படப்பிடிப்பில் ஒரு மணி நேரத்தை கூட வீணாக்காத சுசீந்திரன்!
‘பாயும்புலி’ ஆடியோ விழாவில் இயக்குநர் சுசீந்திரனுக்கு ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’என்கிற விருது வழங்கப் பட்டது .
விழாமேடையிலிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கவிஞர் வைரமுத்து, நடிகர்விஷால், பட அதிபர்கள் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி..மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், பாண்டிராஜ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் சூரி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரின் முன்னிலையில் இந்த விருது வழங்கப் பட்டது
வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா விருதை அறிவிக்க பிலிம் சேம்பர் முன்னாள் தலைவர் சி.கல்யாண் விருதை இயக்குநர் சுசீந்திரனுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.சிவா பேசும் போது
“சினிமாவில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்பவர்கள் மிகவும் குறைவுதான் எஸ்.பி.எம்,கே.எஸ்.ரவிகுமார்,விக்ரமன் மாதிரி தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று சிலரை மட்டுமே சொல்ல முடியும். அந்த வரிசையில் சுசீந்திரனும் இணைந்து இருக்கிறார். அவரை தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.வேந்தர் மூவீஸிடம் சொன்ன தேதிக்கு முன்னதாகவே ‘பாயும்புலி’ படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார். ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்கவில்லை ,படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார். அவரைப் பாராட்டி வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பில் ‘தயாரிப்பாளரின் இயக்குநர்’என்கிற விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ” என்றார்.