ஸ்ட்ராபெர்ரி- விமர்சனம்

‘ம்ஹும்… இனியொரு ஆவிப்படத்தை தாங்குறதுக்கு என் மனசுல தெம்பில்ல’ என்று ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆவியை மையமாக கொண்டு ஒரு படமா? அங்க போய் டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு உருப்படியா ஒண்ணாம் வாய்ப்பாட்டை திரும்ப படிக்கலாம் என்று கிளம்பினால், ட்ரெய்லரில் வரும் ஒரு குழந்தை வா… வா… என்கிறது தியேட்டருக்குள்! போனால்…? அட மிரட்டிப்புட்டாரே நம்ம பா.விஜய்!

ஒரு அழகு குழந்தை அற்பாயுசில் போய் சேர்கிறது என்பதே தாங்க முடியாத தவிப்பு. இதில் அது இறக்கும் சூழலும், நடக்கும் விபத்தும், நம்மை நிலைகுலைய வைக்கிறது. கூட்டமாக வர்ற ஆவிப்படங்களுக்கும், இந்த ஸ்ட்ராபெரிக்கும் நடுவிலான வித்தியாசம் இங்குதான்! இந்த சென்ட்டிமென்ட்டின் அடர்த்தி வேறெந்த படங்களுக்கும் வாய்க்காத திருப்தி!

ஆவியோடு பேசுகிற மீடியமான ஜோ மல்லூரியிடம் ஒரு ஆவி வந்து குறிப்பிட்ட நபரிடம் பேச வேண்டும் என்று விரும்புகிறது. அது கொடுக்கிற கார் நம்பரை வைத்து கண்டுபிடிக்கப் போனால் அவர்தான் பா.விஜய். கால் டாக்ஸி டிரைவர். ஆவி, பேய் என்றாலே அஞ்சி சாகுற அவரை ஹீரோயின் அவ்னிமோடியின் உதவியோடு ஸ்பாட்டுக்கு கொண்டு வருகிறார் ஜோ. “யார் பயப்படுறாங்களோ, ஆவி அவங்களோட சகஜமா பழகாது. அதனால் நீ பயத்தை விடணும்” என்று ஹீரோயின் மெல்ல மெல்ல அவருக்கு தைரியம் வரவழைக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தன் கண்ணெதிரே நிற்கும் அந்த ஆவியை பார்க்கிற பா.விஜய் “ஐயோ… நீயா?”வாகிறார். அப்புறம் கதை விறுவிறு.!

படத்தின் ஹீரோ பா.விஜய் என்பதால், குட்டோ? ஷொட்டோ? அவரிடமிருந்து ஆரம்பிப்பதுதான் முறை. ஒரு டைரக்டராக அசத்திவிடுகிற அவரால், ஒரு நடிகராக சுமக்க முடியவில்லைதான். உணர்ச்சிகளை கொட்ட வேண்டிய பல காட்சிகளில் ‘நம்ம லெவல் இவ்ளோதான்’ என்று நின்று விடுகிறார். வேறொரு ஹீரோவை வைத்து இந்தப்படத்தை அவர் இயக்கியிருந்தால், இந்த ஆவிப்படம் இன்னும் நாலு வருஷத்துக்காவது நம் மனசை விட்டு அகலாது இருந்திருக்கும். போகட்டும்… டைரக்டர் விஜய் பலே சூரர்தான். குறிப்பாக அந்த குழந்தை இன்னும் சற்று நேரத்தில் வேனின் அடியில் சிக்கி மாண்டுவிடப் போகிறது என்கிற தவிப்பை அப்படியே தியேட்டருக்குள் இறக்கி வைக்கிறது அவரது டைரக்ஷன் யுக்தி.

ஆரம்பத்திலிருந்தே அவர் காட்டி வரும் அந்த பட்டர்பிளைதான், கடைசிகட்ட ஹீரோ என்பது எதிர்பாரா திருப்பம். ஒரு ஆவிக்கதையை நினைத்தபடியெல்லாம் வடித்துக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் இருந்தாலும், ஓரளவுக்கு லாஜிக்கோடு கதை நகர்த்தும் பாங்கும் பா.விஜய்க்கு கூடுதல் ‘பலே’ போட வைக்கிறது. நடுவில் ஒரு டீக்கடையில் சமுத்திரக்கனியை இவர் பார்த்து விசாரிப்பதும், அடுத்த காட்சியில் அந்த இடம் அவரில்லாமல் வெற்றிடமாக இருப்பதும், அவரும் ஒரு ஆவியோ என்று எண்ண வைத்து ஏமாற்றுகிறது. இப்படி சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளில் நம்மை இழுத்துக் கொண்டு போகிறார் பா.விஜய். வெல்…

படத்தின் ஹீரோயின் அவ்னி மோடி, எந்த நாட்டு சரக்கோ? நமக்கு போதை ஏறல! ஜோமல்லூரி இந்த கேரக்டருக்கு மிக மிக பொருத்தமானவராக இருக்கிறார்.

தேவயானியும் சமுத்திரக்கனியும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் நெருப்பை அள்ளி சுமந்த மாதிரி, நிஜம் கொட்டுகிறது சமுத்திரக்கனியின் ஆவேசத்தில். அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் வீட்டுக்கு வீடு பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்ள வேண்டியவை. சந்தேகமில்லை.

ஆவியாக நடித்திருக்கும் அந்த குழந்தை, அப்படியே மனசை அள்ளிக் கொண்டு போகிறாள். “நான் பேயில்ல… ஏஞ்சல்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அவளை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஆவி ரூபத்தில் வந்து அதிர்ச்சியூட்டும் போது கூட!

ரோபோ சங்கர், மயில்சாமி, தம்பி ராமய்யா இவர்களெல்லாம் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் கிடா வெட்டி பொங்கல் வைக்கிறார்கள். சிறப்பு.

ஒரு திகில் படத்திற்கு தேவையான பின்னணி இசையை இவ்வளவு அருமையாக, துல்லியமாக இன்னொரு இசையமைப்பாளரால் கொடுத்துவிட முடியுமா? மிரட்டியிருக்கிறார் தாஜ்நூர். ஒரு தட்டில் இவரது பின்னணி இசையையும் இன்னொரு தட்டில் படத்தின் அத்தனை வெயிட்டையும் ஏற்றி வைத்தால் கூட, தராசு சமமாக இருக்கும் போலிருக்கிறது. க்ளைமாக்சுக்கு முன் வரும் அந்த பாடலின் ட்யூனும் குரலும் மனசுக்குள் நிலா வெளிச்சமாக அடிக்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் அது இரவாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி… அப்படியே மனதில் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாறவர்மன்.

‘இட்லி கூட சாப்பிட மாட்டேன். தோசைதான்! ஏன்னா இட்லி ஆவியில வேகுறதால…’ என்று ஒரு காட்சியில் பா.விஜய் சொல்வார். இவரே இன்னொரு ஆவிப்படம் எடுத்தால், ரசிகர்கள் தோசையை மறந்து இட்லிக்கு மாறக்கூடும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
நடிகர் கொலையும் துப்பறியும் போலீசும்…

பெர்னா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிட்டு தயாரிக்கும் படத்திற்கு “ அதிரடிவேட்டை “ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்ரீகுமார், ஆர்தன், தினேஷ்பணிக்கர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க...

Close