அனிதா… அனிதா…! கலங்கிய திரையுலகம்!

முத்துக்குமார், செங்கொடி என்று அவ்வப்போது தமிழ்நாட்டை உலுக்கிய இளங் குருத்துகள் வரிசையில் சேர்ந்துவிட்டார் அனிதா. எல்லா தகுதியும் உள்ள ஒரு ஏழை மாணவி, நீட் என்கிற திட்டமிட்ட தாக்குதலால் தன் உயிரை இழந்திருக்கிறார். அனிதாவின் தற்கொலை அரசியல் உலகை, பொதுமக்களின் மனசை, கடந்த இரண்டு நாட்களாக அரித்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

திரையுலகமும் தன் ஆழ்ந்த இரங்கலை, அளவுக்கு மீறிய கோபத்தை, அடக்க முடியாத கண்ணீரை மாற்றி மாற்றி காட்டிக் கொண்டிருக்கிறது.

அனிதாவின் மரணம் குறித்து ரஜினி, கமல், விஜய், விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், ராம், ரா.பார்த்திபன், உள்ளிட்ட பல்வேறு திரையுலக முக்கியஸ்தர்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள். யாரும் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ போகாமல் நீட் டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புங்கள் என்று கூறியிருக்கிறார் கரு.பழனியப்பன்.

இன்று நடிகர் சிவகுமார் தன் ஆழ்ந்த இரங்கலை பின் வருமாறு தெரிவித்திருக்கிறார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் –
ஒரு டாக்டர் மகள் –
ஒரு பேராசிரியர் மகள்

அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 – மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை. பத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும்.. குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. உண்ண நல்ல உணவு கிடையாது உடுத்த கௌரவமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய் கிடையாது. காடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும் மட்டும்,இயற்கை உபாதையை கழிக்க செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும், அனிதா போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெரும் படிப்பு படிக்கக் கூடாதா ? டாக்டர், எஞ்சினியர், ஐ.ஏ.எஸ். கனவு காணக்கூடாதா ?

ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா ? மாநில அரசின் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு. சென்னையில் தனியார் பள்ளியில் லட்சங்கள் கல்விக்கட்டணமாகக் கட்டி படிக்கும் மாணவன் திறமையும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால் என்னவென்றே தெரியாமல் பின் 11-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா ?

ஒரே நாடு சரி. ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா ? நாடு முழுவதிலும் பல்வேறு தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா ?

– சிவகுமார்

https://www.youtube.com/watch?v=gziaNn7aEbs

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குரங்கு பொம்மையை ஹிட் ஆக்கிய விஜய் சேதுபதி!

Close