மொட்டை ராசேந்திரன் பாடுனா, பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…?
மறுபடியும் ஒரு பேய்க்கதை…. என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க… ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த ‘பேய்கள் ஜாக்கிரதை’ நீங்க யூகிக்க முடியாத படமா இருக்கும். பத்தோடு பதினொன்னு… அத்தோட இது ஒண்ணுன்னு நீங்க படம் பார்த்த பிறகு சொல்லவே மாட்டீங்க’! -தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர் கண்மணி. பேய்கள் ஜாக்கிரதை பட இயக்குனர்.
ஜீவரத்னம் ஹீரோவாகவும், ஈஷான்யா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தின் இப்போதைய ஒரே அட்ராக்ஷன் தம்பி ராமய்யாவும், மொட்டை ராஜேந்திரனும்தான். ‘நியூ பேஸ் நடிக்கிற படம். ஜனங்க தியேட்டருக்குள்ளே வரணும்னா தம்பி ராமய்யா மாதிரி எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் உள்ளே இருக்கணும். நானும் அவரும் ஒரு காலத்துல ஒண்ணா அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கோம். உரிமையா வரச்சொல்லி, நடிக்கணும்னு கேட்டேன். ஓ.கேன்னுட்டாரு…’ என்று மீண்டும் ஒரு அறிமுகம் கொடுத்தார் கண்மணி.
போலீஸ், ரவுடிக்கெல்லாம் கூட அஞ்சாத தம்பி ராமய்யாவுக்கு சாயங்காலமானால் மட்டும் கை கால்கள் உதறலெடுக்கும். ஏனென்றால் அவர் அஞ்சுவதே பேய்க்கு மட்டும்தான். பேயாவது ஒண்ணாவது? உலகத்துல ஏதுய்யா பேய் என்று தெனாவெட்டாக திரிகிற ஆள் ஜீவரத்னம். இருவரும் பிரண்ட்ஸ் ஆகிறார்கள். பேயே இல்லையென்று சொன்ன ஜீவரத்னம் மெல்ல மெல்ல தம்பி ராமய்யாவை துணிச்சல் காரராக்குகிறார். அந்தோ பரிதாபம்… அவருக்கு பேய் பயம் வந்துவிடுகிறது என்று போகிறதாம் கதை.
பேய்கள் ஜாக்கிரதையில் பெரிய விசேஷம் ஒன்று. இந்த படத்திற்காக தம்பி ராமய்யாவும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். தம்பி ஓ.கே. அந்த ராசேந்திரன் குரலை கேட்டா பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…? இந்த சந்தேகம் இசையமைப்பாளர் மரிய ஜெரால்டிலிருந்து படம் தொடர்பான அத்தனை பேருக்கும் இருக்க, ஒருவழியாக பாடியே முடித்துவிட்டார் மொட்டை ராஜேந்திரன்.
‘ஷ்யூரா சொல்றேன். இந்த பாட்டுதான் இந்த வருஷத்தின் மெகா ஹிட்டாகப் போவுது’ என்றார் கண்மணி. கேட்டுப்பார்த்தால் நமக்கும் அப்படிதான் தோணுது.
பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்ங்க – https://youtu.be/6k_WfUxD1d8