பறக்கும்போதே கதை… இறக்கி வச்சுட்டோம் அதை! -பைலட்டுகள் நிம்மதி

பாம்பாட்டிகளே படம் தயாரிக்க வரும்போது பைலட்டுகள் வரக்கூடாதா? ஃபிளைட்டில் பறக்கும் போது தோன்றிய கதையை பத்திரமாக திரையில் இறக்கி வைத்திருக்கிறார்கள் விமான பைலட்டுகள் இருவர். அஷ்ரப் ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு பைலட்டான பிரபு யுவராஜ் இயக்கியிருக்கிறார்.

‘சின்ன வயசிலிருந்தே எங்க கனவு இது. ரெண்டு பேருமே பைலட் ஆனோம். கதை பேசினோம். ஏன் நாமே இதை படமா எடுக்கக் கூடாதுன்னு நினைச்சோம். எங்களோட நண்பர் அமீன் தயாரிக்கிறேன்னு முன் வந்தார். படம் முடிஞ்சாச்சு. இனி ரிலீஸ் வேலைகள்தான்’ என்றார் இயக்குனர் பிரபு. படத்திற்கு ர என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் சுத்த தமிழில் ‘அபகரித்தல்’ என்று அர்த்தமாம். படத்தின் ட்ரெய்லரையும் சில காட்சிகளையும் நமக்கு காட்டினார்கள். அமானுஷ்யம்… அசர வைக்கும் திகில்… என்று கலக்கியிருந்தார்கள். இத்தனைக்கும் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லையாம் பிரபு யுவராஜ்.

‘பிளைட்ல பறக்கும் போது நாம் பார்க்கும் இயற்கை காட்சிகள் அவ்வளவு பிரமிப்பா இருக்கும். கடவுளின் படைப்பில் இன்னும் நமக்கு தெரியாதது என்னென்ன இருக்கோ என்று யோசித்ததன் விளைவுதான் இந்த கதை’ என்று தத்துவம் பேசினார் பிரபு. அதிகம் அலட்டிக் கொள்ளவே இல்லை மியூசிக் டைரக்டர் ராஜ் ஆர்யன். வளவள பேச்சும் இல்லை. ஆனால் பின்னணி இசைக்கென்றே அவார்டுகளை குவிப்பார் போலிருந்தது.

ர என்ற எழுத்து ஒரு கதவின் மீது இருப்பது போலவும் அந்த கதவு அப்படியே பறந்து வந்து மோதுவது போலவும் தலைப்பு கிராபிக்சில் அமைக்கப்பட்டிருந்தது. நீங்க பிளைட்ல போகும்போது இது மாதிரி ஒரு ர- பறந்து வந்தால் என்ன பண்ணுவீங்க ? இப்படி அமானுஷ்யத்தை மிஞ்சிய கேள்வியோடு பிரபுவை மடக்கினால், ‘பிளைட்ல எல்லா வசதியும் இருக்குங்க. இப்படி ஏதாவது எதிர்ல வந்துச்சுன்னா, ‘பிளைட்ட இத்தனை டிகிரியில திருப்புன்னு எங்களுக்கு முன்னாடியே கட்டளை கொடுத்துரும்’ என்றார் சிரித்துக் கொண்டே!

இதுக்குதான் புரியாத ஏரியாவுல தலைய விடக்கூடாதுன்ங்கறது!

பின்குறிப்பு – படத்தின் ஹீரோயின் அதிதி செல்லப்பா தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகி வரும் ருத்ரம்மாதேவி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறாராம். அப்படியே படத்தை தெலுங்குலேயும் ரிலீஸ் பண்ணுங்கோ!

Read previous post:
டங்கா மாரின்னா இன்னாபா…? பாடலாசிரியரை பதற விட்ட தனுஷ்!

ஒரு படத்தின் கதை ஹீரோயினை சுற்றியிருக்கிறதோ, இல்லையோ? அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பேசும் அத்தனை பேரும் ஹீரோயினை ஒரு சுற்று சுற்றி வராமலிருக்க...

Close