‘போகாதே… ’ ஹீரோயினை தடுத்த இயக்குனர்?
‘இயக்குனரின் பிடியில் நடிகை’ என்று இந்த செய்திக்கு தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேனை ருசிக்கிற நேரத்தில் தேங்கா மட்டையை நினைப்பானேன்? வேறொன்றுமில்லை, ‘பொறியாளன்’ படத்தின் ஹீரோயினும், பிரபுசாலமன் இயக்கி வரும் ‘கயல்’ படத்தின் ஹீரோயினும் ஒருவரே. பெயர் ரக்ஷிதா. இவர் அறிமுகமான படம் பொறியாளன்தான். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ரக்ஷிதா வரவில்லை. ஏன்? காரணம் பிரபுசாலமன்தான் என்று காதை கடித்தது பட வட்டாரம். இதை நாசுக்காக, தான் பேசும்போது சுட்டிக் காட்டிவிட்டும் போனார் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண்.
ஒரு பிளாஷ்பேக். ‘மைனா’ படம் வெளிவருவதற்கு முன்பே அமலாபால் நடித்த ‘சிந்து சமவெளி’ வந்துவிட்டது. ‘மருமகளின் இன்ப வெறி’ என்று தலைப்பு வைக்கிற அளவுக்கு அந்த படத்தில் அமலாவின் கேரக்டர் நாடெங்கும் போற்றப்பட்டது(?) இதில் பேரதிர்ச்சியான பிரபுசாலமன், கேரளாவிலிருந்த அமலாவை போனில் பிடித்து வறுத்து எடுத்ததுடன், தன் ‘மைனா’ பட பிரமோஷன்களிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அமலா வருவதற்கே தடை விதித்தார். ‘சிந்து சமவெளி’ படத்தோடு அவரது பழைய பெயருக்கும் மங்களம் பாடிவிட்டு அமலாபால் என்று புதுப்பெயரையும் சூட்டினார். ‘கட்….’ பொறியாளனுக்கு வருவோம்.
‘கயல் வெளிவருகிற வரைக்கும் உன் முகம் மீடியாவில் வரவே கூடாது’ என்று உத்தரவு போட்டிருக்கிறாராம் பிரபுசாலமன். அதனால்தான் ‘பொறியாளன்’ நிகழ்ச்சிக்கும் அவரை வரக்கூடாது என்று பிரபுசாலமன் தடைபோட்டதாக கவலை தெரிவிக்கிறது பொ.வட்டாரம்.
இனி ‘பொறியாளன்’ படம் பற்றி. பிரபல இயக்குனர் வெற்றி மாறன் வேறொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிற படம் இது. அவரது உதவி இயக்குனர்களான மணிமாறன் கதை வசனத்தை எழுத மற்றொரு உதவி இயக்குனரான தனு குமார் இயக்கியிருக்கிறார். சினிமாவில் பொறியாளர்கள் கல்லா கட்டுகிற காலம். அண்மையில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் பொறியாளர்தான். இந்த படத்தின் ஹீரோவும் படத்தில் பொறியாளராகதான் நடிக்கிறாராம். ஆச்சர்யம் என்னவென்றால், வேலையில்லா பட்டதாரி இயக்குனர் (என்று சொல்லப்படும்) வேல்ராஜ்தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு. நடுவில் சந்தேகம் வந்து இவரிடம் கேட்ட மணிமாறனிடம், ‘இதுவேற கதை, அது வேற கதை’ என்று ஆறுதலளித்தாராம் வேல்ராஜ்.
முகலிவாக்கம் சம்பவத்திற்கு பிறகு பொறியாளர்களை பொறி வைத்து கவனிக்கிறது உலகம்! ‘சேச்சே… இனிமே கலவையெல்லாம் கரெக்டா இருக்கும்ப்பா’ என்றும் நம்புகிறார்கள் சராசரி பொதுஜனங்கள். இந்த சினிமா பொறியாளனின் கலவை எப்படியிருக்கிறது, காத்திருப்போம்.. ரிலீசுக்கு இன்னும் கொஞ்சநாள்தானே இருக்கு?