சூர்யாவின் அலறல் சத்தம் என் காதில் ஒலிச்சுகிட்டேயிருக்கு! ‘ அஞ்சான் ’ திகில் பற்றி லிங்குசாமி

விளம்பர புலி என்பார்கள் கலைப்புலி தாணுவை. விட்டால் அவருக்கே ட்யூஷன் எடுப்பார் போலிருக்கிறது யூடிவி தனஞ்செயன். சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அதனுடன் இணைந்து தயாரிப்பது யூடிவி நிறுவனமும் கூட! அப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட இரண்டே நாளில் ஒன்றரை மில்லியன் ஹிட்ஸ்! இந்த பெருமையை தந்தது சூர்யாவின் ரசிகர்கள் அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? சட்டென அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. லிங்குசாமிக்கும் சூர்யாவுக்கும் போன் அடித்தார். ‘யூ ட்யூப்ல இந்த டீஸருக்கு இவ்வளவு பெரிய இடத்தை வழங்கிய உங்க ரசிகர்களை தேர்வு செய்து அவங்களை நேரில் வரவழைச்சு உங்களோட கலந்துரையாட வைக்கலாம்னு இருக்கேன். ஆர் யூ ரெடி?’ என்று கேட்க, சட்டென்று ‘யெஸ்’ சொல்லிவிட்டார்கள் இருவரும்.

ஸ்டார் ஓட்டல் என்பதால் கணிசமான ரசிகர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் மின்னியது. அண்ணா… கால்ல அடிபட்டுச்சே இப்ப பரவால்லயா? குழந்தை ஸ்கூல்ல நல்லா படிக்குதா? அண்ணி எப்படியிருக்காங்க? போன்ற கேள்விகளோடு அஞ்சான் படத்தின் இண்டு இடுக்கையெல்லாம் கேள்விகளால் தோண்டி துளைத்துவிட்டார்கள் அத்தனை பேரும். ‘என் சந்தோஷத்திற்கும் உற்சாகத்திற்கும் காரணமே நீங்கதானே’ என்று பதிலுக்கு சூர்யாவும் அன்பு வீச, அந்த ஸ்டார் ஓட்டல் வளாகமே ‘அன்பு மலர்களே நம்பி இருங்களேன்…’ என்றானது.

‘இதுவரைக்கும் நான் நடிச்ச படங்களில் இது வேற மாதிரியா இருக்கும். ஸ்கிரீன் ப்ளேவே வேற. நிச்சயம் எந்த படங்களிலும் பார்த்திருக்க முடியாது’ என்றார் சூர்யா. ஆக்ஷன் காட்சியில் 130 கிலோ எடையுள்ள ஒரு ஸ்டண்ட் நடிகர் பாய்ந்து வந்து சூர்யா காலில் விழுந்ததையும் சூர்யா அலறியதையும் குறிப்பிட்டார் லிங்குசாமி. ‘அந்த அலறலை என்னால் இப்பவும் மறக்க முடியாது. நான் அந்த இடத்தை எட்டிப் பார்க்க கூட தைரியமில்லாமல் இருந்தேன். அதற்கப்புறம் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் அதே ஸ்டன்ட் மேனோடு அதே காட்சியில் நடித்தார் சூர்யா’ என்று லிங்குசாமி கூற, விசில் பறந்தது ரசிகர்களிடமிருந்து.

‘ஸ்டன்ட் கலைஞர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பதை நினைச்சு பார்க்கிறேன். எனக்காவது பரவாயில்லை. அவங்க பைட் சீன்களில் அடிபட்டு படுத்துட்டாங்கன்னா மறுபடியும் ஷுட்டிங் போற வரைக்கும் குடும்பம் கஷ்டத்தைதான் அனுபவிக்கும். அவங்க இப்ப செய்யுற சாகசங்களுக்கு எல்லாம் ஐம்பது வயசுக்கு மேல உடல் ரீதியா நடக்கக் கூட முடியாம சிரமப்படுவாங்க. அதனால் ஸ்டண்ட் யூனியன்ல இருக்கிற எல்லாருக்கும் வருஷத்துக்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ இலவசமா பிசியோ தெரபி கொடுக்கறதுக்கு ஒரு மருத்துவ முகாம் நடத்தலாம்னு இருக்கேன்’ என்றார் சூர்யார்.

கூட்டத்திலிருந்து ஒரு வெறிபிடித்த ரசிகர் கேட்டார். ‘அஞ்சான் பார்ட் 2 வருமா?’ என்று. அதற்கு பாசிட்டிவான பதிலைதான் கூறியிருக்கிறார் லிங்குசாமியும்!

Read previous post:
ஸ்பாட்ல வச்சு இன்விடேஷன்? அமலாபாலை நேரம் பார்த்து வெளுத்த விவேக்!

அமலாபால் திருமணத்திற்கு பிறகு அவர் நடித்து வரும் முதல் படம் ‘வேலையில்லா பட்டதாரி’யாகதான் இருக்கும். கொஞ்சம் கூட புதுப்பொண்ணு களையில்லாமல் அதே நடிகையாக வந்திருந்தார் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு....

Close