சுவாதி கொலைதான் குற்றமே தண்டனை படமா? பரபரக்கும் கோலிவுட்!
சில இயக்குனர்களின் படங்களுக்குதான், ‘எப்ப எப்ப’ என்கிற ஆர்வம் வரும்! ஆண்டாண்டு காலமாக இந்த புகழை அடைகாத்து வரும் இயக்குனர்களே கூட, “மணிகண்டன் படம் வருது போல…” என்று மண்டையை சொறிகிற அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார் மணிகண்டன். வெறும் மணிகண்டன் என்றால், அதில் ஏது சுவாரஸ்யம்? ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், படக்கென்று ஒரு ஆர்வம் வருமல்லவா?
யெஸ்… அவர் இயக்கத்தில் உருவாகி வருகிற செப்டம்பர் 2 ந் தேதி திரைக்கு வரப்போகிற படம் குற்றமே தண்டனை. காக்கா முட்டை படம் வருவதற்கு முன்பே இப்படத்தைதான் அவர் ஆரம்பித்தார். ஆனால் இதை முந்திக் கொண்டு வந்துவிட்டது காக்கா. பொதுவாகவே மணிகண்டனின் சமூக அக்கறைக்கு தனி சர்டிபிகேட் தேவையில்லை. அவர் இயக்கியிருக்கும் ‘குற்றமே தண்டனை’யும் கூட, சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையை மையமாக கொண்டதுதானாம்.
வேலைக்குப் போகும் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒருவன், பின்பு அவளை கொலை செய்வதாக போகுமாம் திரைக்கதை. கடைசியில் அந்த கொலையை செய்தது அவனா? வேறொரு ஆளா? என்பதுதான் இப்படத்தின் சஸ்பென்ஸ் என்கிறது குற்றமே தண்டனை குறித்த முதல் தகவல் அறிக்கை. அண்மையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கதையும் இப்படியே அமைந்திருப்பதுதான் ஆச்சர்யம். இத்தனைக்கும் இந்த படம் எப்பவோ துவங்கப்பட்டு எப்பவோ முடிந்தும் விட்டது.
‘சொசைட்டியில நடப்பதைதான் படமா எடுக்குறோம்’ என்று சினிமாக்காரர்களும், ‘சினிமாவில் நடப்பதை பார்த்துதான் இதுபோன்ற வன்முறைகள் நடக்கிறது’ என்று குற்றஞ்சாட்டும் சமூக காவலர்களும், இந்த குற்றமே தண்டனை விஷயத்தில் ஒரு கருத்தும் சொல்ல முடியாது. ஏனென்றால் தனித்தனியாக நடந்த விஷயம், ஒன்றாகி வந்து மிரட்டுகிறது. அவ்வளவே!