இந்தா புடிங்க இன்னோவா கார்! இது கொம்பன் பரிசு!
இந்த வாரம் வந்த படங்களில் ‘கொம்பன்’ தாறுமாறான ஹிட்! ‘எதிர்ப்புகளை முறியடித்து’ என்றெல்லாம் விளம்பரங்களில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. நிஜத்தில் அப்படம் வெளிவருவதில் அவ்வளவு சிக்கல் இருந்ததைதான் இஞ்ச் பை இஞ்சாக உலகம் கவனித்துக் கொண்டிருந்ததே. மடி நிறைய கலெக்ஷன். மனசார சந்தோஷம் என்று தன்னை ஆளாக்கிய படைப்பாளிகளுக்கு உரிய மரியாதை செய்வதில்தான் இருக்கிறது படைப்பின் பெருமை என்று நினைக்கிறவர் ஞானவேல்ராஜா.
அதன் விளைவை இப்போது திகட்ட திகட்ட அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் முத்தையா. படம் வெளியான இரண்டாம் நாளே புத்தம்புது இன்னோவா காரை முத்தையாவுக்கு பரிசளித்திருக்கிறார் ஞானவேல்ராஜா. அதோடு விட்டாரா?
படத்தின் கேமிராமேன் வேல்ராஜை அழைத்தவர், பேசிய சம்பளத்தை பட வெளியீட்டுக்கு முன்பே செட்டில் செய்திருந்தாலும், மேலும் ஒரு பத்து லட்சத்தை அன்பளிப்பாக தந்தாராம். முதலில் இதை வேண்டாம் என்று மறுத்த வேல்ராஜ், ஞானவேல்ராஜாவின் வற்புறுத்தலுக்கு பிறகு வாங்கிக் கொண்டார். அதுவும் நல்லதுக்குதான். அந்த பணத்தை அப்படியே தனது உதவியாளர்கள், மற்றும் தனது மேனேஜருக்கு சரி பாதியாக பிரித்துக் கொடுத்திருக்கிறார்.
ஒரு வேல் இருந்தாலே அருள்தான். படத்தில் ஞானவேல், வேல்ராஜ் என்று இரண்டு வேல்கள். கொண்டாட்டமாக இருக்கிறது கொம்பன் ஏரியா!