ராஜாவின் பார்வை கோலிவுட் மீது…
எல்லார் கண்ணும் தமிழ்சினிமா ஃபீல்டு மீதுதான் இருக்கிறது. தரமான படங்கள்… தாராளமான சம்பளம் என்பது மட்டுமல்ல, நிலைத்த புகழுக்கும் உத்தரவாதம் தரும் ஒர்ர்ர்ர்…ரே இடம் கோடம்பாக்கம் என்பதாலும் இருக்கலாம். எங்கெங்கோ பிறந்தவர்களுக்கே இந்த ஆசை இருக்கும்போது கோயமுத்துரில் பிறந்த ராஜாவுக்கு இருக்காதா என்ன?
பிறந்தது இங்குதான் என்றாலும் வாழ்ந்தது தெலுங்கில்தான். அங்கு சுமார் 32 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் அவர். அதில் நான்கு படங்களுக்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு இங்கு வந்திருக்கிறார் ராஜா. இதற்கு முன்பு நமீதாவுடன் ஜெகன்மோகினி ரீமேக் படத்தில் நடித்தும் இருக்கிறார் இவர்.
கோவையை சேர்ந்த அம்ரிதாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ராஜா, வருங்கால மனைவியோடு வந்து பிரஸ்சுக்கு அழைப்பிதழ் கொடுத்த கையோடு தன் ஆசையையும் தெரிவித்தார். அதுதான் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது. இந்த அம்ரிதாவின் குடும்பத்தினரும், ரஜினியும் நல்ல நண்பர்களாம். ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேல் நண்பர்களாக இருக்கிறார்களாம். அந்த உரிமையில் தனது மாப்பிள்ளையை ரஜினியிடம் அறிமுகப்படுத்தினாராம் அம்ரிதாவின் தந்தை.
தமிழ் படங்களில் நடிக்க ஆசியும் வழங்கியிருக்கிறார் ரஜினி.
பார்ப்பதற்கு லுக்காகவும் இருக்கும் ராஜாவுக்கு லம்ப்பாக ஒரு வாய்ப்பு கொடுங்க தமிழர்களே…