பணமிருக்கு…ஆனா ஜே.கே.ரித்தீஷ் இல்ல!
கார் லாஞ்ச்சிங், டூ வீலர் லாஞ்ச்சிங் போன்ற கமர்ஷியல் லாஞ்ச்களை பார்த்தவர்களுக்கு நேற்றைய ‘லாஞ்ச்’ ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ‘திலகர்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் துருவா என்ற இளைஞரை லாஞ்ச் செய்தார்கள். தியேட்டர் கொள்ளாத கூட்டம், திடீர் திடீரென விசில் என்று துருவாவின் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்கள் அங்கே. வேறொன்றுமில்லை, இந்த துருவா ‘பார்ன் வித் கோல்டு ஸ்பூன்’ என்பதை தியேட்டருக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
அதற்காக ஜே.கே.ரித்தீஷ் லெவலுக்கு கற்பனை போக வேண்டாம். இவர் அடித்து துவைத்து பிசையப்பட்ட அக்மார்க் ஹீரோவாக இருந்தார் ஸ்கிரீனில். பெரிய இடத்து பையன். கார்லேயே சுத்திகிட்டு இருந்த பையன். நடிப்பு, உழைப்பு இதுக்கெல்லாம் இடம் தர்ற மன நிலை இருக்குமான்னு சந்தேகம் வந்திச்சு. தொடர்ந்து ஆறு மாசம் சைக்கிள்லதான் போகணும், வரணும்னு சொல்லிட்டோம். ஒரு சைக்கிளை எடுத்துகிட்டு சென்னை முழுக்க சுற்றினான். அப்புறம்தான் நடிக்கவே உள்ளே அழைச்சுகிட்டோம் என்றார் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். படத்தில் இவரும் ஒரு செமத்தியான ரோலில் நடித்திருக்கிறார்.
90 களில் நடக்கிற கதைதானாம் இந்த ‘திலகர்’. முக்குலத்தோரின் கதையை தேவர் மகன் படத்திற்கு பிறகு உருப்படியா யாரும் சொல்லல. அந்த வெற்றிடத்தை இந்த படம் நிரப்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் பெருமாள் பிள்ளை. இளம் வயது குற்றவாளிகள் இருக்கவே கூடாதுங்கறதுதான் இந்த கதையின் நோக்கம் என்றார் அவர்.
துருவாவை வாழ்த்த கே.பாக்யராஜ், விக்ரமன், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களும் வந்திருந்தார்கள்.
அமெரிக்காவில் படித்து, அங்கேயே கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த துருவாவுக்கு பெட்டி நிறைய கொட்டிக் கொடுக்குமா சினிமா. போக போக பார்க்கலாம்…!