இதென்ன வயாக்ரா விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பு? சேரன் கேள்வி திக்குமுக்காடிய இயக்குனர்

திருந்துடா காதல் திருடா! ஒரு படத்தின் தலைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதில் ஆயிரம் கருத்தொற்றுமைகள் இருக்கிறது. ஆயிரம் கருத்து வேற்றுமைகளும் இருக்கிறது. விரைவில் வெளிவர துடித்துக் கொண்டிருக்கும் ‘சரவணன் என்கிற சூர்யா’ படத்தின் தலைப்பு பலருக்கு பிடித்திருந்து சூர்யாவுக்கு பிடிக்காமல் போனதால், தற்போது அதன் தலைப்பு ‘போஸ் பாண்டி’ ஆகிவிட்டது. அப்படிதான் ‘திருந்துடா காதல் திருடா’ தலைப்பையும் மாற்றிவிட துடிக்கிறார் சேரன்.

இவருக்கும் இந்த தலைப்புக்கும் ஒரு சின்ன வாய்க்கால் வரப்பு பிரச்சனை கூட இல்லை. இருந்தாலும் சேரன் நினைப்பது எதற்காக? இந்த படத்தின் தயாரிப்பாளர் சனல் தோட்டம், சேரனின் நண்பராம். மலையாளி என்றாலும், துபாயில் வசிப்பவர். சேரன் அங்கு செல்லும்போதெல்லாம் சகல சவுகர்யங்களும் செய்து தருகிற அளவுக்கு இவர் மீது பாசம் கொண்டவர். அந்த ஒரு உரிமையில்தான் திருந்துட காதல் திருடா படத்தின் தலைப்பை மாற்ற சொன்னார் சேரன். அதுமட்டுமல்ல, இந்த படத்தின் கதை எனக்கு தெரியும். ஏற்கனவே சொல்லியிருக்காங்க. அந்த அருமையான கதைக்கு இப்படி வயாக்ரா மாத்திரை விளம்பரம் மாதிரி ஒரு தலைப்பா? அதுதான் ஷாக்கா இருக்கு என்றார்.

துபாய் வாழ் தமிழர்களின் மூன்று தலைமுறை கதைதான் இந்த தி.கா.தி. தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம், இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் வெளியிடுகிற திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. துபாயிலிருக்கும் இந்தியர்களின், குறிப்பாக தமிழ், மலையாள சகோதரர்களின் போராட்டம், சந்தோஷம் பொழுதுபோக்கு எல்லாவற்றையும் இந்த படத்தில் பார்க்கலாமாம்.

மீண்டும் சேரன் பேசியதை எடுத்துக் கொள்வோம். பல வருஷங்களுக்கு முன்பு நான் பாரசீக ரோஜான்னு ஒரு படத்தை இயக்குகிற முயற்சியிலிருந்தேன். இங்கிருந்து துபாய்க்கு வேலைக்கு போகும் இளைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதை அது. அதற்காக துபாய் போய் சில நாட்கள் தங்கியும் இருந்தேன். இப்ப மாதிரி சொகுசான வாழ்க்கை அப்போது இல்லை. சுமார் ஆயிரம் தொழிலாளர்களை ஒரே இடத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டு வேலை வாங்குவார்ள். பிறகு அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர இரவு பதினொரு மணி ஆகிவிடும். அதற்கப்புறம் குளித்துவிட்டு சமைத்து சாப்பிடுவார்கள். சுமார் 400 அடுப்புகளை ஒரே இடத்தில் வைத்து அவர்கள் சமைப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கும். சில மணி நேர உறக்கம் கூட இருக்காது. காலையில் இவர்களை அழைத்து செல்ல வேன் வந்துவிடும். சில பல காரணங்களால் அந்த கதையை என்னால் படமாக்க முடியாமலே போனது என்றார் சேரன்.

அதிருக்கட்டும்… சேரனின் விருப்பப்பட திருந்துடா காதல் திருடா தலைப்பு மாறுமா?

Read previous post:
சூர்யாவின் அலறல் சத்தம் என் காதில் ஒலிச்சுகிட்டேயிருக்கு! ‘ அஞ்சான் ’ திகில் பற்றி லிங்குசாமி

விளம்பர புலி என்பார்கள் கலைப்புலி தாணுவை. விட்டால் அவருக்கே ட்யூஷன் எடுப்பார் போலிருக்கிறது யூடிவி தனஞ்செயன். சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அதனுடன் இணைந்து...

Close