கொன்னுட்டாய்ங்களே…
உட்கார்ந்த இடத்திலேயே பாசக் கயிறு வீசி, பலரையும் ‘பலிகடா’ ஆக்குவதில் கை தேர்ந்தவர்கள் இந்த வலைதள வம்பளப்பாளர்கள். எமதர்மனின் ஏஜென்டுகள் போலவே செயல்படும் இவர்கள் போன வாரம் மட்டும் முக்கிய விஐபிகள் நாலு பேரை சொர்கத்துக்கு அனுப்பிவிட்டார்கள். இவர்களின் நேற்றைய கைங்கர்யம் ‘நடிகர் செந்தில் மாரடைப்பால் மர்கயா’ என்பதுதான். தகவல் மெல்ல நிருபர்களின் வாட்ஸ் ஆப்புக்கு வர, பரபரப்பானது நிருபர் கூட்டம். செந்திலு எங்கேயிருக்கார்? எப்படியிருக்கார்? என்று விசாரிப்புகள் பறக்க ஆரம்பித்துவிட்டன.
கடந்த இரண்டு தேர்தல்களாகவே தனக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கி போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துக் கொண்டேயிருக்கிறார் நடிகர் செந்தில். இந்த முறை விஜயகாந்த் வீடிருக்கும் தொகுதியான விருகம்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பணமும் கட்டியிருந்தார். அந்தோ பரிதாபம். சி.ஆர்.சரஸ்வதி, கருணாசுக்கு கிடைத்த கருணை, செந்திலுக்கு கிட்டவேயில்லை. (ஒருவேளை இவர் ஜெயித்து சட்டமன்றத்திற்கு வந்திருந்தால், கேட்கும் கேள்விகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையெல்லாம் கவுண்டரிடம் கேட்டு கன்பார்ம் பண்ணியிருப்பாரோ ஜெ?)
போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவருக்கு மாரடைப்பு வந்திருக்குமோ என்கிற அளவுக்கு குறுக்கு கணக்கு போட்டு குழம்பிய நிருபர்களுக்கு சில நிமிஷங்களிலேயே வெளிச்சம் அடித்தது. நிருபர்களில் சிலர் “நான் இப்பதான் செந்திலிடம் பேசினேன். ஆள் நல்லாயிருக்கார். திருச்சியில் பிரச்சாரத்தில் இருக்கார்” என்றார்கள். நிமிஷத்திலேயே அவரது பிரச்சார போட்டோவும் வந்தது. அதற்கப்புறம் அவரது தன்னிலை விளக்க வீடியோவும் வந்தது.
“நான் நல்லாயிருக்கேன். யாரோ புரளிய கிளப்பிவிட்டுட்டாங்க” என்று குளோஸ் அப்பில் சிரித்துவிட்டு போனார் செந்தில்.
பவரா எரிஞ்சுகிட்டு இருக்கிற மனுஷனை, “அண்ணே…. இதான் மேண்டிலா?”ன்னு கேட்டு ஒரேயடியா கசக்கிறதாதீங்க மக்கா!