நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!
திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம் பார்த்து விட்டு வெளியே வருகிற ரசிகர்கள், ஆம்லெட்டுக்கு ஆசைப்பட்டு உள்ளே போயிருந்தாலும், ஆஃப் பாயில் சாப்பிட்ட உணர்வோடு வெளியே வந்து கொண்டிருக்க, படத்தில் விக்ரம் கை வைத்த இடங்கள்தான் பிரச்சனையே என்கிறது இருமுகனின் சீக்ரெட் டீம்!
என்னவாம்?
படத்தில் ஒரு காட்சி. இன்ஹேலரை சுவாசிக்கும் யாரும், யானை பலத்தோடு பைட் பண்ணுவார்கள். அப்படியொரு பைட்டுக்காக விக்ரம் இன்ஹேலரை எடுக்க, அவரிடமிருந்து அதை பிடுங்கும் நயன்தாரா, நீங்க இப்ப நிதானமா இருக்கணும். நான் பார்த்துக்குறேன் என்பார். அடுத்து நயன்தாராவின் அதிரடி பைட் வரப்போவதாக நினைக்கும் ரசிகன், சந்தோஷத்தில் விசிலடித்தபடி காத்திருக்க… ஐயோ பாவம். அந்த பைட்டே இல்லை. முழுசாக நறுக்கி தூக்கியிருக்கிறார்கள். அதற்கப்புறம் பைட் முடிந்து களைப்போடு வரும் நயன்தாராவை கைதாங்கலாக விக்ரம் கூட்டிக் கொண்டு வருவதாக நகர்கிறது படம்.
அந்த பைட் காட்சிக்கு கத்தரி போடச் சொன்னதே விக்ரம்தானாம். தன்னைப்போலவே நயன்தாராவும் பைட் பண்ணினால் அது தனக்குதான் மைனஸ் என்று அவர் பீல் பண்ணியதாக காதைக் கடிக்கிறது தகவல்கள். அதுவும் கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹீரோவுக்கு பதிலாக ஹீரோயின் பைட் செய்தால், அது சரியாக இருக்காது என்பதுதான் காரணம். ஒருவகையில் அதுதான் சரி… அல்லது நிஜம் என்றாலும், நயன்தாராவின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், புகழுக்கும் அப்படியொரு காட்சி இருந்தால் கூட தவறில்லை என்றே தோன்றுகிறது.
இருமுகன் படத்தில் நடித்ததோடு சரி. இன்னும் அந்தப்படத்தை பார்க்கவில்லையாம் நயன்தாரா. சென்னையிலிருக்கும் அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள், இந்த பைட் மேட்டரை அவர் காதுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்களாம்.
ஆந்தையா கத்துறாரா, சாந்தமா நிக்குறாரா என்பது இரண்டொரு நாளில் தெரியும்!
To listen audio click below :-