மானாட மயிலாட! மிஸ்டு கால் வந்து வாழ்க்கையிலே கூத்தாட?
ராங் – கால்களையே கூட ரைட் கால்களாக்கி பொழுது போக்குகிற காதல் இளவரசன்கள் சுற்றி திரிகிற டவுன் இது. செல்போன் கலாச்சாரம் வந்த பின்புதான் தமிழனின் கலாச்சாரம் கண்றாவியானதாக ஒரு புள்ளி(ராஜா) விபரம் தெரிவிக்கிறது. இப்படி திரும்புன திசையெல்லாம் ஆக்ரமித்திருக்கும் இந்த செல்போன் க்ரைம்கள் இளசுகளின் வாழ்வில் என்னென்ன துயரங்களை தருகிறது? ஓ… பாட்டாவே படிச்சுட்டியா? என்று கேட்கிற மாதிரி படமாகவே எடுத்துவிட்டார் சுகன். படத்தின் பெயர் ‘சூதனம்’.
டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாளராக இருந்தவர் இந்த சுகன். இவர் கலாச்சார சீரழிவு குறித்து படம் எடுக்கிறார் என்று கேள்விப்படும்போது நெஞ்சம் விம்மி நிற்கும். சந்தேகமில்லை! கலாவின் உதவியாளர் என்றால் மானாடும், மயிலாடும் அல்லவா? இந்த படத்தில் மூன்று இளம் மயில்களை நடிக்க வைத்திருக்கிறார் சுகன். அவர்களுக்கு வரும் மிஸ்டு கால்களால் ஏற்படும் ஆபத்தும், அவர்கள் எப்படி ‘சேவ்’ செய்யப்படுகிறார்கள் என்பதும்தான் கதையாம்.
‘நாட்’தான் அப்படி. படத்துல துளி கூட ஆபாசம் இருக்காது. ஆண், பெண், வயசாளி, நோயாளி அத்தனை பேரும் பார்த்து திருந்த வேண்டிய படம் என்றார் டைரக்டர் சுகன். இவரே டான்ஸ் மாஸ்டர் என்பதால், படத்தில் வரும் பாடல்களுக்கு மெனக்கெட்டு நடன காட்சிகள் அமைத்திருக்கிறாராம். புதிய பாடலாசிரியரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். குட்லக் ரவி இசையமைத்திருக்கிறார்.
படமே செல்போன் கதை என்பதால், பாடல்கள் ரிங் டோனுக்காக விற்கப்பட்டால் ‘என்ன பொருத்தம் இப்பொருத்தம்’ என்று பாராட்டலாம்.