அஞ்சலிக்கு தடை! தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அதிரடி முடிவு
கோட் சூட் போடாத கோபியாக ‘நீயா நானா?’ யுத்தம் நடத்திக் கொண்டிருந்த மு.களஞ்சியத்திற்கு முதல் ஆறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சியில் மைக்கை பிடிக்கும் அவர், ‘இங்க தமிழ்சினிமாவில் அத்தனை சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சங்கமும் என் விஷயத்தில் உதவவில்லை’ என்று கவலைப்பட்டு கண்ணீர் சிந்திக் கொண்டேயிருந்தார். அதற்கு ஓரளவுக்கு ஒரு ஆறுதல் கிடைத்துவிட்டது.
அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் அஞ்சலி நடித்துக் கொடுக்காதவரைக்கும் அவரை யாரும் தமிழ் படங்களில் நடிக்க அழைக்கக்கூடாது என்று தன் சங்க உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம். செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தலைவர் விக்ரமன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் அஞ்சலி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘எனது பிரச்சனைகள் எல்லாமே முடிந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் தைரியமாக என்னை நடிக்க வைக்கலாம். எந்த பிரச்சனையும் இனிமேல் வராது’ என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து தமிழிலிருந்து மூன்று இயக்குனர்கள் அஞ்சலியை தொடர்பு கொண்டு தங்கள் படத்தில் நடிக்க அழைத்தார்களாம்.
இந்த தகவலை இயக்குனர் சங்கத்தின் காதுகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார் மு.களஞ்சியம். யார் யார் அந்த இயக்குனர்கள் என்றும் கூறியிருக்கிறார். அதை தொடர்ந்துதான் இப்படியொரு முடிவு. தமிழ்ப்பட இயக்குனர்கள்தான் இப்படியொரு தீர்மானம் போட்டிருக்கிறார்களே தவிர, வேறு மொழியில் நடிக்க அஞ்சலிக்கு தடையில்லை. எனவே அஞ்சலியின் ‘தமிழ்ப்பட விசா தடை காலம்’ இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அவரது ரசிகர்களுக்கு கவலைக்குரிய செய்தி.
இப்படியே தடை நீடித்தால், அஞ்சலி ‘அவ்வையார்’ படத்தின் ரீமேக்கில்தான் ஹீரோயினாக நடிக்க முடியும் போலிருக்கிறது!