தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?
கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான தேள் கடி! அவர் எந்த படத்தையும் நிம்மதியாக ரிலீஸ் செய்யவே முடியவில்லை. இதற்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனசு நினைத்தாலும், மீண்டும் அம்மா வந்தால் என்னாவது? இந்த அச்சமும் சேர்ந்து கொள்ள, அந்த அதிரடி தோட்டா வேறு வழியில்லாமல் சந்திலிருந்து பாய ஆரம்பித்திருப்பதாக கிசுகிசுக்கிறது அரசியல் வட்டாரம்.
தேர்தலுக்கு முன்பே தன் ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்களில் சிலரை மட்டும் சந்தித்து விஜய் ஆலோசனை செய்ததாக ஒரு தகவல் உண்டு. தற்போது விஜய்க்கு நெருக்கமான ஒருவர் மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் அடித்து, நம்ம இளைய தளபதி, திமுக தளபதி (மு.க.ஸ்டாலின்) யிடம் போனில் பேசிட்டார். அதனால் எல்லாரும் திமுக வுக்கு ஆதரவா வேலை செய்ங்க என்று கூறியிருக்கிறாராம். இதையடுத்து ஆங்காங்கே மன்றக் கொடியை கருப்பு சிவப்பு கொடியோடு இணைத்துக் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ஒரு சில மாவட்டங்களில் மட்டும் எங்க ஆதரவு அதிமுக வுக்குதான் என்று இலையின் வலையில் சிக்கிக் கொண்ட விஜய் ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு களேபரத்திற்கும் காரணமாக விஜய் எங்கேப்பா இருக்கார்?