செவன்ஜி ஸ்டைலில் ஒரு படம்! கொஞ்சம் விவகாரமும் இருக்குமோ?
செல்வராகவன் எழுத்தில், அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ ஜனவரி 1 ந் தேதி திரைக்கு வருகிறது! செல்வராகவன் படங்களிலெல்லாம் எடிட்டராக பணியாற்றிய கோலா பாஸ்கர்தான் இப்படத்தை தயாரிக்கிறார். அவரது மகன் கோலா பாலகிருஷ்ணா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக வாமிகா நடிக்கிறார்.
இளைஞர்களின் ‘டச்சிங்’ ஏரியாவில் நுழைந்து அவர்களின் உணர்வுகளை அப்படியே தியேட்டருக்குள் கடத்துவதில் செல்வராகவனுக்கு இணை அவர்தான். நடுவில் பேண்டஸி என்ற ஜானருக்குள் நுழைந்து, ஸ்பானரை முழுங்கிய மெக்கானிக் மாதிரி ஆகியிருந்தார் அவர். ஆனால் இப்போது பேக் டூ ஹிட். தன் இயல்பான நடையில் அவர் எழுதிய கதையை அவரது மனைவி கீதாஞ்சலிக்கு கொடுத்து படமாக்க வைத்திருக்கிறார். அது ஏன்?
“பொதுவா இங்கிருக்கிற பெண் இயக்குனர்கள்னா இப்படிதான் படமெடுக்கணும்னு ஒரு வரையறை வச்சுருக்காங்க. பெரும்பாலும் அது ஏதோ குழந்தை சார்ந்த படமாகதான் இருந்திருக்கிறது. ஆனால் வேறு நாடுகளில் வாழும் பெண் இயக்குனர்கள் அப்படியல்ல. கீதாஞ்சலி துணிச்சலான ஒரு டைரக்டரா இந்த படத்தில் வெளிப்படுவாங்க. ஒரு இயக்குனரா அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. வீட்ல குழந்தைகளை நான்தான் பார்த்துக் கொண்டேன். இருந்தாலும் ஷுட்டிங் ஸ்பாட்லேர்ந்து அடிக்கடி போன் பண்ணி குழந்தைக்கு அது கொடுத்தீங்களா, இது கொடுத்தீங்களா? அழாம இருக்கானா? என்றெல்லாம் விசாரிப்பார். பெண்கள் வெளியில் வந்து வேலை செய்யணும்னா எவ்ளோ விஷயங்களை தாண்டி வர வேண்டியிருக்குன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது” என்றார் செல்வராகவன்.
பின்னாலேயே பேச வந்த கீதாஞ்சலி, “செல்வராகவன் அவர் கதையை வேறொருவரிடம் கொடுத்து படமாக்க ஒப்புக் கொண்டதேயில்ல. பர்ஸ்ட் டைம் எனக்காக குழந்தை போல அவர் நேசிக்கிற கதையை என்னை நம்பி ஒப்படைச்சுருக்கார். நானும் அவர் நம்பிக்கையை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். ஏனென்றால் சில தினங்களுக்கு முன்புதான் அவருக்கு படத்தை போட்டுக் காண்பிச்சோம். அவரே வாய்திறந்து பாராட்டினார். எனக்கு அது பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கு” என்றவர் தனது பேச்சில் லேசாக ஒரு விஷயத்தை டச் பண்ணிவிட்டு போனார். “இந்த படத்தின் ஓரத்தில் எல்லாரும் ஏற்றுக் கொள்ள முடியாத.. விரும்பத்தகாத விஷயங்கள் இருக்கலாம். பட்… அதையெல்லாம் தூரத்தில் வச்சுட்டு இந்த படத்தின் மெயின் ஸ்டோரியை நீங்க ரசிக்கணும்” என்றார்.
அப்ப விவகாரமா ஏதோ இருக்கு! வெயிட் பண்ணுவோம்…