நான் சிகப்பு மனிதன் / விமர்சனம்
கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும் கொல்லென்று சிரித்து வைக்கும். கடந்த சில வருடங்களாகவே பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹீரோவையோ, இதய நோயால் எந்த நிமிஷம் புட்டுக் கொள்வாரோ என்று தவிக்க வைக்கும் ஹீரோயினையோ இப்படிதான் முகம் கொள்ளாத சிரிப்புடன் எதிர்கொள்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த படத்தில் விஷாலுக்கு வந்திருப்பது ‘நார்கோலாப்ஸி’ என்ற வியாதி. இது குறித்து மருத்துவர் ஒரு சிறு குறிப்பு வரையும்போது மொத்த கூட்டமும் அச்சச்சோவாகி… கப்சிப்பாகி… டங்க் டெத்தாகி… சீரியஸாக கவனிக்கிறார்கள். டைரக்டர் திருவுக்கு முதல் வெற்றி இங்குதான்.
அதிர்ச்சியோ, மகிழ்ச்சியோ, கவலையோ, கண்ணீரோ…? எது வந்தாலும் பொசுக்கென்று உறங்கிவிடுகிற வேதனைதான் இந்த நார்கோலாப்ஸி. ஆள்தான் உறக்கத்திலிருப்பாரோ ஒழிய, புலன்கள் மட்டும் விழித்திருக்கும். சுற்றியிருப்பவர்கள் பேசுவதெல்லாம் மண்டைக்குள் தெளிவாக பதிந்துவிடும். விஷால் எட்டு வயது சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரை விரட்டும் இந்த வியாதியால், சதா சர்வ காலமும் நண்பர்களின் துணையோடுதான் நடமாடுகிறார் . அசந்த சந்தர்பத்தில் மயங்கி விழும் இவரை அநாதை பிணம் என்று ஓரமாக போட்டு வசூல் பண்ணும் மயில்சாமியிடம் , மொத்த அடக்க செலவுக்கும் பணம் கொடுக்கிறார் பணக்கார லட்சுமிமேனன்.
பின்னொரு நாள் விஷாலை ஷாப்பிங் மால் ஒன்றில் லட்சுமி பார்க்க, கண்ணெல்லாம் கலவரமாகி ஒரே ‘வீல்ல்ல்ல்ல்ல்ல்….’ அதற்கப்புறம் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் லட்சுமி, விஷாலுக்கு தோழியாகிறார். சரியாக பத்தாவது நிமிடத்தில் இருவருக்கும் லவ். மகிழ்ச்சி வந்தால் கூட உறக்க நிலைக்கு போகும் இவரால் செக்ஸ்சும் சிக்கல்தான் என்பதை தெரிந்து கொள்ளும் பணக்கார அப்பா, மகளை மறந்துவிடும்படி விஷாலை எச்சரிக்கிறார்.
அப்படியிருந்தும் விஷாலின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார் லட்சுமி. (‘அதெப்ட்றா…?’ என்கிறவர்கள் வியாதியின் வீக்னசை தியேட்டரில் கண்டு களிக்கவும்) ஒரு மழை இரவில் காரில் வரும் இருவரையும் மறித்து தாக்கும் கும்பல் ஒன்று லட்சுமிமேனனை மட்டும் கேங் ரேப் செய்கிறது. அதிர்ச்சியில் மயங்கிக் கிடந்தாலும் அவர்களின் பேச்சையும் லட்சுமியின் கதறலையும் மூளைக்குள் ஏற்றிக் கொண்டு தவிக்கிறார் விஷால். செகன்ட் ஆஃப் முழுக்க அந்த குற்றவாளிகளை அவர் சேஸ் செய்வதும் அவர்கள் சிக்கினார்களா என்பதும்தான்.
விஷால் லட்சுமிமேனன் காதல் பகுதியை, கவிதையும் இளமையும் பொங்க பொங்க வடித்திருக்கிறார் டைரக்டர் திரு. அதிலும், லட்சுமிமேனன் விஷாலின் பத்து ஆசைகளை படித்துவிட்டு ஒரு முத்த ஆசைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த இடத்தை வெட்ட சொன்ன புண்ணியவான்களுக்கு புத்தி அடகு கடையில்தான் இருந்திருக்க வேண்டும். விரசமில்லாத, கவித்துவமான காட்சி அது. கதைக்கு மிக மிக முக்கியமான காட்சியும் கூட. நம்ப முடியாத காட்சியென்றாலும், அந்த ஷகீலா பட அழிச்சாட்டியம் செம லொள்ளு!
விஷால், தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதையெல்லாம் மறந்து இந்த கதைக்காக வளைந்து கொடுத்திருக்கிறார்! ஹீரோ மயக்கத்திலிருக்க அவருக்கு எதிரிலேயே ஹீரோயின் கற்பழிக்கப்படுவதை தமிழ்சினிமாவில் பழத்தையும் தின்று அதன் கொட்டையையும் ருசித்த ரசிகன் எவனும் ஏற்கவே மாட்டான். இருந்தாலும், துணிச்சலாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் விஷால். (இதுக்கு பாராட்றதான்னே தெரியலயே?) அந்த குற்றவாளிகளை அவர் கண்டு பிடித்து நெருங்கும்போது அதை செய்தது இவன்தான் என்று ஒருவனை காட்டுகிறார் டைரக்டர். ஹக்கென்று மூச்சடைக்கிறது. நமக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை அதற்கப்புறம் வருகிற காட்சிகள் பெரும் கேலிக் கூத்தாக்குவதை தவிர்த்திருக்கலாம் திரு.
லட்சுமிமேனனின் அலறல் சத்தம் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அந்தளவுக்கு மனசில் குடி கொண்டுவிடுகிறார் அவர். அவ்வளவு லவ்லியான ஹோம்லியான பொண்ணுக்கு இப்படியா? என்கிற தவிப்பு வராத ரசிகன் மனுஷனேயில்லை. இவரை இடைவேளைக்கு பிறகு கோமாவில் தள்ளிவிடுவதை தவிர்க்க முடியாதுதான். ஆனால்அவரில்லாத செகன்ட் ஆஃப் மஹாவீரர் ஜெயந்தி தின டாஸ்மாக் ஆகிவிடுகிறதே?
அப்புறம் எல்லாரையும் அசரடிப்பது சரண்யா பொன்வண்ணனின் இன்னொசென்ட். எப்படியாவது மகனை நல்லபடியா பார்த்துக்க ஒரு மருமக வந்துருவா என்று தவிப்பதும், லட்சுமியோடு வந்து கதவை தட்டும் மகனை பார்த்து சந்தோஷத்தை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் மொட்டை மாடிக்கு ஓடுவதும் தாய்மையின் பரிபூரண அழகு.
அதென்னவோ, மார்க்கெட் போன நடிகைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட ரோல்கள்தான் அமைக்கிறது. இனியா ஒரு காட்சியில் ‘நான் அவ்ளோ பணத்துக்கு வொர்த் இல்ல… என்று கூறும்போது புரிந்து கொண்டு கைதட்டுகிறார்கள் தியேட்டரில். ஒரு நல்ல கதையில் சூனியக்காரியாக புகுந்து கெடுத்த பாவத்திற்கு அனுபவிக்கட்டும்… இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் பெயர் சுந்தராம். இவர்தான் வில்லனும் கூட. இவ்வளவு வெயிட்டான ரோலை சுமக்கக் கூடிய கெப்பாசிடி அவருக்கு இருக்கிறதா என்பதை கூட உணராமல் உள்ளே நுழைத்ததின் பின்னணியை அறிய முதல்ல நாம ஒரு துப்பாக்கி வாங்கியாகணும்.
ஜெயப்ரகாஷுக்கு மிக பொருத்தமான கேரக்டர். நம்பிக்கை நாணயம் கைராசி என்கிற வார்த்தையை உச்சரிக்கவே இப்படியொரு வெள்ளைக்காரர் வேணும். கடைசியில் என் பொண்ணு இருக்க வேண்டிய இடம் இதுதான் என்று லட்சுமிமேனனை விஷாலிடம் விட்டுவிட்டு செல்கையில் ஜென்ட்டில்மேன் ஆகிறார்.
பாடல் காட்சிகள்தானே என்று தனியே தொங்க விடாமல் அதை முடிந்தவரை கதைக்குள் செருகியிருக்கிற திருவுக்கு பாராட்டுகள். விஷால் ஒரு காட்சியில் புறாவை பறக்க விடுகையில் அந்த புறாவே பாடலுக்கான லொக்கேஷனில் இறங்குவது நல்ல ரசனை. ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கிறங்கடிக்கிறது. ரூபானின் எடிட்டிங்கில் வளவளவென இழுவையில்லை. ஷார்ப்.
ஜி.வி.பிரகாஷ் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, ரசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ்சினிமா மார்க்கெட்டில் இன்னும் அறியப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது என்கிற அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார் டைரக்டர் திரு. ஆனால் பின் பாதியில் ரசிகர்கள் பலருக்கு ‘நார்கோலாப்ஸி’ வந்து தொலைக்கிறதே, என்ன செய்ய?
-ஆர்.எஸ்.அந்தணன்
சிறப்பாக எழுதியுள்ளீர்கள்…ஐயா…
sir why u changed to all negtive thoughts to positive and this movie most of some scence aginst to our culture and womens ur review is not true pls write trulh