வடசென்னை / விமர்சனம்

ஆவியில்லாத ஹாரர் படமா? அருவா இல்லாத ஹரி படமா? காதல் இல்லாத கவுதம் படமா? இருக்காதல்லவா… அப்படிதான் க்ரைம் இல்லாத வெற்றிமாறன் படமும்! எமனை இடுப்பிலேயே கட்டிக் கொண்டு திரிகிறார்கள் எல்லாரும். அசருகிற நேரத்தில் ஒரு சதக் சதக்! இமைக்கிற நேரத்தில் ஒரு கதம் கதம்! எல்லாம் முடிந்துவிடுகிறது. இந்த கொடூர பின்னணியில் கேரம் சாம்பியன் ஆக வேண்டும் என்று நினைக்கிற ஒருவனின் வாழ்வு எப்படியெல்லாம் திசைமாறி சின்னாபின்னமாகிறது என்பதுதான் வடசென்னை! அங்கு வசிக்கும் அப்பாவி ஜனங்களில் வீட்டுக்கொருவர் கிளம்பி வந்தாவது வெற்றிமாறனை போட்டுத் தள்ளலாம்! அந்தளவுக்கு நார்த் மெட்ராஸ்சை பெயர்த்து கூவத்தில் போட்டு கும்மியெடுத்திருக்கிறார்.

‘ஜெயிலு வாங்கிக்கிறேன்’ என்று மனசார விரும்பியே புழலுக்குப் போகும் புண்ணியவான்கள், அங்கு செய்யும் அட்ராசிடிகள் என்ன? ஜெயில் நிஜமாகவே தண்டனை களமா, இல்ல… சம்பாதிக்கும் சுரங்கமா? வெளியே இருந்தால் பாதுகாப்பு இல்ல. உள்ளே போய் சுகமா இருக்கலாம் என்று நினைக்கிற அளவுக்கு அது ஸ்மால் டைம் சொகுசு பங்களாவா? இப்படியெல்லாம் கேள்விகளை எழுப்பினாலும், வெற்றிமாறனின் ஆராய்ச்சி, ‘சொல்வதெல்லாம் உண்மை’ ரகம்! அவ்வளவு டீட்டெயில்!!!

கூட்டாளிகளான கிஷோரும், சமுத்திரக்கனியும் கூட்டாக சேர்ந்து ஒரு கொலையை செய்கிறார்கள். அதற்கப்புறம் காலம் அவர்களை பிரித்துவிட, இரண்டு கோஷ்டிகளாக ரத்தம் கக்குகிறது வடசென்னை. இவர் அவரைப் போட… அவர் இவரைப் போட… காத்திருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாமல் உள்ளே நுழைந்துவிடும் தனுஷ், இவ்விருவரது வாழ்விலும் மறக்க முடியாத மனிதராக மாறுவது ஏன்? எப்போது? எந்த சந்தர்ப்பத்தில்? இதெல்லாம்தான் வடசென்னையின் முதல் பார்ட்!

கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, பாவல் நவகீதன், ஜானி, ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இவர்களுடன் தனுஷ். இப்படி சொன்னால் அந்த தனுஷ் ரசிகர்களே கோவிக்க மாட்டார்கள். எல்லாருக்கும் நிறைவான நேரங்களை கொடுத்து தனித்தனியாக மின்ன விட்டிருக்கிறார் வெற்றிமாறன். நானே ஹீரோ, நானே ராஜா என்பது போல இல்லாமல் கதையின் தேவையறிந்து பங்கு பிரித்துக் கொள்கிறார் தனுஷ். அதற்காகவே தனி அப்ளாஸ் ப்ரோ!

ஒரு கொலையை எவ்வித பம்மாத்தும் இல்லாமல் அவர் செய்து முடிக்கும் அந்த தருணம், நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொள்கிறது நமக்கு. அதற்கு முன்னதாக அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான லவ் நேரத்திலும் அதே வேகத்தில் அடித்துக் கொள்கிறது அதே நெஞ்சு. அது தனி! சகட்டுமேனிக்கு அடித்து தள்ளுகிற லவ் கிஸ்கள், கமல்ஹாசனின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டுவிடும் போலிருக்கே? குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷை தனுஷ் அடையாளம் கண்டுகொள்ளும் அந்த காட்சி, ஜிவ்வ்வ்வ்வ்வ்…!

ஒரு வடசென்னை மீனவ குப்பத்துப் பெண் இப்படியெல்லாம்தான் பேசுவாளா? அல்லது பேச வேண்டுமா? தெரியவில்லை. ஆனால் சென்சாரின் காதில் பஞ்சை திணித்துவிட்டு பேசியிருக்கிறார்கள். ஹய்யோ… காது புளித்துப் போகிறது. அவ்வளவு கெட்ட வார்த்தைகள். அதிலும் ஐஸ்வர்யாவே டப்பிங் பேசியிருக்கிறார். எத்தனை முறை டேக் போனதோ?!

சிறிது நேரமே வருகிறார் அமீர். குப்பத்து எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறார். அதிலும் போலீஸ் அதிகாரியின் மிரட்டலை அவர் எதிர்கொள்ளும் அந்த காட்சி, தியேட்டரில் விசில் பறக்கிறது. பொருத்தமான கேரக்டர் தேர்வு. வெல்டன் வெற்றிமாறன்.

சமுத்திரக்கனி கிஷோர் சண்டைக்கு நடுவில் வெள்ளைக்கொடி வீசுகிற கேரக்டர் டேனியல் பாலாஜிக்கு. மிரட்டியிருக்கிறார்.

ஆன்ட்ரியா செத்துப்போன தன் புருஷனுக்காக செய்யும் தியாகம், டூ மச் லெவல்! துரோகம் பழிவாங்கல் உணர்ச்சியின் உச்சக்கட்டம். ஒரு காட்சியில் பின் முதுகு மொத்தமும் திறந்துகிடக்க, அவர் ரொமான்ஸ் பண்ணும் அந்த நிமிஷம், ரசிகர்கள் மூச்சடைத்து கிடக்கிறார்கள்.

‘திரும்பி வர ஊர் இருக்குங்கற நம்பிக்கையில்தானே எங்க வேணும்னாலும் போறோம். அந்த ஊரே இல்லேன்னா…?’ இப்படி மனதை டச் பண்ணும் வசனங்களை படம் நெடுக பேச விட்டிருக்கிறார் வெற்றிமாறன். அது நிகழ்கால அவலங்களையும் தோலுரிப்பதுதான் இன்னும் விசேஷம்.

ஒவ்வொரு சாவு விழும்போதெல்லாம், லோக்கல் பாடகர்களின் குரலில் ஒரு கானா வந்துவிடுகிறது. மனசை அறுத்துவிடுகிற வலிமை கொண்ட வரிகளும் குரலும் அதற்குள்!

வேல்ராஜின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணனின் இசை என்று மேலும் பிரமிக்க விடுகிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகளும்!

வெற்றிமாறனின் கதை சொல்லும் விதம், தனியாக கவர்கிறது. அதில் ஒரு நாவல் படிக்கிற சுகம்! அடுத்த பகுதிக்கான லீட், மிக இயல்பாக தொடங்கப்பட்டிருக்கிறது.

எத்தனையோ கேங் வார் படங்கள் வெவ்வெறு மொழிகளில் வந்திருக்கலாம். அவற்றை வடசென்னை படத்துடன் சிலர் ஒப்பிடவும் செய்யலாம். ஆனால் தமிழில் வந்த கேங் வார் படங்களில் மிக நேர்த்தியான படம் இது என்பதில் நோ டவுட்!

வெற்றிமாறனின் இந்த ரத்தாபிஷேகத்திற்கு மரியாதையான ஒரு பாலாபிஷேகம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Joseph Vijay says

    விஜய் அஜித் சிலம்பரசனை விட, 100 மடங்கு தனுஷ் தானடா சிறந்த நடிகன்.

  2. Pandian says

    VADACHENNAI – COLLECTION KING DHANUSH

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சண்டக்கோழி2 / விமர்சனம்

Close