வலியவன் – விமர்சனம்

புடிச்ச ஃபிகரு ‘அட்றா…’ன்னா புரூஸ்லீக்கே கூட புத்தூர் கட்டு போட்ருவானுங்க நம்ம பசங்க! இதையே மையமா வச்சு ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன். ‘எங்கேயோ எப்போதோ’ நல்ல படம் எடுத்திருப்பாருப்பா… என்கிற ஆயாசத்தை ஒவ்வொரு பிரேமும் வழங்கிக் கொண்டிருக்க, சுமார் ஒண்ணே முக்கால் மணி நேர அட்ராசிட்டிக்கு பிறகு, ஆறுதலாக வருகிறது அந்த க்ளைமாக்ஸ். திருப்பதி லட்டு வேணும்னா தெருமுனை வரைக்கும் க்யூவுல நின்றுதான் ஆகணும். அந்த பொறுமை உள்ளவர்கள் ‘வலியவன்’ ஓடும் தியேட்டருக்கு வம்படியாக போகலாம்.

திடீரென்று ஒருத்தி கண்ணெதிரே வந்து வந்து, ஐ டூ ஐ பார்த்து ஐ லவ் யூ என்று சொன்னால், மயக்கம் வரும்தானே? அப்படியொரு அனுபவத்தை சந்திக்கிறார் ஜெய். அதுவும் கூட்டம் நிறைந்த பாதாள சுரங்கப்பாதையில் நடக்கிறது அந்த அதிர்ச்சி. அதற்கப்புறம் தனக்கு ஐ லவ் சொன்ன ஆன்ட்ரியாவை தேடி தேடி அலைந்து கடைசியில் கண்டு பிடித்து ஐ லவ் யூ வை திருப்பி சொல்கிறார் ஜெய். ஆனால் சீச்சீ… போ போ… என்று விரட்டுகிறார் ஆன்ட்ரியா. ஏன்?

‘முதல்ல நான் சொல்ற ஒரு ஆளை அடிக்கணும். நீ சரின்னு சொல்லு. மற்றதை பேசலாம்’ என்று இவர் சொல்ல, தயங்கி தயங்கி அந்த ஆள் யாரென்று பார்க்கப் போகிறார் ஜெய். போனால்? ‘இவனா… கண்டிப்பா அடிக்கிறேங்க’ என்று சொல்கிற அவசரத்தில் ஒரு ஆள்! அதுவும் குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வாங்கிய வீரன் அவன். விரட்டி விரட்டி ஒரு கட்டத்தில் அவனை போட்டு தள்ளுகிறார் ஜெய். ஏன் அவனை இவர் அடித்தார். இவருக்கும் அவனுக்கும் முன் பகை என்ன? அதுதான் கிளைமாக்ஸ்.

லிங்குசாமியின் சண்டைக்கோழியாக வந்திருக்க வேண்டிய படம். இயக்குனரின் திரைக்கதை திமிராலும், எடிட்டரின் அலட்சியத்தாலும் சீக்கு கோழியாகியிருக்கிறது. நீள நீளமான காட்சிகள். நிமிட நேரம் கூட ஒட்ட வைக்காத காட்சியமைப்புகள் என்று ‘நான் எடுக்கறதெல்லாம் படம். கொடுக்கறதெல்லாம் ஹிட்’ என்கிற மேதாவித்தனத்தோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சரவணன். அதுவும் முன்னபின்ன தெரியாத ஆண்ட்ரியாவுடன் காரில் பயணம் செய்யும் ஜெய், குடித்துவிட்டு அலம்பல் செய்யும் காட்சிகள் சிரிப்புக்கு பதிலாக எரிச்சலையே வரவழைக்கிறது.

நல்லவேளை… அவர்ஷன் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம்பிடிக்கவில்லை ஜெய். இன்னமும் காதலிகளை கண்டால் அஞ்சலியிடம் பம்முவது போலவே பம்மி ஒடுங்குவதை சலிக்காமல் ரசிக்க முடிகிறது. அந்த கடைசி பைட்டுக்காக சிக்ஸ்பேக்ஸ் வைக்கிற அளவுக்கு கதைக்காக மெனக்கட்டிருக்கிறார். பாராட்டுகள்.

ஆன்ட்ரியாவெல்லாம் டீன் ஏஜ் பருவத்தை கடந்து சில வருஷங்கள் ஆகிவிட்டது என்கிற புறத்தோற்ற பூகோளம் தெரியாமலே அவரை கதாநாயகி ஆக்கியிருக்கிறார்கள். ஒரு சிங்கிள் பாட்டு, சில குணச்சித்திர வேடத்திற்கு மட்டுமே தாங்குகிற அவரது தலையில் டன் கணக்கில் பொறுப்பு. உன்னையெல்லாம் ஒருத்தன் லவ் பண்றதே பெரிசு. இதுல சீச்சி… போ..போன்னு விரட்டுற? என்று ரசிகர்கள் பேய் கூச்சல் இடுவதை யாராவது வீடியோ எடுத்து ஆன்ட்ரியாவுக்கு காட்டுங்கப்பா… இருந்தாலும் ஒளிப்பதிவாளர் மற்றும் காஸ்ட்யூமர் திறமையில் ஒரு பாடலில் பளிச்சிடுகிறது ஆன்ட்ரியாவின் அழகு.

தன் கண்ணெதிரிலேயே அப்பாவை ஒரு ஓங்கி அடித்து பல்லை உடைக்கிறான். கையாலாகாமல் இருக்கிறோமே என்கிற கவலையில் அப்பா முகம் பார்க்காமல் மகன் சிதறி ஓடுகிற காட்சியை கவலையோடு ஃபீல் பண்ண முடிகிறது. அதே போல அழகம்பெருமாளுக்கும் ஆன்ட்ரியாவுக்கும் இடையே உள்ள நட்பு ஒரு கவிதையை போல காட்டப்பட்டிருப்பது சிறப்பு.

சிரிப்புக்கு பால சரவணன். பாவம்… அவர் என்ன செய்வார்? இன்புட் இல்லை. அதனால் படத்தில் இவரும் தொல்லை. அந்த வில்லன் ஆரன் சவுத்ரியின் கம்பீரம் சூப்பர். ஒரு ஜாம் பின் பக்கத்துல ஒட்டுனத்துக்காக ஒரு பெரிய மனுஷனை பெரிய மனுஷன்னும் பார்க்காமல் அடிப்பதெல்லாம் ஓவர்தான்.

படம் நெடுகிலும் பணத்தை வாரியிறைத்திருக்கிறார் தயாரிப்பாளர். கூட்டம் இல்லாத காட்சிகளையே பார்க்க முடியாதளவுக்கு ‘க்ரவுட் பில்லிங்’. காரில் போகிற ஒருத்தி மெனக்கெட்டு நடந்து வந்து பல நூறு பேர் நடந்து போகும் சுரங்க பாதைக்கு வந்து லவ் யூ சொல்வதெல்லாம் காசுக்கு பிடிச்ச கேடு.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். படத்திற்கு இசை டி.இமான் என்கிறார்கள். அவரே தியேட்டர் வாசலில் நின்று, அது நான்தாங்க என்று சத்தியம் பண்ணினால் கூட, ‘தள்ளுப்பா அப்பால… ’ என்பார்கள் ரசிகர்கள். ஒட்டக சிவிங்கிக்கு கழுத்து சுளுக்கு வந்ததை போல, எரிச்சலூட்டும் ட்யூன்கள். இரைச்சலில் மிதக்கும் ஆர்கெஸ்ட்ரா. பின்னணி இசை ? கேட்கவே வேண்டாம். திராபை என்பார்களே, அதேதான்!

விஞ்ஞானிகள் போன ராக்கெட் விழுந்து நொறுங்கியதை போல நொறுங்கியிருக்கிறார்கள். சேதாரத்தோடு திரும்பி வந்தாவது திறமையை நிரூபிச்சுருங்க. இல்லேன்னா வருங்காலம் ‘வலி’ய வந்து வாய்விட்டு சிரிக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நதிகள் நனைவதில்லை – விமர்சனம்

‘காதலிக்காதவர்களிடம்தான் காதல் பத்திரமாக இருக்கிறது’ என்று அண்மைக்காலமாக விளம்பரங்களில் பளிச்சிட்ட வாசகத்திற்கு சொந்தமான படம்! ‘ ரொம்ப பொயட்டிக்கா இருக்குமோ?’ என்கிற சிந்தனையோடு கொட்டாய்குள்ள போகிறவர்களுக்கு, ‘சினிமா...

Close