பாலகாட்டு மாதவன்- விமர்சனம்
மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது தமிழ்சினிமா. ‘கொஞ்சம் ஏழை நடுத்தர மக்களோட வாழ்க்கையையும் எட்டிப்பாருங்கப்பா…’ என்று கை நீட்டி அழைக்கிறார் விவேக். குந்தாங்குறையா உட்கார்ந்து சிரிக்கவும், பொத்தாம் பொதுவா கவலைப்படுறதுக்குமான படம்தான் இந்த பாலக்காட்டு மாதவன்.
ஒரே ஆபிசில் வேலை பார்க்கும் சோனியா அகர்வாலும், விவேக்கும் கணவன் மனைவி. சோனியாவுக்கு இருக்கிற பொறுப்புகள் எதுவும் விவேக் விஷயத்தில் ஜீரோ! சீக்கிரத்தில் பணக்காரர் ஆக வேண்டும் ஆசைப்படுகிறார். இவர் போய் சேர்கிற வேலையெல்லாம் புஸ்சென்று சோகத்தில் முடிகிறது. ஒரு நாள் திடீர் அதிர்ஷ்டம்… முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட பணக்கார பாட்டி ஒருவரின் பெயரில் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை அம்மாவாக தத்தெடுத்துக் கொள்கிறார். அந்த அம்மா வீட்டுக்கு வந்த பின் வீடு என்னாகிறது. விவேக் என்னாகிறார் என்பது மீதி. தாய்மை மதிக்கப்பட வேண்டும் என்கிற உயர்ந்த தத்துவத்துடன் எண்ட்!
விவேக் வேலைக்கு ட்ரை பண்ணுவதே துண்டு துண்டு எபிசோட்களாக நீள்கிறது. அவ்வளவும் சிரித்து கும்மாளமடிக்க தகுந்தவைதான். அதிலும் மினிஸ்டர் பி.ஏ வாக வேலைக்கு போகிறார் விவேக். அங்கு அவருக்கு என்ன வேலை என்பது சற்று லேட்டாக தெரிய வரும்போது விவேக்குக்குஅதிர்ச்சியும், தியேட்டருக்கு வயிற்று வலியும் வருகிறது. ‘நான் ரொம்ப ஸ்ரிட்டு ஸ்ரிட்டு’ என்பது போலவே லுக் விடும் மினிஸ்டர் கயல் தேவராஜ் கூட சில காட்சிகள் வந்தாலும் சீரியஸ் முகம் காட்டி சிரிக்க வைக்கிறார்.
அதே விவேக், அதற்கப்புறம் ஷீலாவை தத்தெடுத்துக் கொண்டு வீடு வந்து சேரும் போது இன்னும் இன்னும் அலப்பறை! ‘இங்கே யாரோ வயலின் வாசிக்கிறாங்களே…’ என்று விவேக் ஷீலாவிடம் சொல்ல, ‘அது ஸ்ரீகாந்த் தேவாடா…’ என்று இவர் சொல்ல, நிமிஷத்தில் புரிந்து கொண்டு கைதட்டுகிறது தியேட்டர். இப்படி படம் நெடுகிலும் பழைய பட்டாசும், புது சரவெடியுமாக கொளுத்தி கொளுத்திப் போடுகிறார் விவேக். செல் முருகன் என்ற கப் அண்டு சாசரும் கூடவே திரிகிறதா. சமயங்களில் அன் லிமிடெட் மொக்கை ஜோக்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.
அவ்வப்போது மொசைக் இடுப்பை காட்டி, ‘நானும் யூத்துக்கு கொஞ்சம் மேலதான்’ என்கிறார் சோனியா அகர்வால். குடும்ப சோகத்தை முகத்தில் ஏற்றி வைத்த மாதிரி, சில காட்சிகளில் முகப் பொருத்தமும் அபாரம்.
அதுவரை அத்தனை பேர் பண்ணிய காமெடியையும் நாலு நிமிஷத்தில் வந்து காலி பண்ணிவிட்டு, நானே ராஜாவாகியிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். ‘என் பெண்டாட்டி ஒரு மாதிரி…’ என்று விவேக் சொல்ல, நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு, ‘அப்படியா… ஆசையா இருக்கு. கொஞ்சம் வரச் சொல்லுங்களேன் பார்ப்போம்’ என்று ராஜேந்திரன் துள்ளுவது அசைவ காமெடிதான் என்றாலும், அதிர்கிறார்களே ரசிகர்கள்? பெரிய பின்னணி பாடகர் என்ற நினைப்புடன் சுதி சேர்த்து அவர் பாடும் பாடலை கேட்க கேட்க இன்னும் இன்னும் என்று சிரிக்கிறார்கள்.
நடுநடுவே கிரேன் மனோகர், பக்காத்து மாமி என்று தட்டு நிறைய டபுள் மீனிங் ஐட்டங்கள்! ஏ ஜோக் பிரியர்கள் ஸ்பெஷல் அது.
பல வருஷங்கள் கழித்து திரையில் செம்மீன் ஷீலா! மீன் வற்றிப்போகவில்லை. அதே நேரத்தில் பாஷையில் நெளியும் மலையாள வாசனைதான் லேசாக இடிக்கிறது. வழி மறித்து அழைத்துச் செல்லும் பிள்ளைகள் சொத்துக்காகதான் அப்படி செய்கிறார்கள் என்று அவர் மனம் வருந்துகிற காட்சியும், அந்த நேரத்தில் விவேக்கின் நடிப்பும் எக்சலன்ட். இவருக்கு சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஒரு பாடல் காட்சி. அதுவும் ஃபாரினில். (ஏதேனும் குணச்சித்திரத்திற்கு போடுகிற ரூட்டா? புரியலையே! )
ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ஏற்கனவே கேட்ட மாதிரி. இருந்தாலும் இன்னும் ஒரு முறை கேட்கிற மாதிரியும் இருக்கிறது.
என்னமோ போடா மாதவா? என்று அலுத்துக் கொள்ளும்படி இல்லை.
-ஆர்.எஸ்.அந்தணன்
Very Good Movie