சென்சார் ஏன் இப்படியிருக்கு? நம்பியார் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி!

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ்.

ஸ்ரீகாந்திடமே பேசுவோம்…

நம்பியார் என்ன சொல்றார்?

சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார். இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும். எம்ஜிஆருக்கு வில்லங்கம் செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின் மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது கெட்ட சிந்தனைகள் அதனைக் கெடுக்க முயற்சிக்கும். ஸோ நமக்குள்ளேயே எம்ஜிஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார் என்பதைத் தான் சொல்கிறோம்.

நம்பியார் – எம்ஜிஆர் கான்செப்ட் எப்படி பிடிச்சீங்க?

அந்தப் பெருமை இயக்குனர் கணேஷாவையே சேரும். எல்லோருடைய வாழ்க்கையிலுமே போராட்டம் இருக்கிறது. ஒரு கேரக்டரின் குணங்களை அவற்றின் பெயர்களிலேயே புரிய வைத்தால் ஆடியன்ஸ் எளிதாக படத்துடன் கனெக்ட் ஆகிவிடுவார்கள் அல்லவா?அதனால், ஹீரோவின் பெயர் ராமச்சந்திரன். அவனுக்கு நிறைய போராட்டங்கள். அவரைக் குழப்பிவிடுவது கூடவே இருக்கும் நம்பியாரான சந்தானம். இங்கே நம்பியார் என்பது கற்பனை பாத்திரம் தான். அது எப்படி என்ற சஸ்பென்ஸை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சந்தானம் கூட நடிச்சதுல ஏதாவது இண்ட்ரெஸ்டிங் அனுபவம்?

இந்த காம்பினேஷனிலேயே நிறைய சுவராஸ்யங்கள் இருக்கின்றன. படம் முழுக்க சந்தானம் இருப்பார். படத்தின் ஒரு முக்கிய பகுதியில் திரையில் நான் பேசுவேன். ஆனால் சந்தானத்தின் குரலில். அதாவது எனக்குள்ளிருக்கும் நம்பியார் எம்ஜிஆரை டாமினேட் செய்யும் இடம் அது. அந்த கான்செப்டே சந்தானத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரையே ஒரு பாடலையும் பாட வைத்தோம். சாதாரண மனிதன் பாடுவதற்கும் குடிபோதையில் பாடுவதற்கும் ஒரு வித்தியாசம் இருக்குமே அதனை அச்சு அசலாக அப்படியே கொண்டு வந்தார் சந்தானம். சவாலான அந்த பாடலை ஒரு மணி நேரத்தில் பாடி முடித்தார். அவருடைய டயலாக் டெலிவரிக்கு நான் நடித்ததும் வித்தியாசமாக இருந்தது. சந்தானத்தை கூர்ந்து கவனித்து அவரது மாடுலேஷன், டயலாக் டெலிவரியைக் கொண்டு வந்திருக்கிறேன். சந்தானம் போலவே தேவதர்ஷினியும் கலக்கியிருக்கிறார்.

படத்தோட காஸ்டிங்ல காமெடியன்கள் அதிகமா இருக்காங்க?

ஜான் விஜய், பஞ்சு சுப்பு, ஆதவன், அர்ஜுன், டெல்லி கணேஷ் என உங்களை எண்டெர்டெயின் பண்ண நிறைய பேர் இருக்கிறார்கள். முக்கியமாக, பார்த்திபன். அவர் தான் படத்தை வாய்ஸ் ஓவரில் தொடங்கிவைப்பார். எம்ஜிஆர் வரலாறை எல்லோரும் ரசிக்கும் வகையில் ப்ரெசெண்ட் செய்திருக்கிறார்.

படத்துல ஆர்யாவும் விஜய் ஆண்டனியும் இருக்கார் போல?

படத்தில் ஆற அமர என்ற ஒரு முக்கிய பாடலின் செட் பற்றி தெரிந்துகொண்ட விஜய் ஆண்டனி அந்த பாடலைப் பார்க்க ஆசைப்பட்டு செட்டுக்கு வந்தார். அவரையும் சின்ன மூவ்மெண்ட் போடவைத்து உள்ளே இழுத்தோம். கதையில் ஒரு நண்பர் வந்து உதவுவார். அதற்கு உண்மையாகவே என்னுடைய நண்பர் ஆர்யாவையே கூட்டிவந்தோம். ஆர்யா என் பள்ளி நண்பன். ஆர்யா பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆகவேண்டும். இந்த படத்தில் நடித்துமுடித்தபின், நான் மிகவும் தயங்கியபடியே மச்சி… ரொம்ப தேங்க்ஸ்… பேமெண்ட் எவ்வளவு… என்று கேட்டேன். பதிலுக்கு ஆர்யா எனக்கு விட்ட டோஸை ஓப்பனாக சொல்ல முடியாது. இதுபோன்ற நண்பர்களைத் தான் நான் சம்பாதித்த பெரிய சொத்தாகக் கருதுகிறேன். ஆர்யாவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் வருகிறார்.

ஒரு தயாரிப்பாளரா படத் துவக்கம் முதல் இன்று வரையிலான உங்கள் மனநிலை?

இது ஒரு ஆபத்தான ரோலர்கோஸ்டர் பயணம் என்றே சொல்வேன். ஏற்ற இறக்கம், த்ரில், பயம் எல்லாமே அடங்கியிருக்கிறது. இன்று படம் தயாரிப்பது எளிது. ஆனால் அதனை வெளியிட பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. பல விஷயங்கள் இருக்கிறது. இந்த படத்துக்கு யு/ஏ கொடுத்திருக்கிறார்கள். நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். சென்சார் எந்த அடிப்படையில் பண்ணப்படுகிறது? என்னவிதமான ஏற்றதாழ்வுகள் அங்கே பார்க்கப்படுகின்றன? ஆபாசம் இல்லை,வன்முறை இல்லை, முத்தக் காட்சி கூட இல்லை. தவறான வசனங்களும் இல்லை. பெண்களைத் தவறாகக் காட்டவில்லை. ஆனால் என் படத்துக்கு யு/ஏ கொடுக்கிறார்கள்.

அப்போது இதெல்லாம் இருந்தால் தான் யு சர்டிஃபிகேட் கொடுப்பார்களோ?

என் படத்திற்கு யு/ஏ கொடுத்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை. வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் வரும். அவற்றை சமாளித்து ஜெயிப்பது நம் கையில் தான் இருக்கிறது என்ற நல்ல கருத்தைத் தான் சொல்கிறது என் படம். நமக்குள்ளேயே தான் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் இருக்கிறது. இந்த விஷயத்தை சொல்கிறோம். இதை சொல்வதற்கு யு/ஏ கொடுத்தால் படம் எடுப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறது சென்சார் போர்டு?

அஜித், விஜய், சூர்யா என அனைத்து பெரிய ஹீரோக்களுமே இரண்டு படங்களுக்கு ஒரு லோக்கல் படம் பண்ணுகிறார்கள். நீங்கள் இன்னமும் ’ஏ’ செண்டர் ஆடியன்சை மட்டுமே குறிவைப்பதுபோல் தெரிகிறதே?

படத்தின் வெற்றி, தோல்வி தான் படம் எந்த ஆடியன்ஸை சேர்ந்தது என்பதைத் தீர்மானிக்கிறது. படம் பண்ணும்போது எல்லா ரசிகர்களுக்குமாகத் தான் பண்ணுகிறோம். நம்பியார் என்ற டைட்டிலே எல்லா ரசிகர்களுக்குமானது. இது நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும்.

தொடர்ந்து தயாரிப்பீர்களா?

நிச்சயமாக… புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். எங்களுக்கு பணம் முக்கியமில்லை. முதலீடு வந்தால் கூட போதும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க ஆசைப்படுகிறோம். அதனை தீர்மானிக்கப்போவது ரசிகர்கள் தான். அவர்கள் நம்பியாருக்கு தரவிருக்கும் ஆதரவுதான் எங்கள் பலம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்சார்ல கதற விட்றாங்க! மொட்டை ராஜேந்திரன் பட இயக்குனருக்கு சோதனை!

தொட்டுக்கோ, துடைச்சுக்கோ என்று கையில் கழுத்தில் இருப்பதையெல்லாம் அடகு வைத்து படம் எடுத்தால், ஆங்காங்கே கட் கொடுத்து அழுதுக்கோ, அலறிக்கோ என்பார்கள் போலிருக்கிறது சென்சாரில். பெரிய படங்களை...

Close