வண்டுமுருகன் இல்லேன்னா என்ன? வடிவேலுவை இடறிவிட்ட ஹீரோ!

வக்கீல் வண்டுமுருகனை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் ஆர்.கே! அவர் தயாரித்து ஹீரோவாக நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில்தான் வக்கீல் வண்டுமுருகனுக்காக ஜாமீன் வாங்க மார்க்கெட்டில் அலையும் ஒரு கோஷ்டி! வடிவேலு காமெடியில் மாஸ்டர் பீஸ் என்று எடுத்துக் கொண்டால், அதில் வண்டுமுருகனும் ஒன்று. அப்படியொரு காம்பினேஷன் கலக்கல் அதற்கப்புறம் வந்த ‘அழகர் மலை’ படத்திலும் தொடர்ந்தது. இப்போது ஆர்.கே நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘என் வழி தனி வழி’. ‘இதில் வண்டு முருகனுக்கு வேலையில்லையே, ஏனுங்க?’ என்றால், தன் வெள்ளை சொக்காய் இன்னும் வெளுக்கிற அளவுக்கு ஒரு உண்மையை சொன்னார் ஆர்.கே.

‘அவர் ஹீரோவாயிட்டாரு. இனிமே எப்படி சார்?’ உண்மைதான். வடிவேலு வானத்தை பார்த்து நடக்க ஆரம்பித்த பிறகுதான், தமிழ்சினிமா காமெடி வெட்கம் தாங்காமல் தரைக்குள் முகம் புதைத்துக் கொண்டது. மறுபடியும் மனுஷன் பூமிக்கு திரும்புகிற காலம் வந்தால், சமானியன்களின் காமெடி ராஜாவாக வடிவேலு திரும்பி வரக்கூடும். இருந்தாலும் ஆர்.கே.விடம் கருத்துக் கேட்பதுதானே முறை? ‘அண்ணே… வடிவேலுவுக்கு மாற்றுன்னு யாரு இருக்கா உங்க படத்துல?’ என்றால், ‘நம்ம படத்துல ஆக்ஷன் இருக்கோ இல்லையோ? காமெடி நிச்சயம் இருக்கும். இந்த முறை தம்பி ராமய்யாவும், சிங்கமுத்துவும் இணைஞ்சு பிணைஞ்சுருக்காங்க. சத்தியமா சொல்றேன். இன்னும் பல வருஷத்துக்கு அந்த காமெடியை நினைச்சு நினைச்சு சிரிப்பீங்க’ என்றார் ஆர்.கே.

‘என் வழி தனி வழி’ படத்தை கேரளாவின் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். இதற்காக ஜோர்டான், இஸ்ரேல் வரைக்கும் போய் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் ஆர்.கே. அடிப்படையில் தன்னம்பிக்கை பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து பலருக்கும் நம்பிக்கை கொடுத்து வருகிறவர் அவர். ‘இதுவரைக்கும் என் ஸ்பீச்சை இரண்டு கோடி பேருக்கும் மேல் கேட்டிருக்காங்க. அதில் மூன்று லட்சம் பேர் பயனடைஞ்சுருக்காங்க. என் பணி தொடரும். அதே நேரத்தில் சினிமாவையும் நேசிப்பேன் ’ என்றார் ஆர்.கே. இந்த படத்திலிருந்து அவரை ‘மக்கள் தளபதி’ என்று டைட்டிலில் கொண்டாடப் போகிறார்களாம்.

ரெண்டு கோடி பேருக்கு முன் ஸ்பீச் கொடுத்தாச்சு. அப்புறமென்ன? போட்டுக்கங்க… போட்டுக்கங்க… தாராளமா போட்டுங்கங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தலைகீழ தொங்குனாதான் வலி தெரியும்! வலிக்க வலிக்க நடித்த விநாயக்ராஜ்

சமீபத்தில் வெளிவந்த சிகரம் தொடு படத்தில் நடித்திருந்தார் விநாயக் ராஜ். அந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் மூவரில் ஒருவர்தான் இந்த விநாயக். தமிழ்சினிமாவில் எல்லாரது மனசையும் கொள்ளையடிக்க...

Close