடைசி நேரத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார் ஜெயம் ரவி. எப்படியாவது காதலியை தப்பிக்க வைத்துவிட வேண்டும் என்று மினி ராட்சசனாக மாறி, அவர் ஸோம்பிகளை சுட்டுத் தள்ளும் அந்த காட்சி சோகத்திலும் ஈரம்!

லட்சுமிமேனன் படத்தில் எங்காவது சிரிக்கிறாரா என்று யோசித்து மண்டையை கசக்கினாலும் பிடி பட மாட்டேன் என்கிறது. “அவ்ளோ பேர் பார்த்துகிட்டு இருக்கும் போது நீ மட்டும் என்னை காப்பாற்ற வந்தியே, ஏன்?” என்று அவர் கேட்க, கேட்க, நமக்கு பி.பி.ஏறுகிறது. (கேட்கிற இடமாம்மா அது?) எப்படியோ… ஒருவர் காதலை மற்றவர் உணர்ந்து கொள்கிற அந்த கடைசி வினாடியாவது கூட்டம் கூட்டமாக ஸோம்பிகள் இல்லாத இடமாக இருக்கிறது.

மிக சீரியசான படம். அப்படியிருந்தும் ஆங்காங்கே சிரிக்க முடிகிறது என்றால், அது காளி வெங்கட்டினால்தான்! வழக்கம் போல தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். படத்தில் ‘ஓவர் ஆக்டிங் புகழ் ’ ஸ்ரீமன் இருக்கிறார். நல்லவேளை ரசிக்க முடிகிறது அவரை.

படத்தில் அதிகம் பாடல்கள் இல்லை. வருகிற இரண்டு பாடல்களும் எக்குத்தப்பான சூழலில் இருக்கிறது. இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கிறது இமானின் வித்தை. ஆனால் பின்னணி இசை மட்டும் பேரிரைச்சலாக ஒலிக்கிறது.

அவ்வளவு பெரிய கூட்டத்தை ஒருங்கிணைத்து படமாக்குவதே பெரிய சவால்தான். தனியாக வேறு இடம் சுட்டி பொருள் விளக்கி பாராட்ட வேண்டுமா ஒளிப்பதிவாளர் வெங்கடேஷை?

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதையை எடுத்துக் கொண்ட வரைக்கும் ஓ.கே. ஆனால் அவ்வளவு பெரிய சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கும் போது, முதல்வர் எங்கு போனார். அதிகாரிகள் எங்கு போனார்கள்? “எவனாவது கேள்வி கேட்டு தொலைவான்யா…” என்ற பிரக்ஞை சிறிதும் உங்களுக்கு இல்லையே டைரக்டரய்யா?

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரஸ்யமான திரைக்கதையால் தெறிக்க விட்டிருக்கலாம். ஐயோ பாவம் வெறுமனே கொறிக்க விட்டிருக்கிறார் ஷக்தி சவுந்தர்ராஜன்! மிச்ச மீதி ஸோம்பிகள் யாராவது இருந்தால், டைரக்டரின் அட்ரஸ் தர்றேன்… போயிட்டு சீக்கிரம் வேலைய முடிங்கப்பா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கலைந்தது கரு மேகம்! பொழியட்டும் இசை ராகம்! பிணக்குகளை தளர்த்திய சங்கம்!

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும்...

Close