திறந்திடு சீசே- விமர்சனம்
நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என்பதை போல, ‘மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற எச்சரிக்கை வாக்கியத்தை பிரிண்ட் பண்ணி அதை ஷுட்டிங் ஸ்பாட்டில் பளிச்சென்று தொங்க விட்டு ‘நிரந்தர எச்சரிக்கையோடு’ இந்த படத்தை எடுத்திருக்கலாம். படம் முழுக்க ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் பச்சை தண்ணியை குடிப்பது போல ‘குடித்துக்’ கொண்டேயிருக்கிறார்கள். ஆச்சர்யம் நம்பர் 100. இந்த படம் மதுவுக்கு எதிரான படம்! அதற்காகவே பாராட்டலாம் இந்த அறிமுக இயக்குனர் நிமேஷ் வர்ஷனை.
பப்புக்கு சரக்கடிக்க வரும் தன்ஷிகாவுக்கு புல் மப்பு ஏறிவிடுகிறது. அந்த பாரில் அவருடன் சேர்ந்து பல பெண்களும் சரக்கடித்துக் கொண்டிருக்க, தன்ஷிகா மீது என்ன காதலோ? சரக்கு சப்ளையர்களான வீரவன் ஸ்டாலினுக்கும், நாராயணனுக்கும் அந்த பெண்ணின் மீது ஒரு இச்சை! அவர் சரியுற வரைக்கும் காத்திருக்கிறார்கள். அவர் கண்விழித்து பார்க்கும் போது பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகிறார். என் வருங்கால புருஷனுக்கு கொடுக்க நான் பொத்தி பொத்தி வச்சுருக்கிற ஒரே விஷயம் அதுதான். (வேறொன்றும் இல்ல. கற்பு கற்பு) அதையும் அழிச்சிட்டீங்களே பாவிகளா? என்கிறார். உங்க ரெண்டு பேர்ல யாரு என்னை கெடுத்தவன்? என்று இருவரையும் பிடித்துக் கொண்டு அவர் படுத்தி எடுக்க, நீயா நானா பஞ்சாயத்து நடக்கிறது. முடிவில் ‘என்னை அணைக்கும் போது நான் அவன் முதுகை பிராண்டி வச்சேன். எங்க… உன் முதுகை காட்டு’ என்று அவர் வீரவனை இழுக்க, அவர் பின் முதுகில் செம பஞ்ச்! நகக்கீறல்தான். துப்பாக்கியை தூக்குகிறார் தன்ஷிகா. அப்புறம் என்னாச்சு என்பதுதான் இந்த படத்தின் ட்விஸ்ட்.
குடும்ப பெண்களே கூட, ‘ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி’ என்று திரிகிற நாட்டில், இப்படியொரு படம் வருவதில் ஆச்சர்யமில்லை. அதற்காக நமக்கே மூச்சு முட்டுகிற அளவுக்கு அந்த பார் ஏரியாவில் பார்க்கிங் ஆகிவிடுகிறது படம். இன்டர்வெல் வரைக்கும் வெளியே வரவேயில்லை. திரும்ப திரும்ப பாட்டில், குடி, தன்ஷிகாவின் போதை கண்கள், என்று சுற்றி சுற்றி வருகிறார்கள். நல்லவேளையாக வசனங்கள் காப்பாற்றுகின்றன. அதில் பாதியை சென்சார் குதறிவிடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவ்வளவு பச்சை! தன்ஷிகா திடீரென -துப்பாக்கியை தூக்க, ‘அதைவிட பெரிசா இவன் வச்சுருக்கான்’ என்று நாராயணன் சொல்வதெல்லாம் துப்பாக்கியை அல்ல என்பது யாருக்குதான் புரியாது. இப்படி படம் முழுக்க நிறைய நிறைய….
தன்ஷிகாவுக்கு நிறைய பொறுமை. ஒரு கட்டத்தில் நாராயணன் இவரையே செம வாங்கு வாங்குகிறார். இதெல்லாம் ஒரு பிகர்னு…? எவ்வளவுதான் போதையா இருந்தாலும் இவள பார்த்தா எனக்கெல்லாம் மூடு வராது என்று இஷ்டத்திற்கு பேசுகிறார். எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற தன்ஷிகாவுக்கு பொறுமை திலகம் பட்டமே கொடுக்கலாம். ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வரும் வீரவனுக்கு இவர் நங்கென்று உதை கொடுக்கிற இடம், யய்யய்யா சாமீய். மறுபடியும் நினைக்கவே திகீர் என்கிறது.
இன்டர்வெல்லுக்கு பிறகுதான் கதையும் சம்பவங்களும் பார் ஏரியாவை விட்டு வெளியே வருகிறது. அதில் நுணுக்கமான ஒரு மனவியல் அடங்கியிருக்கிறது. மனைவியியலும் அடங்கியிருக்கிறது. குடிச்சு குடிச்சு இந்த சமுதாயத்துக்கும், குடும்பத்துக்கும் பாரமா இருக்காதீங்கடா என்பதை பொட்டில் அறைந்த மாதிரி சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
துப்பாக்கி முனையில் தன்ஷிகா மிரட்டுவது கூட பயமில்லை. என் கண்ணெதிரே உன் மனைவியை உன் நண்பனே கற்பழிக்கணும் என்று கூறியபடியே அதற்கான ஆயத்தங்களை செய்கிறாரே… அங்குதான் மடமடவென முறிகிறது ஆணென்ற ஆனவம். என்னதான் இருந்தாலும் ஒருவனின் குடியை மறக்க வைக்க இப்படியொரு ட்விஸ்ட்டா?
தன்ஷிகா, நாராயணன், வீரவன் ஸ்டாலின் என்று எல்லாருமே ஆகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் ரேப் என்று சொன்னால் கூட சுட்டுத்தொலைத்துவிடப் போகிறாள் என்று அஞ்சி, படம் முழுக்க ரேப்பை ஆங்கில எழுத்தான R என்று சொல்லியே சமாளிக்கும் நாராயணின் கேரக்டரை ரசிக்க முடிகிறது.
அரை பாதி இருட்டிலேயே சிக்சர் அடிக்கும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ். கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசையும் திகிலூட்டுகிறது.
ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்ததை தவிர்த்திருந்தால், திறந்திடு சீசே சிறப்பாக வந்திருக்கும். வேறுவழியில்லை என்பதால் திறந்திடு சீ ஷேம்!
-ஆர்.எஸ்.அந்தணன்