அப்போலோ சென்று முதல்வர் ஜெ-வின் உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி!
ரஜினியின் எல்லா மூவ்களும் அரசியலாக்கப்படுவது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா தெரியவில்லை. ஆனால் அரசியலாக்கப்படுவதற்கு மிக சரியான விஷயம் ஒன்றை மிக எளிதாக அணுகி விட்டு சென்றிருக்கிறார் ரஜினி. அதுதான் முதல்வர் ஜெ.வை சந்திக்க இன்று அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு. எங்கு போனாலும் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று வரும் ரஜினி, இப்போதும் அப்படியே வந்திருந்தார்.
கடந்த சில நாட்களாகவே அவர் முதல்வரின் உடல் நலன் குறித்து விசாரிக்க அப்போலோ வருவதாக பேசப்பட்டு வந்தது. செய்தியாளர்களும் அவரது வருகைக்காக காத்திருந்தார்கள். ஆனால் இன்று மாலை சுமார் 6.15 மணியளவுக்கு (ஞாயிற்றுக் கிழமை) வந்தார் அவர். மருத்துவமனையை விட்டு வெளியேறிய போதும் கூட மீடியாக்களிடம் பேச்சு கொடுக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினி, அதற்கப்புறம் மருத்துவமனைகளுக்கோ, வேறு எந்த நிகழ்வுகளுக்கோ செல்வதை வழக்கமாக கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, 2,0 படப்பிடிப்பிலும் கூட, ரஜினிக்காக அந்த படப்பிடிப்பு ஏரியாவே படு தூய்மையாக வைக்கப்பட்டு வருகிறது. ரஜினியின் ஹெல்த் பாதுக்காப்புக்காகதான் இத்தனை ஏற்பாடுகளும். ஆனால், முதல்வர் விஷயத்தில் தனது கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டுதான் அவர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.
இவருக்கும் அவருக்கும் பல நேரங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், ரஜினி கொடுத்தது நட்புக்கு மரியாதை!