நல்ல விதைகள் தானாக முளைத்துக் கொள்ளும்!
நல்ல விதைகள் தானாக முளைத்துக் கொள்ளும் என்பதற்கு கே.பி.செல்வா, நவீன் முத்துசாமி இருவரும் நல்ல உதாரணமாக இருப்பார்கள். இவர்கள் இயக்கியிருக்கும் குறும்படம் நம்மை அப்படிதான் நினைக்க வைத்தது. ரவுடிசம், ஹைக்கூ என்ற இரு குறும்படங்களும் சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடியவை. அந்த சொற்ப நிமிடத்திற்குள் தங்களின் சிற்ப திறமையை காட்டிவிட்டார்கள் இருவரும்.
முதலில் ரவுடிசம் படம் எப்படி?
வடசென்னையில் நடக்கும் அரசியல் கொலைகளும், அதற்கான பின்னணியும்தான் கதை. வட்டச் செயலாளர் போஸ்டிங்னா என்ன சாதாரணமா நெனைச்சியா? அரசியல் அஸ்திவாரமே அங்கதான் ஆரம்பிக்குது. அதுக்காக எத்தனை கொலை கூட பண்ணலாம் என்று லாஜிக் பேசுகிற வெள்ளை வேட்டிகள் தங்களுக்குள் வெட்டிக் கொண்டு சாவதை தரணி, ஹரி, ராம்கோபால் மாதிரியான படா படா பெரிய்ய்ய்யய டைரக்டர்கள் லெவலுக்கு சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.பி.செல்வா. இத்தனைக்கும் பட்ஜெட்டும், ஷுட்டிங் நாட்களும் கையை கடிக்காத நேரத்திற்குள், செலவுக்குள்!
படத்தில் ஒரு டயலாக்… என்னா சாவு பயம் வந்துருச்சா? என்று ரவுடியை பார்த்து அரசியல்வாதி கேட்க, இல்ல… வாழணும்னு ஆசை வந்துருச்சு என்கிறான் அவன். இப்படி சின்ன வசனங்களில் கூட ஆஹா போட வைக்கிறார் கே.பி.செல்வா.
ஹைக்கூ எப்படி?
நெகிழ வைக்கும் கதை. உள்ளூர் கிணற்றில் நீச்சலடித்து பழகும் ஒருவன் திடீரென விபத்தில் தன் கைகள் இரண்டையும் இழக்கிறான். எல்லாவற்றுக்கும் அண்ணனின் உதவிதான் அதற்கப்புறம். அதே அண்ணன் கண்ணீர் மல்க தன் தம்பியை கிணற்றில் தள்ளி கொல்ல முற்படும் போது ஏற்படும் திருப்பம் என்ன? சடக் சடக்கென தேம்ப வைத்துவிடுகிறார் அறிமுக இயக்குனர் நவீன் முத்துசாமி.
முதலில் தம்பியை கிணற்றில் தள்ளிவிடும் காட்சியோடு துவங்குகிறது படம். இந்த ஒரே காட்சியை வைத்துக் கொண்டு இரண்டு முறை ட்விஸ்ட் அடிக்கிறது திரைக்கதை. அதை பொருத்தமான இடத்தில் கட் பண்ணி சேர்த்திருக்கிறார் எடிட்டர் சுதர்ஷன். ஒரு காட்சியில் அசரடித்திருக்கிறார் நவீன் முத்துசாமி. கிணற்றில் தம்பி விழுந்து தத்தளிக்கும் காட்சியை ஒரு எறும்பு நீருக்குள் தத்தளிக்கும் காட்சியோடு ஒப்பிடுவதுதான் அது. அங்கும் ஒரு ட்விஸ்ட்!
இரு படங்களிலும் நடித்த நடிகர்கள், பின்னணி இசையமைத்த நந்தா உள்ளிட்ட அத்தனை பேரையும் பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்.
பெரிய பெரிய ஹீரோக்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், அவர்களுக்கு கொடுக்கும் வட்டி காசில் ஒரு படம் எடுக்கலாம். அதை இந்த தம்பிகளை வைத்து முயற்சிக்கலாம்!
பின் குறிப்பு- இந்த படத்தில் பங்குபெற்ற டீம், சென்னையிலிருக்கும் பிரிட்ஜ் அகடமி மாணவர்களாம். வாத்தியார்களுக்கு நன்றி.