‘ அட ச்சீய் முருகதாஸ்… ’ மீஞ்சூர் கோபிக்கு ஆதரவாக தமிழ்சினிமாவிலிருந்து நீளும் முதல் கரம்!

கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று பேசுவதற்காகவாவது என்னோடு விவாதிக்க தயாரா?’ என்கிறார் கத்தி கதை என்னுடையது என்று கூறிவரும் கோபி. எதிர் தரப்பு கள்ள மவுனம் சாதிக்கிறது. மீடியா முன் தோன்றி விளக்கம் கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு திணறுகிறார் முருகதாஸ். முன்னணி பின்னணி இயக்குனர்கள் யாரும் கூட மீஞ்சூர் கோபிக்கு ஆதரவாக பேச வர முன்வரவில்லை. காரணம், இங்கே பணக்காரன் வைத்ததுதான் சட்டம். இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் தனது வலைதளத்தில் எழுதியிருப்பது வாசர்களுக்காக-

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்தில் அப்படியான இழப்பீடோ, அங்கீகாரமோ புகார் தெரிவித்தவருக்கு தரப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. ஆக, தொடர்ந்து இப்படியான புகார்கள் தெரிவிப்பவர்கள் பலனுக்காத்தான் இதை செய்கிறார்கள் என்றவாதம் அடிபட்டுப்போகிறது. எனில் தொடர்ந்து இப்படியான புகார்கள் ஏன் வந்துகொண்டே இருக்கிறது? என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை. ஆனால் புகார்களில் உண்மையும் கூட இருக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் ஒருபுறமிருக்கட்டும்.

தற்போது, கத்தி சிக்கலில், புகார்தாரரான இயக்குனர் கோபியை, நான் நன்கு அறிவேன். காரணம் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தின் இயக்குனர் அவர். அப்படத்தையும், மெட்ராஸ் படத்தையும் இணைத்து கடந்தமாதம் இதே இணையத்தில் பல விவாதங்கள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் உண்மை நிலை என்ன என்பதைப்பற்றி பல நண்பர்கள் கேட்டார்கள், பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட உரையாடலில் என் கருத்தை பகிர்ந்துக்கொண்டேன். பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு காரணம், அப்படத்தைப்பற்றி கோபி அவர்களே பொதுவெளியில் கருத்து சொல்லவில்லை என்பதும், மேலும் அதில் அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்பதும்தான். நமக்குத் தெரிந்ததை எல்லாம் பொதுவெளியில் சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ஆனால் இப்போது கத்தி கதையில், எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்த வீடியோவில் இயக்குனர் கோபி சொல்லும் செய்திகள் பெரும்பாலானவை நான் முன்பே அறிந்ததுதான். இவற்றைப்பற்றிய தகவல்களை கருப்பர் நகரம் திரைப்பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை, வெறும் தகவல்களாக மட்டுமே அவை பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. காரணம், அப்போது அவர் ஒருபடத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர். அதைத்தவிர்த்து வேறதுவும் முக்கியமானதில்லை. அப்போது ஏழாம் அறிவு பட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாக நினைவு. (அதன் தலைப்பு பற்றியும் அப்போது என்னிடம் குறிப்பிட்டார் கோபி. “ஏழாம் அறிவு என்பது போரை குறிக்கிறது” என்றார்) தான் இயக்குனர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், பின்பு அது தள்ளிபோய் விட்டதாகவும் சொன்னார். திரைத்திறையில் இது மிகவும் சகஜம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தான் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக முருகதாஸை சந்தித்தது பற்றி ஓய்வு நேர உரையாடல்களில் அவர் பகிர்ந்துக்கொண்டார். மேலும் அது விவசாயிகளின் பிரச்சனைப்பற்றியது என்பதும் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுப்பதைப் பற்றியது என்பதைக்கூட சொன்னார். மேலும் சில தகவல்களை அவர் அப்போது பகிர்ந்துக்கொண்ட போதும், அவை எனக்கு இப்போது நினைவிலில்லை. பின்பு அவற்றைப்பற்றி நான் மறந்து கூட போனேன். காரணம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு கோபிக்கும் தொடர்பில்லை என்பதுதான். சில காரணங்களால் கருப்பர் நகரம் படம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. நான் மற்ற படங்கள் செய்ய வந்துவிட்டேன். இப்போது, கோபியின் பேட்டியை பார்த்தபோதுதான், இவற்றைப்பற்றி அவர் அன்றே பகிர்ந்துகொண்டது நினைவிற்கு வருகிறது.

அப்பேட்டியில் கோபி பொய் பேசவில்லை என்பது என் எண்ணம். காரணம், அவர் சொல்லும் பல விஷயங்கள் எனக்கு முன்பே சொல்லப்பட்டவை. கத்தி படமொன்று உருவாகும், அதில் விஜய் நடிப்பார் போன்ற தகவல்கள் தெரிவதற்கு முன்பே சொல்லப்பட்டவை. அப்போது அந்த தகவலுக்கு எந்த மதிப்புமில்லை. வெறும் தகவல்களாக, பொழுதைக்கடத்தும் வேளைகளில் சொல்லப்பட்டவை அவ்வளவுதான். அக்கதை படமாகும் என்ற நம்பிக்கை கூட கோபியிடமில்லை அப்போது. இப்படியான பல நிகழ்வுகள் திரைத்துறையில் உண்டு.. ஒரு கதையை சொல்லி, அது தேர்வு செய்யப்பட்டு, படமாக்கும் முயற்சிகள் நடந்து, பின்பு அது அப்படியே கிடப்பில் போடப்படுவது திரைத்துறையின் மிகச்சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.

மேலும், கத்தி திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர். இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப்பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. கறுப்பர் நகரம் திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்று வரையும் அவ்வளவுதான். கருப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, அட்டக்கத்தியும், மெட்ராஸ் படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், கருப்பர் நகரத்தின் சாயல்கள் இருந்தன. அதைப்பற்றிக்கூட அவரிடம் நான் விவாதித்ததில்லை. பின்பு ஒருநாள் உணவுக்கூடமொன்றில் அவரைப்பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவு மாறிப்போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார். பின்பு அடையாளம் தெளிந்து பேசிக்கொண்டோம். கருப்பர் நகரத்தைப்பற்றி குறிப்பிடும் படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த ‘ஆவணப்படங்களை’ மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம். எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத்துறையின் போராட்டக்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகிப்போவதை நினைத்து மனம் வேதனைக்கொண்டது.

இவ்வளவு அறிவு கொண்ட கோபி ஏன் தன் கதையை ‘காப்புரிமை’ பெற்று வைத்திருக்கவில்லை என்ற வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. ஏராளமான துறைகளில் உலகளாவிய அளவில் காப்புரிமை வழக்குகளின் நிலை (Apple vs Samsung) எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இங்கே கலைத்துறையில் அது உதவாது என்பது மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமுமற்றது என்பதை நாம் உணர வேண்டும். காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவை, அத்திரைப்படம் திரைக்கு வரும்வரை திருத்தம் செய்ய சாத்தியம் கொண்டவை. மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாகவே பெரும்பாலானோர் தன் கதை இதுதான் என்று அறுதியிட்டு காப்பீடு செய்ய முயலுவதில்லை. மேலும் தமிழ்த்திரையுலம், அப்படி ஒன்றும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் துறையல்ல. தனக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற தவிப்புக்கு, அத்துணை கலைஞர்களையும் உள்ளாக்கும் துறை இது. ஆகையால், தன் கதையை ஏன் கோபி முன்பே காப்புரிமை செய்து வைத்திருக்கவில்லை என்ற வாதம், வீண் என்பதை உணர்க.

முடிவாக, கத்தி சிக்கலை ஒட்டிய அவரின் பேட்டியைப்பார்க்கும் போது, அதை வழக்கமான பணம் பிடுங்க நடத்தப்படும் தகிடுத்தத்தமாக கருதி ஒதுக்கிச்சென்று விட என்னால் முடியவில்லை. அப்பேட்டியின் முடிவில், “நான் பொய் சொல்லுகிறேன் என்பதை கண்டுபிடிக்கவாவது விசாரணை நடத்துங்கள்” என்ற அவரின் வாதம் ஞாயமானதாக எனக்குப்படுகிறது. மேலும் தான் போராடுவது, பணத்திற்காக மட்டுமில்லை, அது என் கதை என்ற அங்கீகாரத்திற்காகவும்தான் என்று அவர் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அங்கீகாரத்திற்காக போராடும் சமூகத்திலிருந்தும், அதன் போராட்ட அரசியலிலிருந்தும் வந்த மனிதர் அவர். நீதி மன்றம் எப்போதும் நீதியை நிலை நாட்டிவிடும் என்ற நம்பிக்கையை கொடுக்கவியலா தன்மைக்கொண்டது, என்ற முன்னனுபவம் கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதனால், சமூகத்தின் மீதும், திரைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. மற்றவர்கள் எப்படியோ, கோபியைப் பொருத்தவரை, அவர் தகுதியானவர் என்பதை அறிந்தவன் என்பதனாலேயே இக்கட்டுரையை நான் எழுத வேண்டியதாகிற்று.

சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த்திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம். அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்.

1 Comment
  1. பிம்பிடிக்கி பிளாப்பி says

    யாரோ சோனாச்சலதுக்கு பொறந்த கொழந்தைக்கு அருணாசலம் தான் அப்பன் என்பது போலால்லவா இருக்கு.. குறிப்பு : இயக்குனரின் தந்தை பெயருக்கும் மேற்கூறிய பொன் மொழிக்கும் யாதும் தொடர்பில்லை

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘கிளம்புடா காமப் பிசாசே ’ என்னடா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?

‘காதலுக்கு கண்ணில்லை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெய் ஆகாஷ். இந்த தலைப்பை ஆணித்தரமாக நிருபிப்பது போலவே பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வாரம்...

Close