அவளுக்கு அது, முன்னெச்சரிக்கையோ, பின்னெச்சரிக்கையோ… ஆனா, எனக்கு அது வயித்தெரிச்சல்! -முருகன் மந்திரம்
வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 3
“சினிமாக்காரிகள்” என்ற வார்த்தைகாகவும்… சினிமாக்காரிகள் வரலாறுகளின் விளிம்புகளை உரசும்போது… தவிர்க்கமுடியாமல் உச்சி முதல் பாதம் வரை அவர்களின் உடலையும், அழகையும்… என் வார்த்தைகள் உரசிச்செல்வதாலும்… சில கவன ஈர்ப்பு தீர்மானங்களும், பல கண்டன ஈர்ப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு என்னை வந்து சேர்ந்தது. எச்சரிக்கையின் கடைசிப்பிள்ளை சாயலில் இருந்த அந்த தீர்மானங்களின் அன்பிற்கு என் நன்றிகள். அக்கறைக்கு என் வணக்கங்கள்.
அறிவியல் மாதிரி… அரசியல் மாதிரி… உடலியலும் பிறப்பிற்கும் இறப்பிற்குமான இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னணி இயல். முதல் இயல் என்று சொன்னாலும் தப்பில்லை. கூடுதலாக பேசுவதாய் இருந்தால்… அந்த அறிவு இயலை… அந்த அரசு இயலை… பல காலகட்டங்களில் இந்த உடல் இயல் தான் தீர்மானித்திருக்கிறது, திசை மாற்றி இருக்கிறது, தான் விரும்பிய தீர்ப்பை எழுதிக் களித்திருக்கிறது.
மூன்றாம் பாகத்தை எழுதுவதற்காக இரண்டாம் பாகத்தை ஒருமுறை எட்டிப்பார்த்தேன். கொஞ்சம் தள்ளிநின்று தான் எட்டிப்பார்த்தேன். நெஞ்சு நிமிர்த்தி கண்கள் பனித்து ஒரு அசட்டுப் பெருமிதத்தோடு எனக்கு நானே கைதட்டிக் கொண்டேன். தற்புகழோ….? இருந்துவிட்டுப் போகட்டும். அந்தப்பெருமையை சில்க்கிற்கு சமர்ப்பிக்கிறேன்.
கதைச்சுருக்கம் போல சில்க்கின் சினிமா வரலாற்றை சின்னதாய் சுருக்கி எழுதிவிட்டேன் என்ற நினைப்பும் நெகிழ்வுமே அந்த தற்புகழ்ச்சிக்கு காரணம். நன்றி சில்க். நன்றி அந்தணன் அண்ணன். முன்னவர் இந்த கட்டுரையை படைக்கவும், பின்னவர் இந்த கட்டுரையை பரப்பவும் காரணமாய் அமைந்ததால்.
அக்கா ரேவதி… கூடவே அந்த அக்காவோடு எனக்கு ரொம்ப பிடித்த சினிமாக்கார அக்கா… சுகாசினி. இந்த அக்காக்களை பற்றி அசை போடுவதற்கு முன்னதாக… எனக்குத் தெரிந்த இன்னொரு சினிமாக்கார “அக்கா” பட்ட பாட்டை, கூடவே இருந்து பார்த்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறேன்.
அவளை, “அவ”ன்னு சொல்லித்தான் பழக்கம். கண்டிப்பாக என்னை விட சின்னப்பொண்ணுதான். அதனால, அவளை, அவள் என்றே குறிப்பிடுகிறேன். மதுரைக்கு பக்கத்தில் ஒரு ஊரில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய படம் அது.
அந்த படத்தின் ஹீரோயின் என்னை “அண்ணா” என்று தான் அழைப்பாள். அவளுக்கு அது முன்னெச்சரிக்கையோ பின்னெச்சரிக்கையோ… ஆனா, எனக்கு அது வயித்தெரிச்சல். அது அவளுக்கு தெரியாம இருக்காதுன்னு நெனைக்காதீங்க. நல்லாவே தெரியும்… எல்லாம் ஒரு பாதுகாப்பு தான். சரி “அங்கிள்”னு கூப்பிடாம இருக்கிறது வரை சந்தோசம்னு நெனைச்சிக்கிட்டு வேலையை பார்ப்பேன்.
அந்த படப்பிடிப்பு முழுதும்… ஆயிரம் தடவை என்னை அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு என் வயித்தெரிச்சலைக் கொட்டி இருப்பா அவ… ஆனா, சில தடவைகள் மட்டும் அவ அண்ணன்னு என்னை கூப்பிட்டப்போ… என் வயித்தெரிச்சலை எல்லாம் வானத்தையே பரணா நெனைச்சி அதுக்கு மேல தூக்கி போட்டுட்டு… அன்போட அவளைப் பாத்திருக்கேன்.
அன்னைக்கு மத்தியான வெயில் கொளுத்தோ கொளுத்துன்னு கொளுத்துது. அந்த வெயில்ல, மான்டேஜ் காட்சிகள் அவளை படுத்தோ படுத்துன்னு படுத்துது. டைட்டா பட்டுப்பாவாடை சட்டை. சுத்தி ஒரே கூட்டம். வேர்த்துக்கொட்டுற வேதனை… டைரக்டர் ரெடி.. ரெடி…ன்னு சொல்லிட்டே இருக்கார். ஆனா அவ ரெடி இல்ல. காரணம் வியர்வை.
மேக்கப் போட்ட அண்ணன் பேரு மறந்திருச்சி… அந்த ஹீரோயின், மேக்கப் அண்ணணுக்கு வசதியா அசைஞ்சு கொடுத்திட்டிருக்கா. அவர், முகம், நெற்றி, மூக்கு, உதடு, கன்னம், கழுத்து, மார்புக்கு மேல சட்டை மறைக்காத இடம் ஒண்ணு விடாம எதையோ வச்சு தொடைக்கிறார். அப்புறம் பின்னாடி முதுகை தொடைக்கிறார். கலைஞ்ச மேக்கப் லைட்டா டச் பண்றார். அம்பது அறுபது பேர் இருப்பாங்க அந்த எடத்துல… சலனமே இல்லாம நிக்கிறா அவ.
நானெல்லாம் “பக்கா” கிராமத்துக்காரன். ஹீரோயினை தொட்டுப்பேசுற உரிமை ஹீரோவுக்கு மட்டுந்தான் உண்டுன்னு அநியாயத்துக்கு நியாயம் பேசுற கூட்டத்தில ஒருத்தன். சில நேரங்களில் அந்த ஹீரோவே லைட்டா எல்லை தாண்டும்போது பொறாமையில பொசுங்கி… சாபம் விடுற சங்கத்து செயலாளரா சிலுத்துக்கிறதெல்லாம் உண்டு.
அட நம்ம நெனைப்பெல்லாம் எவ்ளோ கத்துக்குட்டித்தனமா இருந்துருக்குன்னு நெனைச்சிக்கிட்டே அவளைப் பார்க்கிறேன். யார் பெத்த புள்ளையோ…? யார் பெத்த புள்ளையா இருந்தா என்ன.. சினிமான்னு வந்துட்டா இதெல்லாம் செஞ்சு தானே ஆகணும்கிற யதார்த்தம் புரியுது.
அவ, “அண்ணா ரெடின்னா, போலாம்”னு சொல்றா. ( எங்கேன்னு கேட்காதீங்க. அது சினிமா மொழி, நான் ரெடி. டேக் போலாம்னு அர்த்தம்.) டைரக்டர் கிட்ட சார் ரெடின்னு சொல்றேன். ஆனா நெனைப்பு அங்க இல்ல.
அப்புறம், அதே நாள்ல ஒரு பெரிய மாமரத்தடியில இன்னொரு காட்சி எடுத்தோம். காதல் காட்சி. ஹீரோ படுத்திருப்பார். கால்மேல கால்போட்டு, ரெண்டு கையையும் தலைக்கு தலையணையா வச்சி மல்லாந்து படுத்திருப்பார். ஹீரோயின், ஹீரோவின் மார்பில் தலை வச்சி அதே மாதிரி மல்லாந்து படுத்தபடி வானம் பாத்து பேசிக்கிட்டே காதல் பண்ணணும். அதான் டைரக்டரோட ஃபீல்.
சுத்தி அந்த ஊர் மக்கள் இந்தக் காதல் காட்சியை ஒருவிதமான குசும்புச் சிரிப்போட பாத்துட்டு நிக்கிறாங்க.
முதல்ல ஹீரோவை படுக்க வெச்சாச்சு. அதுக்கப்புறம் வாம்மான்னு ஹீரோயினை கூப்பிட்டு ஹீரோ மார்புல மல்லாக்க படுச்ச வச்சாச்சு. ஒரு டேக்கும் எடுத்தாச்சு. ஆனா, டைரக்டர் எந்த ஆங்கிள்ல என்ன ஃபீல் பண்ணாரோ தெரியல… ஹீரோ மாதிரியே ஹீரோயினும் காலுக்கு மேல கால் தூக்கி போட்டா யூனிபார்மா, அழகா இருக்கும்னு நெனைச்சிட்டார். மைக்ல அவளைக் கூப்பிட்டு… நீயும் ஹீரோ மாதிரியே கால்மேல கால் தூக்கி போட்டுக்கமான்னு சொல்லிட்டார்.
அட ஆமால்ல… ரெண்டு பேரும் ஒரே மாதிரி போஸ் பண்ணா நல்லாத்தானே இருக்கும்னு நெனைச்ச மறுநிமிஷம் அந்த ஹீரோயின் “முருகண்ணா இங்க வாங்க”ன்னு கூப்பிட்டா.
நான் கை நெறைய மாமர இலைகள் வச்சிருக்கேன். என்னை மாதிரி இன்னும் சில உதவி இயக்குநர்களும் வச்சிருக்காங்க. டேக்ல ஹீரோ ஹீரோயின் மேல தூவுறதுக்குத்தான். அதாவது படம் பாக்கிறவங்களுக்கு மரத்து மேல இருந்து இயல்பா இலைகள் விழுந்துட்டிருக்கிற மாதிரி தெரியணும்ல அதுக்குத்தான். (ஆனா, நாங்க தூவுன… சாரி… வீசுன இலையெல்லாம் துப்பாக்கில இருந்து தோட்டா பறக்கிற வேகத்துல அவங்க மேல போய் விழுந்தது தனி காமெடி.)
சரின்னு… அந்த இலைகளோட அவ பக்கத்துல போனேன். ஹீரோ மேல படுத்திருந்தவ, எந்திரிச்சி, அவ கால் நீட்டியிருந்த திசையில நின்னு வேடிக்கை பாக்கிறங்களை காட்டி… “அண்ணா, அந்தப்பக்கம் நிக்கிறவங்களை எல்லாம் கொஞ்சம் இந்த பக்கம் வரச்சொல்லுங்கண்ணா”னு சொன்னா… எதுக்காக அவங்களை இந்தப் பக்கம் வரச் சொல்றான்னு அவ கிட்ட கேட்கத் தோணல.
ஏன்னா, அவ சொல்லும்போதே எதுக்காக சொல்றான்னு எனக்கு புரிஞ்சிருச்சி… சரிம்மா சொல்றேன்னு சொல்லிட்டு, “சார் அந்தப்பக்கம் நிக்கிறவங்கல்லாம் கொஞ்சம் இந்தப்பக்கம் வாங்க ப்ளீஸ்”னு நல்லா சவுண்டா வேடிக்க பாத்தவங்க கிட்ட வேண்டுகோள் வச்சி… இந்தப் பக்கம் வர வச்சேன். வர வச்சோம். டைரக்டருக்கு, கூட இருந்த உதவி இயக்குநர்களுக்கே…. விசயம் சட்னு புரியல.
விசயம் என்னன்னா, அந்த ஹீரோயின் காலுக்கு மேல கால் தூக்கி போடுறப்போ, பாவாடை லைட்டா, காத்துல அசையவோ, விலகவோ சான்ஸ் இருக்கு. அதனால தான் பாவம் அந்த பொண்ணு, அந்த திசையில நின்னவங்களை வேற பக்கத்துக்கு வரச்சொன்னா.
அதே மாதிரி அன்னைக்கு சாயங்காலமே, இன்னொரு காட்சி எடுத்தோம். இதுவும் காதல் காட்சி தான். ஒரு ரோடு அது. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் நல்ல வயல்வெளி. சோளக்காடு. ரோட்டுல ஒரு சைடுல தான் அந்தக் காட்சி எடுத்தோம். போற வர வண்டிகளை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல. அதனால நாங்க படம் பிடிச்ச சைடுல செம கூட்டம்.
ஒரு அடி அல்லது ஒண்ணரை அடி உயரம் இருக்கிற ஒரு சின்ன கல்லுல, ஹீரோ உட்கார்ந்திருப்பார். “மைல்”கல்லுன்னு நெனைக்கிறேன். பாவாடை சட்டை போட்டிருக்கிற நம்ம ஹீரோயின், நின்னுக்கிட்டே, ஹீரோவின் ரெண்டு தோள்லயும் கை வச்சி குனிஞ்சி அவர் கிட்ட பேசுற மாதிரி, டைரக்டர் காட்சியை முன்னமே விளக்கிட்டார். “ரெடி, டேக்”னு சொன்னதும் ஒரு தடவை குனிஞ்சவ, அவளுக்கு கொடுத்த வசனத்தை பேசுறதுக்கு முன்னாடியே பட்டுன்னு “பவர்” கட்டான மாதிரி நிமிர்ந்துட்டா.., “கட்” சொன்ன டைரக்டர்… ஓகே.. ஓகே… போலாம் போலாம்னு அடுத்த டேக்குக்கு தயாரானார்.
இப்பவும் அவ கூப்பிட்டா, ஆனா, வாய் “முருகண்ணா”ன்னு சொல்ல, கண்ணுல இங்க வாங்கண்ணான்னு ஒரு கெஞ்சல். என்னம்மான்னு பக்கத்துல போயி கேட்டா… இந்தப்பக்கம் நிக்கிறவங்களை ரோட்டுக்கு அந்தப்பக்கம் போகச் சொல்லுங்கண்ணான்னு சொன்னா… ஹீரோ கிட்ட பேசுறதுக்காக அவ ரொம்ப குனிய வேண்டியது இருந்தது. அந்த அளவு குனிஞ்சி பேசுறது அவளுக்கு உறுத்தலா இருந்துருக்கும் போல. ஏன்னா, அவ குனியிற திசையில முப்பது நாப்பது பேர் நின்னுட்டிருந்தாங்க.
ஓகே மா. ஓகேன்னு சொல்லிட்டு, கூட்டத்துக்கிட்ட… “சார் அந்தப்பக்கம் நிக்கிறவங்கல்லாம், கொஞ்சம் இந்தப்பக்கம்னு…” சவுண்டா ரிக்வெஸ்ட் பண்ணி அந்தப் பக்கம் போக வச்சேன். (ரிஸ்வெஸ்ட் தான் பண்ணமுடியும். ஆர்டர் போட்டோம்னா ஊர்க்காரங்க நம்மளை கும்மிருவாங்களே, உதவி இயக்குநர்களை பத்தி எழுதுற தொடர்ல இதைப்பத்தி விரிவா எழுதலாம்.) இந்த மாதிரி நேரங்கள்ல நம்ம சக உதவி இயக்குநர்கள் தானாகவே உதவிக்கு வந்துருவாங்க.
ஏன் அந்தப்பக்கம் போகச்சொன்னான்னு உங்களுக்கு புரிஞ்ச மாதிரியே எனக்கும் புரிஞ்சது. அதனால அவ கிட்ட எந்த விளக்கமும் நான் கேட்கல.
ஒரு பொண்ணா, சக சினிமாக்காரியா அவளுக்கு இப்படி உதவி செஞ்சதை… எப்ப நெனைச்சாலும் எனக்கு பெருமையா இருக்கும்.
தவிரவும் படங்களில், படுக்கையறை காட்சிகள், நீச்சல் குளக் காட்சிகள், கற்பழிப்புக் காட்சிகள், காதல் காட்சிகள், குத்துப்பாட்டு நடனங்கள்… இன்னும் எவ்வளவோ இருக்கு. அதுக்கு முன்னாடி நான் சொன்ன இந்த விசயங்களும் அந்த பொண்ணு அனுபவிச்ச விசயங்களும் ரொம்ப ரொம்ப சின்னது தான்.
ஆனா, சினிமாவுல நடிக்க வந்துட்டா… இதெல்லாம் சகஜம்னு சாதாரணமா சொல்ற வார்த்தைகளுக்கு பின்னாடி… அதை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிற அத்தனை சினிமாக்காரிகளும் கண்ணுக்குள்ள வந்தாங்க.
காஸ்ட்யூமர், மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர்…னு கேமராவுக்கு பின்னாடி ஒரு பயணம்… ஹீரோ, வில்லன், வில்லனின் அடியாட்கள்…னு கேமராவிற்கு முன்னால் இன்னொரு பயணம்…
ஒரு சினிமாக்காரி பேரழகியாக, பெரும் திறமைக்காரியாக, பிரமாதமான கதாபாத்திரமாக… ரசிகனின் கண்களுக்கு முன்னால் பவனி வர… அவள் தினம் தினம் பயணப்படுகிற பாதை… அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிக்கட்டு சபரிமலையெல்லாம் சினிமாக்காரிகளின் பாதைக்கு முன்னால்… அப்படி ஒன்றும் கரடுமுரடான பாதை அல்ல…
சரி, தவறு… விரும்பி செய்றாங்க, விரும்பாம செய்றாங்க.. பணத்துக்காக செய்றாங்க… இப்படி பின்னணிக் காரணங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாமல் அவர்களை பற்றி யோசித்தால்…
அத்தனை சினிமாக்காரிகளும் மரியாதைக்குரியவர்களாக, போற்றுதலுக்குரியவர்களாக, நன்றி நவில வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஏன் மரியாதை செய்ய வேண்டும், ஏன்ற போற்ற வேண்டும், ஏன் நன்றி நவில வேண்டும் என்று கேட்டால்… அதற்கு பதில் சொல்ல நிஜமாக நடந்த ஒரு கதை இருக்கிறது.
அந்தக் கதையிலும் ஒரு சினிமாக்காரி இருக்கிறாள். விரைவில்… உங்கள் முன்னே அவள் வருவாள். சினிமாக்காரிகளுக்கு நீங்கள் மரியாதை செய்ய… அவள் கடுகளவேனும் காரணமாக இருப்பாள் என்று நம்புகிறேன்.
(இன்னும் ஜொலிப்பார்கள்…)
முருகன் மந்திரம் | 98418 69379
Facebook: https://www.facebook.com/murugan.manthiram
Twitter: https://twitter.com/muruganmantiram
எங்கள் கீதாபாரதியா, நல்ல மெருகேற்றம், நல்ல தெளிவாக எழுதுகிறாய்………. மிகப்பெரிய எழுத்தாளர்களின் படைப்பை போல ஒரு ரசனை தெரிகிறது ……. வாழ்த்துக்கள்……
மிக மிக நன்றி கவின் அண்ணன்… உங்கள் அன்பின் பாராட்டை இன்று தான் பார்க்கிறேன்…. என் எழுத்தின் ஆரம்ப காலங்களுக்கு… நீங்கள் அனைவரும் காட்டிய வழியில் பயணப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன். இன்னும் நிறைவாக இன்னும் தெளிவாக இன்னும் நிறைய எழுத ஆசைப்படுகிறேன்.