சிவகார்த்திகேயன் விழாவில் ரங்கராஜ் பாண்டே! அரசியல் மழையும் சினிமா குடையும்!
ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும் கருதப்படும் ரங்கராஜ் பாண்டே வந்திருக்கிறார் என்றால்? புருவம் விரிய பார்த்தது கூட்டம்! சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பட ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்குதான் அழைக்கப்பட்டிருந்தார் பாண்டே!
மேற்படி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது தந்தி டி.வி. அதன் பொருட்டாகவும் அங்கே வந்திருக்கலாம் அவர். ஆனால் வழக்கம் போலவே பாண்டேவின் பேச்சு அருமை அருமை…
“நான் பதினாறு வயசுல டென்டுல்கரை பார்த்து பொறமைப் பட்டிருக்கேன். அந்த வயசுல அவர் உலக சாதனை பண்ணிட்டார். நமக்கும் அதே வயசுதான் ஆகுது. ஆனால் என்ன செஞ்சோம்ங்கிற கேள்வி எனக்குள்ள இருந்திச்சு. எதையாவது சாதிக்கணும்னு போராடி இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்தில் நிற்கிறேன். சிவகார்த்திகேயனும் என்னை போலதான். முட்டி மோதி போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கார். அவரது வெற்றியில் நான் என்னை பார்க்கிறேன். நான் ஜெயிச்சா எப்படி சந்தோஷப் படுவேனோ, அதே சந்தோஷம் எனக்கு சிவகார்த்திகேயன் வெற்றியடையும் போதும் வரும். அவரை நானாகவே நினைக்கிறேன்” என்று உருகினார்.
அரசியல்வாதிகளை கலகலக்க விடும் அவரது ஸ்பீட், இப்போதெல்லாம் சினிமா காரர்களை பார்த்தால் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி பொதுக்கடீர் என்று விழுகிறதோ என்று சந்தேகப்படுகிற அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலை புரிந்து கொள்ள முடிகிறது. அண்மையில் கபாலி தயாரிப்பாளர் தாணுவை பேட்டி காணும்போது கூட, “கபாலி ரிலீஸ் நேரம் நெருங்க நெருங்க என் நரம்பெல்லாம் தடதடக்குது. அந்த படத்தை பார்க்கணும்னு அவ்ளோ ஆவலா இருக்கேன்” என்றார் பாண்டே.
சினிமா, மீசை முறுக்கும் கட்டபொம்மன்களையும் குழந்தையாக்கிவிடுகிறதே!