சென்ட்டிமென்ட்டை நொறுக்கு விஜய் ஆன்ட்டனி செருக்கு!
‘காளி’ என்ற தலைப்பை ரொம்ப காலமாக சுமந்து கொண்டிருக்கிறார் கபாலி ரஞ்சித். ஆனால் “எதுக்குங்க வேண்டாத வேலை? அப்படியெல்லாம் டைட்டில் வச்சா பிரச்சனைதான்” என்று முன்னுதாரணம் காட்டி முடக்கி வைக்கிறார்கள் சிலர். “நான் ஒரு ராசியில்லா ராஜான்னு பாடவே மாட்டேன்னு சொன்னேன். இந்த டி.ராஜேந்தர்தான் என்னை பாட வச்சார். அன்னையிலேர்ந்து என் முன்னேற்றம் தடை பட்டுடுச்சு” என்றார் மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். இதை செய்யாதே… அதை செய்யாதே… என்று அச்சம் காட்ட ஆயிரம் அம்புகள் பறந்து வருகிற ஏரியாவில் ஒரு சிலர்தான், “வுட்றா பார்க்கலாம்” என்று முண்டா தட்டுவார்கள்.
பய பக்தியோடு கோவில் கோபுரத்தையோ, அல்லது பிடித்த கடவுளின் முகத்தையோ காட்டிதான் படத்தையே துவங்குகிறார்கள் பலர். ஆனால் முதல் ஷாட்டிலேயே எருமை மாட்டையும் சுடுகாட்டையும் காட்டியவர் பாலா. தனது படத்திற்கு இமேஜ் பார்க்காமல் கெட்டவன் என்று பெயர் வைத்த சிம்புவை கூட இந்த நேரத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.
அந்த வகையில் இவர்கள் எல்லாருக்கும் அண்ணனாக இருப்பார் போலிருக்கிறது விஜய் ஆன்ட்டனி. அவரது நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரப்போகும் படம் பிச்சைக்காரன். இப்படியொரு தலைப்பு வைக்கும்போதே வேணாம் என்று அவரை எச்சரித்தார்களாம் நண்பர்கள். அப்படியிருந்தும் விடாப்பிடியாக வைத்தார். இதற்கே இப்படியென்றால் அவரது அடுத்தடுத்த பட தலைப்புகளை கேட்டால், அவர்கள் என்னாவார்களோ?
விஜய் ஆன்ட்டனியின் அடுத்த படத்தின் பெயர் எமன். அதற்கடுத்த படத்தின் பெயர் சைத்தான்!
சர்தான்…