ஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும்! நெகிழ வைத்த விஜய் சேதுபதி
‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள் ஒருவரோ, இருவரோதான். அந்த இருவரிலும் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம். பிற ஹீரோக்கள் அவரை பார்த்து பாடம் படித்துக் கொள்வது அவசியமும் கூட.
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன விஜய் சேதுபதி, தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிக்கு பெற்றுக் கொடுத்த வாய்ப்புதான் தர்மதுரை. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய் சேதுபதி, அவ்வளவு பேர் முன்னிலையிலும் சாஷ்டாங்கமாக தன் குருநாதர் காலில் விழுந்து வணங்கியதை வாய்பிளந்து கவனித்தது கூட்டம்.
இந்த படம் சம்பந்தமான பிரஸ்மீட்டில் பேசிய சீனு ராமசாமி, “அப்பாக்கள் பிள்ளைகளை கை பிடித்து அழைத்துக் கொண்டு போய் கிரவுண்டுக்குள் இறக்கிவிடுவார்கள். குழந்தை வளர்ந்து அப்பாவை கை பிடித்து அழைத்துச் சென்று கிரவுண்டுக்குள் இறக்கிவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது எனக்கு. நான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளிவராமல் நின்று விட்டது. இந்த நேரத்தில் என்னை அழைத்து இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு என்னை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமேயில்ல” என்ற மறுப்புடன் மைக்கை பிடித்தார் விஜய் சேதுபதி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினாலும், என்கிட்ட முழு கதையையும் சொல்லி, “பிடிச்சுருக்கா. இந்த சீன் எப்படியிருக்கு” என்றெல்லாம் என்னிடம் கேட்டவர் சீனு ராமசாமி. அப்படியெல்லாம் என்னிடம் கேட்கணும்னு அவசியமேயில்ல. ஆனாலும் கேட்பார். நானும் அவரும் அந்த ஸ்கிரிப்ட் பற்றி விடிய விடிய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். நான் வறுமையில் இருந்த நேரத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். நீ நல்ல நடிகன்டா. கண்டிப்பா பெரிய இடத்துக்கு வருவே என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். என் மனைவிகிட்ட கூட, மகளே கவலைப்படாதே. சினிமாவில் இவன் பெரிய இடத்துக்கு வருவான்னு சொல்லிகிட்டே இருப்பார். அது மட்டுமல்ல, பார்க்கும் போதெல்லாம் ஒரு 100 ரூபாய் செலவுக்கு கொடுப்பார்” என்று பழசை அப்படியே நெகிழ்ச்சியோடு தன் நினைவுக்கு கொண்டு வந்தார் விஜய் சேதுபதி.
இப்படியொரு நெகிழ்ச்சியான நினைவலைகளுடன் கூடிய பிரஸ்மீட் நடந்து எத்தனையோ நாளாச்சு. வாழ்க விஜய் சேதுபதி!
https://www.youtube.com/watch?v=BszInqG2qvY