தலைமுறைகள் நிகழ்ச்சியில் பாலாவை ‘ வெளுத்த ’ நடிகர்!
‘தலைமுறைகள்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்ததிலிருந்தே தனது ஞானத் தகப்பனை இன்னும் இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார் சசிகுமார். ‘படத்தில் வரும் காட்சியை போலவே நிஜத்திலும் அமைந்ததே, அதுதான் எனக்கு வியப்பு’ என்றார் சசி.
வேறொன்றுமில்லை, தலைமுறைகள் படத்தில், தாத்தாவின் கதையை எழுதி அந்த கதைக்கான விருதை பேரன் சசிகுமார் வாங்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த நேரத்தில் அந்த விருதை நேரில் பெறுவதற்கு அவர் உயிரோடு இல்லை. அதனால் அவரது பேரன்தான் அந்த விருதை ஜனாதிபதி கையிலிருந்து பெற்றான். இந்த ஒற்றுமையைதான் உணர்ச்சி பெருக்கோடு குறிப்பிட்டார் சசி.
கலைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை ‘தலைமுறைகள்’ படத்தை இயக்கியதன் மூலம் நிருபித்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்த படத்தை தயாரிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற சசி, படத்தில் பங்கு பெற்ற அத்தனை பேரையும் அந்த மேடையில் பேச விட்டார்.
பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் ரயில் ரவி என்பவரையும் பேச அழைத்தார்கள். இந்த படத்தில் மிக முக்கியமான நண்பன் ரோலில் நடித்திருக்கிறார் அவர். இவருக்கும் இயக்குனர் பாலாவுக்கு என்ன சண்டை சச்சரவோ தெரியாது. தனது உரையில் பாலாவை லேசாக சுரண்டி, ‘சண்டைக்கு வர்றீங்களா ஃபிரண்டு’ என்பதை போல பேச ஆரம்பித்தார். நான் ‘பரதேசி’யாக திரிந்து கொண்டிருந்த காலத்தில், ‘பிதாமகனும்’, ‘கடவுளும்’ கூட கைவிட்ட நேரத்தில் எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்து நடிக்க வைத்தார் என் நண்பர் பாலுமகேந்திரா என்று அவர் சொல்ல, பேச்சின் முன் சில வார்த்தைகளை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டது மீடியா.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவரை ரவுண்டு கட்டிய நிருபர்கள் சிலர், ‘உங்களுக்கும் பாலாவுக்கும் என்னங்க பிரச்சனை? இப்படி போட்டு வார்றீங்களே..? என்று கேட்க, ‘என் வலி எனக்குதான் தெரியும்’ என்றார் அவர். அப்புறம் விசாரித்தால்தான் தெரிகிறது. இவரும் பாலாவும் நண்பர்களாம். என் படத்தில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியே இவரை பல வருடங்களாக ஏமாற்றி வருகிறாராம் பாலா.