புலி வரவேற்கப்பட வேண்டிய முயற்சியா? சில கேலிகள்… சில கேள்விகள்! – முருகன் மந்திரம்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும் சேதாரத்திற்கு உள்ளாக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதில் அரசியல் வேறு சேர்ந்துகொள்கிறது என்று கேள்விப்படுகிற தகவல் கண்டிப்பாக சினிமாவுக்கு ஆரோக்கியமானதென்று சொல்ல முடியாது.

அந்த வரிசையில் இப்போது புலி. புலி – வலி, கிலி, கேலி, ஜாலி, காலி…. என்று எதுகை மோனையோடு இடைவேளை நேரத்திலேயே வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கருத்துச்சொல்லி சமுக சேவை செய்து கொண்டிருக்கிறது, ஒரு பெரும் படை.

இன்னொரு பக்கம், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சிம்புதேவன், புலி மாதிரியான திரைப்படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்கிறார். நடிகர் ரஜினிகாந்த், “குடும்பத்தோடு குழந்தைகளோடு பார்க்கக்கூடிய படம் புலி. படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் புகழாரங்கள் சூட்டுகிறது, மற்றுமொரு கூட்டம்.

ஏற்ற, இறக்கம் என்பது எந்தத்துறையிலும் தவிர்க்க முடியாதது. அதிலும் சினிமாவில் ஏற்ற இறக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் பெரிது படுத்தமுடியாது என்ற அடிப்படையில்… புலி படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குநரும் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில், புலி படத்தை மிகவும் எள்ளி நகையாடுபவர்கள் மீது கோபம் கொண்டு சிலர், புலி படத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்வதையும் பார்க்க முடிகிறது.

சினிமா மற்றும் ஊடகத்துறையில் இல்லாதவர்கள் சோஷியல் மீடியாக்களில், படங்களை எள்ளி நகையாடுவதும், கிண்டல்கள் செய்வதும் மிக சாதாரணம் தான்… அதை இப்போதைக்கு ஒன்று செய்ய முடியாது, ஏன் எனில் அதே சோஷியல் மீடியாக்காரர்கள், அவர்களுக்கு பிடித்த படங்களை பாராட்டித்தள்ளவும் செய்கிறார்களே என்று எதிர்க்கேள்வியும் கேட்கிறார்கள். ஆனால், சில படங்கள், சினிமா மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களாலேயே பெரிதும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகும் நிலையில் மாட்டிக்கொள்வதை, எந்த அடிப்படையில் அணுகுவது என்பது புதிராகவே இருக்கிறது.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு தான் அதற்கு காரணம் என்று சொல்வதை, முழுவதுமாக அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய படங்கள், பெரிய பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட், பெரிய விளம்பர வகையறாக்கள், பெரிய பில்டப்கள்… என்று மாதக்கணக்கில் அந்தப்படங்களைப்பற்றிய எதிர்பார்ப்பு ஏதோ ஒரு வகையில் கூடிக்கொண்டே செல்கிறது.

அப்படி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிற திரைப்படங்கள், ஆஹா, ஓஹோ என பிரமிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அனுபவமாக இல்லை என்றாலும், “பரவாயில்லை” என்று கூட சொல்ல முடியாத அளவுக்குத்தான் இருப்பதாக அவர்கள் நினைக்கும்போது… (அவர்கள் / தனிமனிதர்கள் / ரசிகர்கள்) அந்த படங்களைப்பற்றிய எதிர்மறையான கருத்துக்களை, கிண்டல்களை, அள்ளி வீசி நேரடி சித்தாய்ப்புகளையும் சிராய்ப்புகளையும் செய்ய முற்படுகிறார்கள்.

அந்த வகையில் புலி திரைப்படமும் நிறையவே கிண்டல்களையும் கேலிகளையும் வெளியான முதல்நாளின் நண்பகலுக்குள் சந்திக்க ஆரம்பித்து விட்டது. அது தொடர்ந்துகொண்டேஏஏஏ…… இருக்கிறது.

புலி திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சியா? என்றால்… ஆம் கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய முயற்சி தான். சிறு வயது முதல் அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், சிறுவர் மலர், வார மலர்…. விக்கிரமாதித்தன் கதைகள், வரலாற்று புதினங்கள்…. இன்னும் பலவற்றின் வாயிலாக அறிந்த மாயாஜால, மந்திர, தந்திரக்கதைகளை இன்றைய குழந்தைகள் ரசிக்கும் திரைப்படங்களாக மாற்றும் முயற்சி என்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய முயற்சி தான்.

இந்திய மாயாஜாலக்கதைகள், மேற்கத்திய நாடுகளின் கதைகளை விட மிக மிக சுவாரஸ்யமானவை… என்பதை இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகுக்கே உணர்த்திய படம், “அவதார்”.

புராணங்களாலும், இதிகாசங்களாலும், காப்பியங்களாலும் இந்திய புராண/கலை/கலாச்சார/கதை மரபில் இருந்து எவ்வளவோ படைக்க முடியும். அப்படி இந்திய குழந்தைகள் கவரும் கதைகளின் அடிப்படையில், வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சிதான், புலி திரைப்படம்,

மாயக்காடுகள், மாய மலைகள், மாய அரக்கர்கள், மாய விலங்குகள், பேசும் பறவைகள், பேசும் விலங்குகள், ரகசிய வழிகள், வழியெங்கும் பேராபத்துகள், வரங்கள், தவங்கள், யாகங்கள், சாபங்கள், சாபவிமோச்சனங்கள், விசித்திரங்கள், விசித்திரக்குள்ளர்கள், காட்டு மனிதர்கள், ஆள் அண்ட முடியாத பெரும் கோட்டைகள், நரபலி, மந்திரக்கோல், மந்திரக்கண்ணாடி, மந்திர மோதிரம், அதிசய சக்தி, அமானுஷ்ய சக்தி, இப்படி இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்…. இந்தப்பட்டியலில் உள்ளவற்றைக்கொண்டு ஒரு பொழுதுபோக்கு, படம் என நினைத்த வகையில், புலி, வரவேற்கப்பட வேண்டிய முயற்சி தான். அதுவும் பெரிய சந்தை மதிப்பு உள்ள நட்சத்திர நடிகர் விஜய்யை வைத்து இப்படி ஒரு கதை சொல்ல நினைத்திருப்பது மகிழ்வானது தான். அந்த வகையில் கண்டிப்பாக புலி, திரைப்படமும் சிம்புதேவனும் வரவேற்கப்பட வேண்டியவர்கள் தான்.

ஆனால், அந்த முதல் முயற்சியே, தமிழ் சினிமா வணிகத்தில் இனிமேல் இதுபோன்ற ஃபேன்டசி முயற்சிகளுக்கான அனைத்து வாசல்களையும் அடைத்துவிட்டதோ… என்று எண்ணும்போதுதான்… அந்த முயற்சி பற்றி விலாவாரியாக யோசிக்க வேண்டி இருக்கிறது. விவாதிக்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே இந்த வரிசையில் அங்குமில்லாமல், இங்குமில்லாமல் ஊசலாடிய செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனையும் இரண்டாம் உலகத்தையும் எடுத்துக்காட்டுகிறார்கள் முதலீட்டாளர்களும் தயாரிப்பாளர்களும். ஆக, பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியைத் தவிர வேறு யாராவது இதே மாதிரி கதை வைத்திருக்கிறேன் என்றாலே… மறுபேச்சு பேசாமல் போயிட்டு வாங்க ராசா, அதெல்லாம் வேலைக்காகாது என்றே அனுப்பிவைக்கப்படுவார்கள்.

எப்படிப்பட்ட திரைப்படமாக இருந்தாலும், கதை, திரைக்கதை, அதன் பின் அந்த திரைக்கதையை காட்சிகளாக கண்முன்னே நிறுத்துகிற, மேக்கிங், படைப்புத்திறன்… படைப்பியல்… இவை சரியாக அமைந்தால் மட்டுமே ரசிகன் தன்னை மறைந்து, படத்தின் நிறைகுறைகளை மறந்து ஒரு திரைப்படத்தை ரசிப்பான்.

அந்த வகையில் புலியின் கதையும் உருவாக்கமும்…. ரசிகர்களை திருப்தி படுத்தாத வகையில் அமைந்துவிட்டது.

அடிமைகள் ஆக்கப்பட்டவர்கள், ஆதிக்கக்காரர்கள்…. அடிமை மக்களில் இருந்து பொங்கி எழும் ஒரு புரட்சியாளன்… சாகசங்களும் சுவாரஸ்யங்களும் இழப்புகளும் வலிகளும் தந்திரங்களும் புத்திசாலித்தனங்களும் நிறைந்த பெரும் போர், கடைசியில் புரட்சியாளனின் வெற்றி… மக்களின் வெற்றி… நீதியின் வெற்றி… நன்மையின் வெற்றி….

மகாபாரதக்கதைகளில் இருந்து தனிஒருவன் கதை வரை இதுதான் இந்த வகை கதைகளின் சூத்திரம். ஆனால், புலியின் கதை ஆரம்பம் என்னவோ இந்த அடிப்படையில் இருக்கிறது. அதன்பின் அந்தக்கதையை, கதை ஆரம்பித்த வைரநல்லூரில் அப்படியே விட்டுவிடுகிறார்கள்…. அதன்பின் புலியின் கதை, வேதாளக்கோட்டையின் கதையாகி விடுகிறது…. இங்கே தான் கதையின் ஆணிவேரே ஆட்டம் காண்கிறது. எப்படி?

வேதாளர்கள் என்றாலே… அவர்கள் மனிதர்கள் அல்ல, மனிதர்கள் அல்லாத வேறு ஒரு இனத்தவர்கள், மனிதர்களுக்கு எதிரானவர்கள், மனிதர்களை கொடுமைபடுத்துவர்கள், அடிமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்பவர்கள் என்று படத்துவக்கத்தில் பிரமாதமாக கதை சொல்லி ஆரம்பித்துவிட்டு… வேதாளர்களை எதிர்க்க மனிதகுலத்தில் இருந்து ஒரு புரட்சியாளனை செம ஸ்டைலாக(????) அறிமுகப்படுத்திவிட்டு…. கடைசியில் அந்த புரட்சியாளனே… வேதாளர்களில் ஒருவன் தான், அதுவும் அந்த புரட்சியாளன் வேதாளர்கள் இனத்தின் ராஜ வாரிசு…. வேதாளர்கள் நல்லவர்கள்…. என்று கயிறு திரிக்கும்போது கதையும் திரிந்து போகிறது. இந்தக்கதையை வைத்துக்கொண்டு எப்படி திரைக்கதை செய்தாலும் அது இந்த வழியில் தான் பயணிக்கும்…. ஆக கதை???? திரைக்கதை????!!!!!

அடுத்தது, படைப்பியல். கதை, கதையின் காலம், கதைக்களம், கதை மாந்தர்கள், அவர்களின் குணச்சித்திரங்கள், அந்தக்கால வாழ்க்கை முறை… போன்றவற்றை சித்தரிப்பதில் நேர்மையும் நேர்த்தியும் இல்லை என்றால் அந்தக்கதைகளின் மீதான ரசிகனின் நம்பகத்தன்மை என்பது பெரும் கேள்விக்குறியாகி விடுகிறது.

உதாரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை என்று விவரிக்கும்போது, அந்தக்காலமும் அந்த மனிதர்களின் உடையும், அவர்களின் கலாச்சாரமும் அவர்களின் மொழியும் கால்வாசி அளவுக்காவது திரையில் வெளிப்பட முயற்சி செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் காலம், இராஜாக்கள் காலம் என்றாலே, நாம் பெரிதும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று அவர்கள் பேசும் மொழி, சிம்புதேவனின் மகா மெகா ஹிட் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசியின் வெற்றிக்கு, அந்த படத்தின் கதாபாத்திரங்கள் பேசிய மொழி பெரும் பலமாக அமைந்து இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே சிம்புதேவனின் புலி படத்தில்….. பல்லாண்டுகளுக்கு முன்னாடி நடக்கிற கதையின் கதை மாந்தர்கள் இன்றைய பேச்சுமொழியை இம்மி பிசகாமல் பேசும்போதே, ரசிகனின் நம்பகத்தன்மையும் எதிர்பார்ப்பும் எதிர்த்திசைக்கு சென்றுவிடுகிறது.

அதிலும் கதாநாயகன் விஜய்யின் மொழியும் அவர் அதைபேசும் ஸ்டைலும்…. ஒரு பீரியட் படம் பார்ப்பது போன்ற உணர்வை தந்துவிடக்கூடாது என்ற பாதகமான வேலையை தெள்ளத் தெளிவாக செய்திருக்கிறது.

விஜய் என்பவர் என்னதான் பெரிய மாஸ் நடிகர் என்றாலும், சில நிமிடங்களுக்கு முன் பியூட்டி பார்லருக்கு போய்விட்டு வந்தவர் போல ஸ்டைலான தலைமுடி, மீசை, தாடி…. என்று திரையில் தோன்றும்போது அந்தக்கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மையும் கம்பீரமும் குறைவதோடு பார்ப்பவர்களுக்கு காமெடியாகவும் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

அதோடு விஜய் போடுகிற ஆடைகள் எல்லாம் ரொம்ப ரொம்ப பேண்டசியாக இன்றைய ஃபேஷன் டிசைனர்களை வைத்து உருவாக்கி விட்டு, அதுதான் கதை நடக்கும் காலத்தின் உடை என்று ரசிகனை நம்பவைக்க முடியவில்லை என்பதும் இன்னொரு பலவீனம். அதே நிலை தான் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப்…. போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் பளீச் பளீச்…. உடை அலங்காரங்கள் விஷயத்திலும். ஃபேன்டசி படங்கள் என்றாலும் கொஞ்சமாவது கதை நடக்கும் காலத்திற்கு பொருந்த வேண்டுமே.

நடை, உடை, பாவனைகளாவது பரவாயில்லை…. போனால் போகிறதென்று விட்டு விடலாம். கதாபாத்திரச் சித்தரிப்பு…. அதைவிட காமெடியாக இருக்கிறது. வேதாளர்களிடம் ஒரு கை வெட்டுப்பட்டு, மகளையும் பறிகொடுத்த அப்பா, அந்த சொரணையே இல்லாமல் மகனின் காதலுக்காக நாடகம் போடுகிறார்.

மகன் அதை விட கொஞ்சம் மேலே போய், காதலிக்கும் பெண்ணின் வீட்டுக்கு போய், அவர்களின் அப்பா, அம்மாவிடம்… குளிர்காலமா இருக்கு… உங்க மகளை கொஞ்சம் அனுப்பி வைங்க….. அனுபவிச்சிட்டு வரேன் என்கிறார்.

சரி இவர் இப்படி என்றால், இவர் காதலிக்கும் பொண்ணு…. அய்யய்யோ ரகம்… என் மகள் என்னைக் கேட்காமல் வாசல் தாண்டி வரமாட்டாள் என்று…. அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே…. காதலனுடன் குதிரையில் ஏறி உட்கார்ந்து கட்டிப்பிடித்துக்கொண்டு…. அப்பா எப்போதும் நான் உங்கள் பேச்சை மீற மாட்டேன்…. பின் வாசல் வழியாகத்தான் வந்தேன் என்கிறாள்.

இந்த கற்கால (?!)]ஹைடெக் காதலன் மற்றும் காதலியின் அப்பாக்கள் ஊர்ப் பெருந்தலைகள்…. என்பது கூடுதல் செய்தி.

தம்பி ராமையாவின் முதலிரவு காமெடியை, ரஜினி நடித்த மாப்பிள்ளை படம் உள்பட எத்தனையோ படத்தில் பார்த்தாயிற்று. ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தை, அவரது மாப்பிள்ளை தனுஷ் நடித்தும் பார்த்தாயிற்று.

நம் முப்பாட்டன் காலத்து கதைகள் என்றாலே, கம்பீரமான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து வருபவர்கள்… இவர்கள் அடிக்கிற கூத்தை பார்த்ததும்.. ச்சீ… என்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இத்தனைக்கும் இது குழந்தைகளுக்கான படம் என்ற பிரச்சாரம் ஒரு பக்கம்.

லொகேஷன்…. எனப்படுகிற படப்பிடிப்பு பகுதிகள்… இங்கேயும் அதே நிலை தான்…. சில நூறு வருடங்களுக்கு முந்தைய கதை, என்பதால் அவதார் போல ஒரு இயற்கை அழகை கற்பனை செய்து கொண்டு தியேட்டருக்குள் செல்கிறவர்கள்… ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள். கொஞ்சூண்டு அழகாய் தெரிகிற இடங்கள் அத்தனையும் கணினி கிராபிக்ஸ் மயமாக இருக்கிறது. எத்தனையோ அழகழகான மலைப்பிரதேசங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கிறது.

பிரபுசாலமனின் மைனா, கும்கி, கயல்… மற்றும் எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை படங்கள் அளவுக்குக்கூட இயற்கையான இயற்கை அழகை பார்க்கமுடியவில்லை என்பது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்பதை விட வருத்தமான சங்கதிதான்.

ஆனாலும், படத்திற்கு அந்த குள்ளர்கள் ஏரியா கொஞ்சம் குதூகலம் கூட்டுகிறது. ஐன்ஸ்டீன் காமாட்சி, பிளெமிங் சுந்தரி… என பெயர்களை சொல்லும்போதே குஷியாகிவிடுகிறார்கள் குழந்தைகள். இமான் அண்ணாச்சியும், ரோபோ சங்கரும் புலியின் ஆபத்பாந்தவர்கள்…. அவர்களின் உருவமும் பேச்சும் ரசிக்கமுடிகிறது.

ஃபேன்டசி படத்தில், வேதாளர்களின் உருவம்… மனிதர்களைப்போலவே அச்சு அசலாக இருப்பது எந்த சுவாரஸ்யத்தையும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஏற்படுத்தவில்லை. வெறுமனே இரண்டே இரண்டு பொடிப்பற்களும் நீலக்கண்களும் போதும் என்று நம்பியது மிகப்பெரிய பலவீனம். அந்த சின்னப்பற்களை காட்டுவதற்காக அவர்கள் வாயைத்திறப்பதையெல்லாம்…. எந்த வகை ஃபேன்டசியில் சேர்த்துக் கொள்வதென்று விளங்கவில்லை. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் இயக்குநர் செல்வராகவன், கதாபாத்திரங்களின் தோற்ற சித்தரிப்பில் சிம்புதேவனை விட பலமடங்கு நல்லவராகி விடுகிறார்.

மலைகளுக்கு நடுவில் நாற்புறமும் நீர்நிலைகளுக்கு மேல் உயர்ந்த பாலங்களையே வழிகளாகக் கொண்ட வேதாளர்களின் கோட்டை அமைப்பும், அதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியோடு காட்டியுள்ள விதமும், பிரமிக்க வைக்கிறது. இதுபோல பேசும் பறவை, பேசும் பிரமாண்ட ஆமை, சங்கேத வாக்கியங்கள், ஒற்றைக்கண்ணன், குள்ளர்கள் இனம்… என படத்தின் சுவாராஸ்யத்தை கூட்டுவதற்கு ஏதுவாக பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது.

அத்தனை இருப்பினும், அழுத்தமில்லாத கதை, திரைக்கதை, படைப்பியல்…. காரணங்களால் புலி… பெருமளவு நையாண்டிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது தினம் தினமும்.

விஜய்யின் அடுத்தபடம் வெளியாகும் வரை, புலியை விடமாட்டார்கள்… புலியின் தோலை உரித்து துவைத்து தொங்கவிட்டு காயவைத்து… மீண்டும் துவைப்பார்கள்.

தமிழ் இயக்குநர்கள்.. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, திறமையான கலைஞர்களை உடன் வைத்துக்கொண்டு, சிறிது அதிக காலம் எடுத்து… முதலில் கதை, மற்றும் திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும். ஹாலிவுட் படங்கள் போல 100 சதவீதம் பேப்பரில் தெளிவாக இல்லை என்றாலும் கால்வாசி அளவுக்கேனும் சிரத்தை எடுக்கவேண்டும். பட்ஜெட் பல கோடிகள் என்று வரும்போது, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்களை மட்டுமே நம்பாமல் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகளுடன் சிறப்பு விவாதங்களையும் மேற்கொள்ளலாம்.

அதோடு, இதுபோன்ற கதைகளில் நடிக்கும் விஜய் போன்ற நடிகர்கள்…. ஈகோ, இமேஜ் எல்லாம் பார்க்காமல்… 16 வயதினிலே கமல் போல, சேது விக்ரம் போல… கதையின் நாயகர்களாக மாறிவிடவேண்டும். கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தால்… படத்தின் திரைக்கதை எழுதிய பக்கங்களை விட, பல மடங்கு அதிக பக்கங்களில் கலாய்க்கப்படுவதில் இருந்து தப்பவே முடியாது என்பதே உண்மை.

-முருகன் மந்திரம்

5 Comments
  1. Arunan says

    PULI ALL TIME FLOP MOVIE.

  2. C Balachandar says

    என்னங்க இது.. பத்திரிக்கைக்காரங்களான நீங்களே இதைப் போய் புதிய முயற்சின்னு கதை விடுறீங்க… நாம சின்னக் குழந்தைகளா இருக்கும் போதே மாயாபஜார், ஜெகன்மோகினி, குலேபகாவலி, பட்டணத்தில் பூதம் (ஜீ பூம்பா எனும் வார்த்தை இன்றும் பிரபலம்) லக்கிமேன், ரஜினியின் அதிசயப் பிறவி, 23ம் புலிகேசி, அலாவுதீனின் அற்புத விளக்கு, அலிபாபாவும் 40 திருடர்களும் என லிஸ்ட் பெரிசா இருக்கு பிரதர்.. எழுத இடம் கிடைச்சா, எவனோ ஒருத்தன் ஆரம்பிச்சான், தமிழுக்கு இது புது முயற்சின்னு.. எல்லாரும் கண்ணை மூடிட்டு எழுதறீங்க.. விஜய்க்கு மட்டும்தான் புது முயற்சி.. சிம்பு தேவனுக்கு கூட இல்லை.. படிக்கிறவங்களை முட்டாளாக்காதீங்க..

    1. Dandanakka says

      Good Point Mr. C Balachandar. Director failed in all genre’s. All casts of the film not realized what we are doing. Sources said Vijay & his family interrupted the script & making.

  3. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    1. ஒரு spoof கதய பேண்டசி கதைன்னு விஜய வேணா சிம்புதேவன் ஏமாத்தலாம்.
    2. ஒரு பேண்டசி கதைன்னு ரசிகர்கள முட்டாளாக்க நினைச்சா அது spoofனு அவங்க கண்டுகிட்டாங்க.
    3. அப்புறம் சிம்புதேவன், சராசரி ரசிகன் விஜைனாவின் வாக்கப்பட்ட அடிமைகள் போல குறைந்தபட்ச அறிவுடன் இருப்பார்கள் என நீங்கள் கருதினால், நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள உயர்ந்த அபிப்பிராயத்தின் உயரத்தைத் தொட இன்னும் நிறைய உழைக்க வேண்டும்.

  4. Kalaiselvan says

    புலி செத்து 10 நாள் ஆகி விட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சமாதான அழைப்பை நிராகரித்த விஷால்! தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைகுனிவா?

எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும்,...

Close