விஜய் சேதுபதி போனார் சிம்பு வந்தார் ஏன்?
‘தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார்!’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை! அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன்? ஒருகாலத்தில் ரெண்டு சட்டை ஒரு பட்டன் என்றிருந்தவர்கள்தான் இருவரும். பட்டன் அறுந்து சட்டை தெறித்த கதையை நாடே அறியும். ஆனால் வயது தந்த பக்குவத்தாலும், வாழ்க்கை தந்த சொப்பனத்தாலும் ஒன்று சேர்ந்தார்கள் இருவரும். அவ்வப்போது பார்ட்டி, அட்டகாசமான ச்சியர்ஸ் என்று இன்றும் தொடர்கிறது அந்த நட்பு. ‘அந்த நல்ல நட்பில் கோடாலி விழாமலிருக்கணும்’ என்று விரும்பியவர்களுக்குதான் மேற்படி தகவல் சின்ன அதிர்ச்சியையும் தந்தது.
அந்த தகவல் வெறும் வதந்திதான் என்றும் இருவரும் இணைந்து ஒரு படத்தையும் ஜனங்களுக்கு வழங்கப்போவதில்லை என்றும் கூறுகிறது தீர்மானமான இன்னொரு தகவல். இருந்தாலும் சிம்பு நல்ல ஆக்டர் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நல்ல சூழலை வகுத்துக் கொடுக்கவிருக்கிறாராம் கிருத்திகா உதயநிதி. பெண் இயக்குனர்களில் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கை காட்டப்படும் ஒருவரில் கிருத்திகாவும் இருக்கிறார். மற்றொருவர் ஐஸ்வர்யா தனுஷ் என்பது உபரி சந்தோஷம்.
கிருத்திகா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததல்லவா? அதில் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். இந்த படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. அது மட்டுமல்ல, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் கமல் வந்த மாதிரி, நாலு கெட்டப்பில் தோன்றப்போகிறாராம் சிம்பு.
சிம்பு பற்றி எப்பவுமே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. இனிமே நாலு விதமாகவும் பார்க்கட்டுமே?