சேதுபதி விமர்சனம்

Vijay Sethupathi & Ramya Nambeesan in Sethupathi Movie Photos

மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்… அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம் பண்ணியிருக்கிறார்கள். “ஸ்… மிடியல” ஆக்குகிற இந்த மாதிரியான போலீஸ் கதைகளின் ‘பாலீஷ்’ வெளுத்து அநேக வருஷமாச்சு. ஆனால், அதே உடுப்பு, அதே மிடுக்குடன் யதார்த்தத்தை அணிந்து கொண்ட போலீஸ் ஹீரோக்களை மட்டும் ‘பொளந்து கட்டுய்யா என் ராசா’ என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். அப்படியொரு போலீஸ் கதைக்குள் நம்ம விஜய் சேதுபதி. (ரவுடியா வந்தாலும் ரசிக்கிறாய்ங்க, போலீசா வந்தாலும் புடிக்குதுங்குறாய்ங்க, என்னவோ மேஜிக் இருக்குதய்யா உங்ககிட்ட!)

ஏ.சி.பிரமோஷனுக்காக காத்திருக்கிற ஒரு இன்ஸ்பெக்டருக்கு, பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரியின் கொலை வழக்கை விசாரிக்கும் கடமை வந்து சேர்கிறது. ‘என் லிமிட் தாண்டி ஏன்யா வேலை பார்க்குறே…’ என்று கழுத்தறுக்கிற சக போலீசின் சூழ்ச்சியை தாண்டி இவர் குற்றவாளியை கண்டு பிடிக்க, அந்த குற்றவாளியினால் அதே இன்ஸ் அடுத்தடுத்து சந்திக்கும் சங்கடங்கள்தான் படம். பொழுதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனிலேயே விழுந்து கிடந்திருந்தால்தான் இப்படியொரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கியிருக்க முடியும்! இப்படத்தின் இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருக்கு என்னென்ன அனுபவமோ? பட் கதை தந்த ஸ்டேஷனுக்கு ‘கை நிறைய’ கொடுங்க சார்…

சேதுபதியின் அறிமுகமே செம…! குளோஸ் அப்பில் வலி காட்டும் அந்த முகத்தை லாங் ஷாட்டில் பார்த்தால், தனது மகனுடன் அவர் போடும் செல்ல சண்டையாம் அது. போலீஸ்காரனுக்கும் குடும்பம் இருக்கு என்பதை அவ்வளவு லைவ்வாக, சுவாரஸ்யமாக, காதல் வழிய வழிய காட்டியிருக்கிறார் டைரக்டர். இந்த குடும்ப பகுதியை விட விஜய் சேதுபதியின் ஆக்ஷன் காட்சிக்கு அப்படியே அள்ளுகிறது தியேட்டர்! அதிலும் ஊர் பெரிய மனுஷன் வேல ராமமூர்த்தியை ஓங்கி ஒரு அறை கொடுத்து அப்படியே ஜீப்பில் ஏற்றி வரும் கம்பீரம்… அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல் கிளாப்ஸ் ஏரியா. அதற்கப்புறம் ஹீரோவை ஒழிக்க கொல்லை பக்கமாக முயலும் வேலராமமூர்த்தியும் அவருக்கு கிடைக்கும் மொக்கை முடிவுகளும் அவ்வளவு சுவாரஸ்யம்!

ஸ்கூல் பசங்களை விசாரணைக்கு கொண்டு வந்து கடைசியில் அதில் ஒருவனால் வேலை போகிற அளவுக்கு சிக்கலுக்குள்ளாகும் விஜய் சேதுபதியும், அவரது அசால்ட்டான அப்ரோச்சும் இன்னும் இன்னும் அழகு. விசாரணை ‘கமிஷன்கள்’ எப்படி நடக்கிறது என்பதெல்லாம் மக்களுக்கு தெரிந்த சமாச்சாரங்கள்தான். ஆனாலும் இந்த படத்தில் அதன் போக்கை தெரிந்தே ரசிக்க முடிகிறது. குள்ளமாக வரும் அந்த விசாரணை அதிகாரியின் கோபத்துக்கு கரகோஷம் போடுறார்கள் ரசிகர்கள்.

“எல்லாம் நம்ம பயலுவதான். கண்ண காட்னா செஞ்சுப்புடுவானுங்க. என்ன நான் சொல்றது?” என்று அசால்ட்டாக மிரட்டுகிற எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, இஸ்திரி போட்டு மடிச்சு வச்ச சட்டை மாதிரி அப்படியே கலையாத கம்பீரத்துடன் இருக்கிறார். அவரது கடைசி முடிவை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம்.

ரம்யா நம்பீசனுக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் கண்ணால் பேசி, புருவத்தால் கேள்வி கேட்டு, புருஷனை காலில் விழ வைத்து… அதகளம் பண்ணுகிறார். அவர் வெயிட் போட்டிருக்கிறார் என்று விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே, வார்த்தைக்கு வார்த்தை ‘குண்டாத்தி’ என்று விஜய் சேதுபதியை விட்டு செல்லம் கொஞ்ச வைக்கிறார்கள். என்ன ஒரு தந்திரம்! விஜய்சேதுபதி ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அந்த துறுதுறு இன்ஸ்பெக்டர் பிரம்மாதம்.

நிவாஸ் பிரசன்னா இசையில், ‘நான் யாரு? ங்கொய்யால…’ என்றொரு பாடல். ட்யூன் ரசனைதான். அதற்காக இப்படியெல்லாம் வார்த்தைகளை போடணுமா? எழுதின புண்ணியவானை முச்சந்தியில் வச்சு வசை பாட வேண்டியதுதான். ஆனால் இருவேறு சூழ்நிலைகளில் வரும் அந்த ஒரு பாடல் ஓ.கே. தினேஷ் ஒளிப்பதிவும், அவரது லைட்டிங்குகளும் தனி அழகு!

‘நான் போலீஸ் இல்ல, பொறுக்கி’ என்ற படமும் வந்திருக்கிறது. ‘நான் பொறுக்கி இல்ல போலீஸ்’ என்ற படமும் வந்திருக்கிறது. ‘நான் போலீஸ், அதுவும் பொறுப்பான போலீஸ்’ என்று சொல்ல வந்திருக்கிற படம் இது.

வேற வழியேயில்ல, மெடலை குத்திட வேண்டியதுதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜயகாந்த் எல்லாரையும் அடிக்கறது ஏன்? -ராதிகா குபீர் சிரிப்பு

“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை...

Close