சுசீந்திரன், பேரரசு பாராட்டிய இரட்டை இசையமைப்பாளர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் என்று தமிழ்சினிமா இசையமைப்பாளர்களில் இரட்டையர்களின் ஆட்சி சோடை போனதில்லை. நாங்களும் ஜெயிப்போம்ல…? என்று முன்னேறி வந்திருக்கிறார்கள் சுபாஷ் ஜவகர் என்ற இரட்டையர்கள். தலக்கோணம் என்ற படத்தை தயாரித்திருப்பதுடன் அப்படத்திற்கு மியூசிக்கும் இவர்கள்தான்.
இது இவர்களுக்கு நாலாவது படம். பூவே பெண் பூவே, என்னவோ பிடிச்சிருக்கு, மீண்டும் மீண்டும் என்று இதற்கு முன்பு மூன்று படங்களுக்கு இசைமைத்திருந்தாலும், சொந்த படத்தில் இன்னும் சுதந்திரம் இருக்குமல்லவா? அதனால்தான் கை நிறைய பணத்தை கொட்டி தலக்கோணம் வரைக்கும் வந்திருக்கிறார்கள். படம் ரெண்டாவது வாரமும் ஆங்காங்கே போயிட்டு இருக்கு. பாடல்களும் பின்னணி இசையும் நிறைய இயக்குனர்களால் பாராட்டப்படுது என்றார்கள் இருவரும்.
சுசீந்திரன், பேரரசு ஆகிய இருவரும் தங்கள் படத்திற்கே வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார்களாம். பாராட்டுகள் அந்தளவுக்கு இருக்க, இசையில் தங்களது முன் அனுபவத்தையும் சொல்கிறார்கள் இவர்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட மூத்த தலைமுறை, மற்றும் இளைய தலைமுறை இரண்டு தரப்பு மியூசிக் டைரக்டர்களிடமும் கீ போர்டு வாசித்த அனுபவம் இருக்கு. எதிர்காலத்தில் நல்ல கதையுடன், அதே நேரத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த படத்திற்கு இசையமைக்கணும். அப்பதான் நம்ம இசை பட்டிதொட்டியெல்லாம் போய் சேரும் என்கிறார்கள் கோரஸாக!
தலக்கோணம் படத்தில் மரணகானா விஜி எழுதிய பாடல் ஒன்றுக்கு இவர்கள் இசையமைத்திருந்தார்கள். வரிகளில் விஷயம் இருந்ததோ இல்லையோ, நிறைய விஷமம் இருந்தது. அப்பட்டமான போர்னோ கிராபி வரிகள் அவை. இப்படியெல்லாம் வரிகள் வச்சா எப்படி எல்லா தரப்பையும் போய் அடையறது? என்றால், சற்றே ஸ்டன் ஆகிறார்கள் இருவரும். இனிமே அந்த விஷயத்துல கவனமா இருப்போம் என்றார்கள். இருந்தா சரி…!