ஒரு கோடி சம்பளம்? ஒசத்திவிட்ட தயாரிப்பாளர்! சந்தோஷ் நாராயணன் மெட்டில் பண மழை!
அட்டக்கத்தியில் ஆரம்பித்து 36 வயதினிலே வரைக்கும் நம்மை இசை மழையில் நனைய வைத்த அற்புதன் சந்தோஷ் நாராயணன். காட்டு உருட்டல் உருட்டும் இசையமைப்பாளர்கள் பலர், ‘இதாண்டா ட்ரென்டு’ என்று காதுக்குள் மூட்டை பூச்சி மருந்தடிக்கும் நேரத்தில், ‘இதுவும்தாண்டா ட்ரென்டு’ என்று மெலடியை வழிய விடும் ஒரு காரணத்திற்காகவே அவரை வாயார பாராட்டி, ‘மவுசார’ சீராட்டலாம்.
இத்தனை ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவர் வாங்கும் சம்பளம் தகுதியை விட குறைச்சல்தான் என்று கூறிக் கொண்டிருந்தது சினிமாவுலகம். இருந்தாலும் கமுக்கமாக தங்களுக்குள் பேசி வியந்து அதே சம்பளத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது சந்தோஷ் நாராயணனுக்கு நிலைமை உச்சமோ உச்சம். ரஜினி- ரஞ்சித் இணையும் படத்திற்கு இவர்தானே மியூசிக்? சும்மாயிருக்குமா உலகம்? நீங்க ரஜினி படத்துக்கே மியூசிக் போட்டுட்டீங்க. அதனால் இன்னையிலிருந்து உங்க சம்பளம் ஒரு கோடி என்று கூற, அவருக்கே தலை சுற்றாத குறை.
அந்த அருமைபெருமைக்குரிய காரியத்தை செய்தவர் ரெட் ஜயன்ட் உதயநிதி என்கிறது செவி வழி தகவல்கள். உதயநிதி நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கும் சந்தோஷ் நாராயணனுக்கு இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தி அழகு பார்த்திருக்கிறாராம் அவர். பின்னாடி வர்றவங்களுக்குதான் பிடாரி கோவில் பிரசாதம் கிடைக்கும். என்னத்தை சொல்ல?