தலைவன் / விமர்சனம்

சோப்பு டப்பாவுக்கு சுண்ணாம்பு டப்பா போட்டியாக இருந்த காலத்தை இப்போது நினைத்தாலும் பக்கென்கிறது. ‘தலைவா’ படத்தின் ஷுட்டிங் நடக்கும் போதுதான் ‘தலைவன்’ என்ற படத்தின் ஷுட்டிங்கும் நடந்தது. அந்த படத்தின் ஹீரோவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தது. இந்த படத்தின் ஹீரோவுக்கு பேங்க் பேலன்சும் பொலிட்டிக்கல் பேக்ரவுண்டும் ஸ்டிராங்காக இருந்தது. யாரை யார் வெல்லுவாரோ என்று ஜனங்கள் கடுகாய் பொறிந்து கொண்டிருந்த நேரத்தில்தான், மிளகாயாய் உறைத்தார் ஒருவர். (ஹ்ம்ம் அந்த கதையெல்லாம் இப்போது எதற்கு?) பாஸ் விஜய்க்கு போட்டியா? என்கிற பெரும் ஆர்வத்தோடும் கேள்வியோடும் தியேட்டருக்குள் நுழைந்தால், நமத்துப்போன பாப்கார்ன் மாதிரி ஒரு கதை. அதை மறுபடியும் சூடு பண்ணுகிற முயற்சியில் மொத்த டீமும்!

பேங்கில் கொள்ளையடிக்கிறார் பாஸ். அதுவும் மேற்படி ‘பேங்க்கை கொள்ளையடிக்க போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ’ என்று போலீசுக்கே சவால் விட்டுவிட்டு. கண்ணில் போட்டிருந்த கூலிங்கிளாசை கூட கழற்றி வைத்துவிட்டு வேவு பார்க்கும் அதே போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவர் பணத்தை அடித்துக் கொண்டு போக, பொச பொசவென ஆகிறது போலீஸ். இப்படி கமிஷனர் மனைவியின் கழுத்து சங்கிலியிலேயே கை போடுகிற அளவுக்கு பிஸ்தாவாக இருக்கும் பாஸ், ஏன் அப்படியெல்லாம் செய்கிறார்? பிளாஷ்பேக்.

செவனே போற நல்லவனையும் சீண்டிப்பாக்குற போலீஸ் அதிகாரிகளால், மொத்த குடும்பத்தையும் தொலைத்துவிட்டு அநாதையாக நிற்கிறார் பாஸ். அதற்கு பழிவாங்கதான் இப்படி சவால் விட்டு திருடுவதும், சந்தடி சாக்கில் மிரட்டுவதும்… இவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இவரை கமிஷனிரின் பொண்ணே காதலிக்க, வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் டூயட் பாடுகிறது ஜோடி. இவ்வளவு சாதாரணமாக கதை நகர்ந்தாலும் இன்டர்வெல் ட்விஸ்ட், ‘என்னமோ இருக்குப்பா இந்த படத்துல’ என்று எண்ண வைப்பதால் செகன்ட் ஆஃப் காணும் முஸ்தீபுகளில் இறங்குகிறார்கள் ரசிகர்கள். அப்புறம் என்னாச்சு?

பாஸ்… இன்னும் போக வேண்டிய தொலைவு நிறைய இருக்கு. அதுக்கு முதல்ல கூத்துப்பட்டறைக்கு போகணும். விதவிதமான காஸ்ட்யூம், விசேஷமான சிரிப்பு என்று ஆளை கவர முயன்றாலும் நடிப்புங்கிற சிலேட்ல நாலு மார்க் வாங்கறதுக்குள்ள எத்தனை பலப்பம் உடையுது? ….ஸ்ஸ்ஸ்ப்பா முடியல. நல்லவேளை, நடிப்புங்கற வெயிட்டை இவர் மீது அளவோடு ஏற்றணும்ங்கிற கான்ஷியஸ் இயக்குர் ரமேஷ் செல்வனுக்கு இருந்திருக்கிறது. படத்தில் பாஸ் பேசிய வசனங்களை கூட்டி கழித்து பார்த்தால், நாலு ஏஃபோர் பேப்பரை தாண்டியிருக்காது. மற்றவர்களை நிறைய பேச விட்டு கதையை நகர்த்தியிருக்கிறார். பலே வெள்ளையத்தேவா.

அந்த ஹீரோயின் மூக்கும் முழியுமாக, சேட்டு கடையில் அடகு வைச்ச வெங்கல குண்டான் போல எவ்வளவு அழகு! நிகிதா படேலாம். பொண்ணுக்கு பர்மெனென்ட்டா சென்னையில ஒரு பிளாட் சொல்லுங்கப்பா.

நடுவுல கொஞ்சம் கதை ஜெர்க் அடிக்கும் போது ஆபத் பாந்தவனாக, அநாதை ரட்சகனாக, அல்டிமேட் பீஸ்சாக கை கொடுக்கிறார் சந்தானம். டிராக் மொக்கையாக இருந்தாலும், அதை தன் தனி திறமையால் உயர்த்தி வைக்கும் சந்தானத்தின் கெப்பாசிடி அருமையோ அருமை. அப்படியே இவரை முதல் பாதியிலும் வரவழைத்திருந்தால் ஒரு கமர்ஷியல் பொங்கலே கிடைத்திருக்கும்.

இசை வித்தியாசாகர். சில பாடல்களின் ட்யூன் மீண்டும் ஆசைப்பட வைக்கிறது. கே.எஸ்.பூபதியின் ஒளிப்பதிவும் லைட்டிங்கும் செம ரிச்.

வெறும் பஞ்சாயத்து ‘தலைவன்’

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்பா, அம்மா, மனைவி சகிதம் வாக்களிக்க வந்த அஜீத்

ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுங்கள் என்று மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லி வந்த அத்தனை நட்சத்திரங்களும் இன்று வாக்கு சாவடிக்கு அதிகாலையிலேயே வந்து வாக்களித்தார்கள். ரஜினி, கமல், அஜீத்,...

Close