‘முப்பது நாள் போதும்…’ லிங்காவில் ரஜினியின் கால்ஷீட் அவ்ளோதான்
கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது வெறும் ரெண்டே நாட்கள்தான். மிச்சமெல்லாம் லொல்ளு சபா ஜீவாவே ரஜினியாக நடித்தவை என்றொரு செய்தி கோச்சடையானின் பளபளப்புக்கு குண்டு வைத்து வருகிறது. பொதுவாகவே ரஜினியின் உடல் நிலை அதிக வெப்பத்தை தாக்கு பிடிப்பதில்லை என்றும் அதனால் அவரை முடிந்தவரை கஷ்டப்படுத்தாமல் படம் எடுக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறாராம் கே.எஸ்.ரவிகுமார்.
அதன் காரணமாக லிங்கா படப்பிடிப்புக்கு ரஜினியிடம் வெறும் முப்பது நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறதாம். முறுக்கு மீசை, அழகான ஹேர் ஸ்டைல் என்று இந்த படத்தில் ரஜினியின் கெட்டப், ‘ச்சும்மா அதிருதில்ல’ டைப்தான். என்றாலும், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் ரஜினியும் அருகருகில் நின்றால், யார் ரஜினி? யார் ராக்லைன்? என்பதை போலவே இருக்கிறது ரஜினியின் கெட்டப். ஒருவேளை தயாரிப்பாளரை பார்த்துவிட்டு, இந்த கெட்டப் கூட நல்லாதானே இருக்கு என்று இவரைப்போலவே ரஜினியை மாற்றிவிட்டாரோ கே.எஸ்.ரவிகுமார்?
இதற்கிடையில் படம் பற்றி வருகிற செய்திகள் ஒவ்வொன்றும் சென்ட்டிமென்ட்டில் ஊறப்போட்டவை. முத்து, படையப்பா ஆகிய இரு படங்களும் மைசூரில் படமாக்கப்பட்டவையாம். அந்த வகையில் இந்த படத்தின் முழு ஷுட்டிங்கையும் இதே மைசூரில் வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினிக்கு ரெண்டு கெட்டப் என்பதால் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அனுஷ்காவுடன் மைசூரில் ஆடிப்பாடும் ரஜினி, சோனாக்ஷி சின்காவுடன் ஆடுவதற்காக வெளிநாட்டுக்கு பறக்கக் கூடும் என்பது இப்போதைய சுட சுட.