பொண்ணு பார்க்க போன இடத்தில் பிரகாஷ்ராஜ் செய்த வேலை!

தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாமல் படமெடுக்கிற வழக்கம் பிரகாஷ்ராஜுக்கு இல்லவே இல்லை. மொழி, பயணம், கவுரவம், அபியும் நானும் என்று இதற்கு அடையாளங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது ‘உன் சமையலறையில்’. இந்த படத்திற்கு பிரகாஷ்ராஜ் இயக்குனர் என்பது கூடுதல் அட்ராக்ஷன்.

உலகம் பாஸ்ட் ஃபுட்டுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நம்முடைய பாரம்பரிய சாப்பாட்டு வகைகளை மீண்டும் ஒரு முறை கண்ணெதிரே காட்டி நாக்கில் எச்சில் ஊற வைப்பார் போலிருக்கிறது பிரகாஷ். அதுவும் இளையராஜா இசையில் உருவான ஒரு சில பாடல்களை நம் கண்களுக்கும் காதுகளுக்கும் பந்தி வைத்தார்கள். சாப்பாடு தொடர்பான ஒரு பாடலில் உளம் கவர்ந்தார் ராஜா. அந்த ட்யூனும் பாடியவரின் குரலும் மயக்கம் மயக்கம்…

மற்றவை? ராஜாவின் எண்பதுகள் எப்போதுதான் திரும்பி வருமோ என்கிற ஏக்கத்தையே கொடுத்தது.

நாம் விசாரித்த வரையில் படத்தில் வரும் ஒரு காட்சி இது. சாப்பாட்டு பிரியரான பிரகாஷ்ராஜ் ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க போகிறார். போன இடத்தில் வடை பஜ்ஜி பொங்கல் என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். ஒரு துரத்திருஷ்டம். பெண்ணை அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால்? அந்த சமையல்காரரை பிடித்திருக்கிறது. அவரை மட்டும் அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அந்த சமையல்காரர்தான் தம்பி ராமய்யா. இப்படி சமையல் சாப்பாட்டையே சுற்றி சுற்றி வருகிற கதையில் இரண்டு காதல் ஜோடிகள் உண்டு. ஒரு ஜோடி பிரகாஷ்ராஜும் சினேகாவும். மற்றொன்று தேஜஸ்- சம்யுக்தா. இப்போதுதான் திரைக்கு அறிமுகமாகும் புதிய ஜோடி. இந்த சம்யுக்தாவின் அம்மாவும் பிரகாஷ்ராஜும் ஒன்றாக நாடகங்களில் நடித்தவர்களாம். சம்யுக்தா வயித்துல இருந்த காலத்திலிருந்தே அவரை தெரியும் என்றார் பிரகாஷ்ராஜ்.

சினேகாவோடு நடிக்கணும்னு பல முறை முயற்சி பண்ணியிருக்கேன். ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை. இப்போதுதான் அது நடந்திருக்கு. இந்த படத்தில் அவர் அவ்வளவு பொருத்தமா இருக்கார். வழக்கமாக அவருடைய சிரிப்பு ரொம்ப அழகு. அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி காமிக்கறது மாதிரி ஒரு கண்ணாடியும் போட்டு விட்டுட்டோம். பார்த்துட்டு நீங்க சொல்லுங்க என்றார் பிரகாஷ்ராஜ். இளையராஜாவை பற்றி பேசும்போதெல்லாம் பிரகாஷ்ராஜின் குரல் ஏழு ஸ்வரமாகிவிடுகிறது. இந்த முறையும் அப்படிதான்.

அவர் மானசரோவர் மாதிரி ஒரு அற்புதமான நதி. அங்கே எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீரையும் அள்ளிட்டு வந்துரணும்னு நினைப்பேன். இந்த படத்திற்காக ஒரு பாடலுக்கான சில வரிகளை பழனி பாரதி எழுதியிருந்தார். அதை சும்மா படிச்சு பார்க்கறதுக்காக இசைஞானியிடம் கொடுத்தோம். கையில் வாங்கி அதை வாசிக்கும்போதே ஒரு ட்யூனா வாசிச்சுட்டார். இப்படி ஒருவரோட வொர்க் பண்ணுறது நான் செஞ்ச பாக்கியம் என்றார் பிரகாஷ்ராஜ்.

நான் எந்த படத்திற்காகவும் பாடலுக்காகவும் யோசிச்சதேயில்ல. அந்த நேரத்தில் உட்கார்ந்து ட்யூன் போடுறதோட சரி. என்ன வருதோ, அதுதான். ஆனால் என்னவோ இந்த படத்தில் வரும் பாடல் பற்றி குளிக்கும்போது சிந்திச்சேன். அந்த முதல் வரி இப்படியிருந்திருக்கலாமோன்னு தோணுச்சு. அதை பிரகாஷ்ராஜை பார்க்கும்போது சொன்னேன். இதைவிட பொருத்தமான வரி வேறு ஒண்ணு இருக்கவே முடியாதுன்னு அதையே பல்லவியா வச்சு அந்த பாடலை முடிச்சோம் என்றார் இளையராஜா.

நான் இளையராஜாவோட இசையை கேட்டு வளர்ந்தவ. அவர் இசையில் உருவான பாடல்களில் நடிக்கிறேன்னு நினைச்சா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார் சினேகா.

இந்த சமையலறையில் உப்பு, சர்க்கரை, மிளகாய் எல்லாமே ராஜாதான் போலிருக்கிறது. ருசிப்பதற்காக தமிழ்நாடே வெயிட்டிங் சார்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் சிகப்பு மனிதன் / விமர்சனம்

கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும்...

Close