விஜய் விஷால் ஒரு ‘ திடீர் ’ சமரசம்!

எப்போது விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், விஷால் மன்றத்திற்கு தாவி முக்கிய பொறுப்புக்கு வந்தாரோ, அன்றிலிருந்தே விஷாலின் போக்கில் படு பயங்கர மாற்றம். அப்படியே விஜய்யை காப்பியடிக்க ஆரம்பித்தார். தமிழகம் முழுக்க சுற்றி வருவது, இலவசங்களை அள்ளி விடுவது என்று அச்சு அசலாக விஜய் ஸ்டைலிலேயே போனது அந்த சூறாவளி சுற்றுப்பயணங்கள்.

விஜய் ‘புலி’ என்று பெயர் வைத்தால், இவர் ‘பாயும் புலி’ என்று வைத்ததெல்லாம் இயல்பாக நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியே திட்டமிட்டு நடந்தால் கூட தப்பில்லை. அதற்காக இரண்டு படங்களும் ஒன்றாகிவிடாது. படம் நன்றாக இருந்தால் யார் படமாக இருந்தாலும் அது சூப்பர் ஹிட்டாகும். படம் மொக்கையாக இருந்தால், சூப்பர் ஸ்டார் படமாக இருந்தால் கூட, சுமார் நிலைதான் என்பதை காலம், கையில் ஒரு நாமக்கட்டியை வைத்துக் கொண்டு எழுதிக் காட்டியிருக்கிறது.

ஆனால் விஜய்யின் புலி வெளிவருகிற அதே நாளில் பாயும் புலியும் வரும் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவி, அதை விஷாலும் மறுக்காமலிருந்தாரல்லவா? அன்று அடித்தது கரண்ட் ஷாக்! ஒருவேளை இரண்டு பேருக்கும் நடுவில் ஏதோ ஒரு பனிப்போர் இருக்குமோ என்ற சந்தேகத்தை விளைத்ததே அந்த ரிலீஸ் மோதல்தான். இது மெல்ல மெல்ல விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரியவர, அவர்களுக்கும் ஷாக்!

ஏற்கனவே தமிழ்சினிமாவின் தலையில் குடம் குடமாக விளக்கெண்ணை. இதில் இவர்களும் சண்டை போட்டுக் கொண்டு ஒரே நாளில் படத்தை கொண்டு வந்தால், வாழ்நாள் முழுக்க வழுக்கல்தான் என்பதை நிமிஷத்தில் புரிந்து கொண்டார்கள். அப்புறமென்ன? இவர்களில் சில பெரிய மனிதர்கள் இரு தரப்பையும் சந்தித்து பேசினார்களாம். “ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வந்தால், கலெக்ஷன் ரெண்டாக பிரியும். ஏதாவது ஒரு படம் குப்புற விழும். ஆனால் ஒரு வாரம் இரு வாரமோ தள்ளி தள்ளி வந்தால், இரண்டுக்குமே சிராய்ப்பு இருக்காது. நாங்களும் நிம்மதியாவோம்” என்றார்களாம்.

அவர்களின் யோசனையை இருவருமே ஏற்றுக் கொள்ள, இப்போது செப்டம்பர் 4 ல் பாயும் புலி. செப்டம்பர் 15 ல் புலி என்று முடிவாகியிருக்கிறது.

நிழலும் நிழலும் மோதிக் கொண்டாலே நெருப்பு பற்றிக் கொள்கிற ஊரில், இப்படி சூப்பர் நடிகரும், காப்பர் நடிகரும் மோதிக் கொண்டால் கலகம் பிறக்காதா? கவனம்ங்ணா!

Read previous post:
படப்பிடிப்பில் ஒரு மணி நேரத்தை கூட வீணாக்காத சுசீந்திரன்!

'பாயும்புலி' ஆடியோ விழாவில் இயக்குநர் சுசீந்திரனுக்கு 'தயாரிப்பாளரின் இயக்குநர்'என்கிற விருது வழங்கப் பட்டது . விழாமேடையிலிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கவிஞர் வைரமுத்து, நடிகர்விஷால், பட...

Close