தலைவர் ஃபைட் சீன் சொல்லிக் கொடுக்கும்போதுதான் இருக்குடீய்… உங்களுக்கு!
‘ஏன்ப்பா… கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா, இல்லேன்னா கல்லெடுத்து அடிக்கட்டுமா?’ என்று தன் கட்சி தொண்டர்களுக்கே ‘கடா மார்க்’ ட்ரீட்மென்ட் கொடுத்து அசரடித்தவர் விஜயகாந்த். அவரது பிரசார பொதுக்கூட்டங்களை ஒரு தொகுப்பாக திரட்டி அதையே படமாக வெளியிட்டால், அது 100 நாட்களை கடந்து வெற்றி கரமாக ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. யூ ட்யூபில் டி.ராஜேந்தரின் கிளிப்பிங்ஸ்களுக்கு அடுத்தாற் போல, அதிகம் ரசிக்கப்படுவது இவரது பிரச்சார பீடுநடைதான்.
தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அது விஜயகாந்த்துக்கு ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அவர் இப்போது முழு நேர டைரக்டர் ஆகிவிட்டார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பில் தனது மகனை இயக்கிக் கொண்டிருப்பது சாட்சாத் விஜயகாந்தேதான். அப்படின்னா இந்த படத்தின் டைரக்டராக சந்தோஷ் என்ற இளைஞரை அறிமுகப்படுத்தினாரே, அவர் என்னவானார்?
விஜயகாந்தின் ‘செல்ல தட்டுக்கு’ அஞ்சி ஓரமாகவே நிற்கிறாராம். தலைவர்தான் கையில் மைக்கை வைத்துக் கொண்டு மகனுக்கு ஆக்ஷன் கட் சொல்லிக் கொண்டிருக்கிறார். மகனுக்கு டைரக்ஷன் சொல்லிக் கொடுப்பதை காண்பதற்காகவே அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வருகிறார்களாம் மக்கள். ஏராளமான படங்களில் நடித்த விஜயகாந்த், கடைசியாக நடித்த விருதகிரி படம் அவரே டைரக்ட் செய்ததுதான்.
இருந்தாலும், அவரது பி.பி. அங்கேயும் குறைந்தபாடில்லை என்கிறது பொள்ளாச்சியிலிருந்து வரும் தகவல்கள். ‘ஏய்… இங்கயும் கூட்டமா வந்து நின்னு கொல்றாங்கப்பா… எல்லாரையும் ஓரமா போ சொல்லு. கூட்டம்னாலே அலர்ஜியா இருக்கு’ என்று தலைவர் கூச்சலிடுவதையும் சந்தோஷமாக கேட்டுக் கொண்டு நிற்கிறார்களாம் திருவாளர் பொது ஜனங்கள்.
தலைவர் ஃபைட் சீன் சொல்லிக் கொடுக்கும்போது இருக்குடீய்… உங்களுக்கு!