பணம் போட்டவங்க வயித்துல பாம்பை விட்டு கொத்த விட்றீங்களே, நீங்கள்லாம்…. நல்லா வருவீங்க பரணி
‘வச்சா குடுமி, சிரைச்சா மொட்டை’ என்பது இதுதான் போலிருக்கு. விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத், அப்படியே பரமபத சூதாட்டத்தில் வரும் பாம்பு வாயில் அகப்பட்ட மாதிரி ஆகிவிட்டார். விஜய் எங்கே? மஜீத் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் ஹீரோவான பரணி எங்கே? காலம் நம்மை இப்படி சறுக்கு மரத்தில் ஏற்றி சவட்டி எடுக்கிறதே என்று அவர் வருந்தியிருப்பார். இந்த வருத்தத்தில் இன்னும் கொஞ்சம் கார மிளகாயை போட்டு கடுப்பேற்றி வருகிறாராம் பரணி. எப்படி?
முதலில் ‘பரணின்னா யாரு?’ என்று பாடம் எடுத்தால்தான் பாதி பேருக்கு இவர் யார் என்பதே தெரியும். நாடோடிகள் படத்தில் காதில் அடிபட்டு செவிடராக திரிவாரே, அவர்தான் பரணி. அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு நானும் ஹீரோதான் என்று ஜீப்பில் ஏறி நாலு ரவுண்ட் வர தீர்மானித்த பரணி, அண்ணேய்… நடிச்சா ஹீரோதான் என்று தன்னை நாடி வந்த அத்தனை காமெடி வாய்ப்புகளையும் கை நழுவ விட்டார். ‘கன்னக்கோல்’ என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டமும் வந்தது பரணிக்கு. ஏழு கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை சீண்ட ஆளிருந்தால்தானே திரைக்கு வரும்?
அப்புறம் இவரிடம் எப்படியோ சிக்கிய மஜீத் ‘தலைகால் புரியல’ என்ற படத்தை இவரை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்தது. பேச வந்த பரணி, பாதியில் கோபித்துக் கொண்டு தியேட்டரை விட்டே ஓட, செய்வதறியாமல் திகைத்து நின்றாராம் மஜீத். ஏன்? இந்த படத்தில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கல என்கிறாராம் பரணி.
பணம் போட்டவங்க வயித்துல பாம்பை விட்டு கொத்த விட்றீங்களே, நீங்கள்லாம்…. நல்லா வருவீங்க பரணி.