வடகறி- விமர்சனம்

ஏட்டு சுரைக்காய் ‘கறிக்கு’ உதவாது என்பார்கள். கொஞ்சம் திருத்தி ‘வடகறிக்கு’ என்று வாசிக்கலாம். அப்படியொரு ஸ்கிரிப்ட்! ஆங்காங்கே வசனங்களால் கிச்சு கிச்சு மூட்டுவதால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகனுக்கு முழு பட்டினியிலிருந்து விலக்கு!

ஒரு மொக்கை ஃபிகராவது கிடைக்காதா என்று தவியாய் தவிக்கும் ஜெய்க்கு ஒரு உண்மை புரிகிறது. ‘நல்ல ஐ போன் கையில் இருந்தால், அதற்காகவே ஃபிகர்கள் மடியுறாங்கப்பா ’ என்பதுதான் அது. ஏழை புலவன் ஒரு குயர் வெள்ளை தாளுக்கு எங்கே போவான்? ஒரு டீக்கடையில் ஒரு ஐ போன் ஒன்று அநாதையாக கிடக்க, படக்கென்று அதை சுட்டுக் கொண்டு கிளம்பும் அவர் அதற்கப்புறம் படுகிற பாடுதான் வடகறி. தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு… ‘அதுவேறயா? ரொம்ப முக்கியம்…’

ஐ போன் கைக்கு வந்த பின்பாவது ஜெய்க்கு காதலி வந்தாரா? அதுக்கு ஐ போனும் வராமலிருந்திருக்கலாம். காதலும் வராமலிருந்திருக்கலாம். ஸ்வாதிதான் ஜெய்யின் காதலி. சுப்ரமணியபுரம் படத்தில் பார்த்த ஸ்வாதிக்கும் இவருக்கும்தான் எத்தனை எத்தனை பாலீஷ் பளபளப்பு வித்தியாசங்கள்? சில குளோஸ் அப்புகளில் சகிக்க முடியாமலிருக்கிறார் ஸ்வாதி. ஒரு மாதிரி அஞ்சலி டோனில் ‘என்ன்ன்ன்ன்ன?’ என்று ஸ்வாதி எடக்குவதும், ‘இல்லீங்… சும்மாதான்’ என்று ஜெய் மடங்குவதுமாக மறுபடியும் ஒரு எ.எ! இன்னும் எத்தனை படங்களுக்குதான் ஜெய்யை இப்படியே காண்பிப்பார்களோ? ஆனால் செமத்தியாக அடி வாங்கி முகமெல்லாம் கன்னி சிவந்து போய் நிற்கும் ஜெய்யிடம், ‘முகத்துல லிப்ஸ்ட்டிக் பட்டிருக்கே, யாரு அவ?’ என்று ஸ்வாதி சண்டைக்கு வருகிற காட்சி செமத்தியோ செமத்தி!

ஜெய்க்காக ஸ்வாதியும், அந்த இன்னொரு ஃபிகரும் மோதிக் கொள்கிற ஈகோவெல்லாம் அட… அறிவுகெட்ட இளசுகளா ரேஞ்ச். ஆனால் ரசிக்க முடிகிறது. இவர்கள் களேபரங்கள் எல்லாமே ஜெய் காலில் சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடுகிற நேரமாக பார்த்து நடக்கிறதா? ஜெய் மீது பரிதாபமும் வருகிறது.

ஒரு சுவாரஸ்யமான காதல் கதையை மிஸ் பண்ணிட்டாங்களோ என்று எண்ண வைக்கும் கதையோட்டம்தான் இரண்டும் கெட்டான் லெவல். முதலில் செல்போனில் ஆரம்பித்து, அதற்கப்புறம் லவ்வில் டிராவல் ஆகி, கடைசியில் மருந்து மாத்திரை, எக்ஸ்பயரி, குடோன், கடத்தல் என்று நீண்டு ஒரு வழியாக முடியும்போது, ‘எக்ஸ்பயரி ஆகியிருந்தாலும் பரவாயில்ல. ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்கப்பா’ என்றாக்கிவிடுகிறார்கள் நம்மை.

நடுவில் வந்து ஆடிவிட்டு போகும் பிரபல செக்ஸ் குயின் சன்னி லியோனை விட, அவருக்கு பின்னால் ஆடுகிற ஃபிகர்கள் நாலு சோக்காக்கீதுப்பா!

கலகலப்புக்கு எப்.எம் பாலாஜி. ஜெய்க்கு பதிலாக இவரை கடத்திக் கொண்டு போகும் கடத்தல் கும்பல், பின்பு மெல்ல மெல்ல இவரது பேச்சில் மயங்கி சேம் சைட் கோல் போடுகிற காட்சியெல்லாம் வாயுள்ள பிள்ளை பொழச்சுக்கும் டைப். ஆனால் சில நேரங்களில் பிளேடும் போட்டு தள்ளுகிறார் பாலாஜி. வெங்கட்பிரபு படங்களில் வழக்கமாக வரும் அஜய்ராஜ்தான் இதில் வில்லன். கரப்பான் பூச்சியை காட்ஸில்லா ரேஞ்சுக்கு காட்டுகிறார் இயக்குனர். ப்ச்!

இந்த படத்தில் அருள்தாசின் கேரக்டர்தான் அசத்தல். முகத்தில் நம்பியார் இருந்தாலும், குணத்தில் எம்ஜிஆராக இருக்கிறார் மனுஷன். அந்த மெயின் வில்லன் யாரா இருக்கும் என்கிற சஸ்பென்சை கடைசி வரை நீடித்திருக்கிற இயக்குனர், கடைசியில் ‘அட போங்கப்பா…’ என்று ஆக்கிவிடுவது வேதனை. படத்தில் வெங்கட்பிரபுவும் நடித்திருக்கிறார். அது சிஷ்ய இயக்குனரான சரவண ராஜனுக்காக என்பது அவர் வந்து போகும் சொற்ப நேரங்களில் தெரிகிறது.

பின்னணி இசைக்கு மெனக்கட்ட அளவுக்கு பாடல்களுக்கு மெனக்கடவில்லை விவேக் சிவா, மெர்வின் சாலமன் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள். வெங்கடேஷின் ஒளிப்பதிவில் சேசிங் விசேஷம்.

வடை விற்கலேன்னா வட கறி ஆக்கிடலாம். அந்த வடகறியே தேறலேன்னா? ……….படமாக்குவாங்க போலிருக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேவாங்கு டூ சூப்பர் ஸ்டார்….! விஜய் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’...

Close