அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!
போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு அறிமுகத்தில் சீனியர் என்றாலும், அறுவடையில் தன்னை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாராவை எப்போதும் விரட்டிக் கொண்டேயிருக்கிறார் த்ரிஷா. அதென்ன கேரள மாந்திரீகமோ தெரியவில்லை. நயன்தாராவின் காட்டில் மட்டும்தான் நல்ல மழை! அதற்காக அசர முடியாதல்லவா?
அநேகமாக ரிட்டையர் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷா, முன்னிலும் அழகாகி, முன்னிலும் இளமையாகி, முன்னிலும் தாராளமாகிக் கிடக்கிறார் இப்போது. இந்த நேரத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவு மிக மிக முக்கியமானது. (நமக்கா, அவருக்கா?) இனி மரத்தை சுற்றி ஓடும் ஹீரோயின்கள் ரோலில் நடிக்கப் போவதில்லையாம். ஒன்லி ஹீரோயின் சப்ஜெக்ட்ஸ் இருந்தால் மட்டுமே அப்படத்தில் நடிக்க தீர்மானித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கதாநாயகியை மையப்படுத்திய கேரக்டர்களோடு வரும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அவர் கொடுக்கும் சலுகை, ஆலமரத்தில் விளைந்த ஆப்பிள் கொத்து.
பொருளாதார உதவியும் செய்து வியாபாரத்தில் பார்ட்னராகவும் தன்னை இணைத்துக் கொள்கிறாராம். நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்காக சொந்தப்படம் எடுக்க கிளம்பிவிட்டார் அல்லவா? அதைப்போல த்ரிஷாவும் இறங்கினாலும் இங்கு விக்னேஷ் சிவனுக்கு பதிலாக த்ரிஷாவின் கேரியர்தான் விக்னேஷ் சிவன் போல உட்கார்ந்திருக்கிறது. இவர்களின் இந்த சமார்த்தியமான அணுகுமுறை, இன்னும் சில வருஷத்துக்கு இவர்களின் நாற்காலிக்கு ஆபத்தில்லாமல் வைத்திருக்கும் போல தெரிகிறது.
எப்படியிருந்தாலும் தேன்ல வழுக்கி, ஜாங்கிரியில் புரளப் போவது திருவாளர் ரசிகன்தான். நல்லாயிருக்கட்டும்…