வாலுவுக்கு ஹன்சிகாவும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்
இலங்கைக்கு போன அனுமனுக்கு உட்காருவதற்கு சேர் தரவில்லையாம் ராவணன். அதற்காக அஞ்சவில்லை அனுமன். தனது வாலை ஒரு மைல் நீளத்திற்கு வளரவிட்டார். பின் அந்த வாலை பிரம்பு சேர் போல வட்ட வட்டமாக சுருட்டி அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டார். அது ராவணனின் சிம்மாசனத்தை விட உயரமாக இருந்தது.
ஈ அடிக்கிற இடத்துல இரும்புக்கு வேலை இல்லாமலா? வாலு பற்றிய செய்தியில் இந்த வாலு மேட்டர் இல்லாமலா? அனுமனின் வாலை போலவே சிம்புவின் வாலு திரைப்படத்தின் அக்குபஞ்சர் அநியாயமும் இழுத்துக் கொண்டே போகிறது. அதுவும் ரெண்டு மூணு வருஷங்களாக!
சிம்புவே திருந்தி கால்ஷீட் கொடுத்துவிட்டார். ‘வாலு’ படப்பிடிப்பும் வேக வேகமாக வளர்ந்து வந்தது. இந்த நேரத்தில்தான் பழைய டயரில் பக்கவாட்டு கிழிசல். இன்னும் இரண்டே நாள் ஹன்சிகாவின் கால்ஷீட் இருந்தால் படமே முடிந்துவிடும் என்றார்களாம். தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, ஆந்திரா சினிமாவிலும் ஆகப்பெரிய ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் ஹன்சிகா, எப்படியோ போராடி ஒதுக்கி இரண்டு நாட்கள் கொடுத்தார் வாலுவுக்கு.
அந்த பொன்னான கால்ஷீட்டை கண்ணாக நினைத்து ஷுட்டிங் நடத்தியிருக்க வேண்டுமா இல்லையா? நடத்தாமல் விட்டுவிட்டார்களாம். இந்த திடீர் ஜாம் எதனால் ஏற்பட்டதோ? எரிச்சலாகிவிட்டார் ஹன்சிகா. இனிமேல் என்கிட்ட கால்ஷீட்டுன்னு வராதீங்க என்று கூறிவிட்டாராம். பேய் முழி முழித்துக் கொண்டிருக்கிறது வாலு.
ஆனால் நாங்க தீபாவளிக்கு வருவோம் என்று நம்பிக்கையோடு ட்விட் போட்டுக் கொண்டிருக்கிறார் ஹீரோ சிம்பு.