தேர்தலுக்கு முந்தைய நாள் அறிக்கை ‘மோடி ’ வலையில் சிக்குவாரா விஜய்?

தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன். ஈழ விவகாரம் குறித்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் உருப்படியாக ஒரு வாக்குறுதியும் இல்லாததால் உலக தமிழர்கள் ஏக வருத்தத்தில் இருக்க, விஜய்யும் மோடியும் சந்தித்திருப்பது 90 சதவீத புலம் பெயர் தமிழர்களை வாட வைத்திருக்கிறது. விஜய்யும் மோடியும் சந்தித்ததன் பின்னணி என்ன? இந்த சந்திப்பினால் விஜய் அடையப் போகும் லாபம் என்ன? மோடி அடையப் போகும் லாபம் என்ன?

இப்படி முக்கூடல் கேள்விகளால் மூச்சடைத்துப் போயிருக்கும் தமிழர்களுக்கு உருப்படியாக ஏதேனும் தகவல் திரட்டி தர வேண்டாமா? அலைந்து திரிந்து விசாரித்தால் இருவர் சந்திப்பிலும் எள்ளுருண்டை அளவுக்கு கூட மக்களுக்கு லாபம் இல்லை என்று மட்டும் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு?

முதலில் கத்தி பிரச்சனையைதான் பெரிதாக நினைக்கிறாராம் விஜய். தன் ஒவ்வொரு படங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கோக்கு மாக்கு சூழ்ந்து விடுவதால் இதையெல்லாம் எப்படிதான் சமாளிப்பதோ என்று கவலை கொண்டிருந்த அவரை இந்த கத்தி பிரச்சனை சற்று அதிகமாகவே கீற ஆரம்பித்தது. ஒரு முன்னணி ஹீரோவின் முதல் வியாபாரம் என்றால் அது எப்.எம்.எஸ் சொல்லப்படும் வெளிநாட்டு ரைட்ஸ் மூலம் வரும் வருமானம்தான். பல தயாரிப்பாளர்கள் இந்த தொகையை படம் துவங்குவதற்கு முன்பே விற்று அந்த காசில் படம் எடுக்க கிளம்புவார்கள்.

இந்த எப்எம்எஸ் மார்க்கெட்டை இன்று பலமாக நிர்ணயிப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள்தான். விஜய் படங்களை திரையிட மாட்டோம், வாங்க மாட்டோம், பார்க்க மாட்டோம் என்று கூறிவிட்டால் போதும். படத்தின் லாபத்தில் பெரும் பங்கு திவால்தான். இந்த கத்தி பிரச்சனையில் விஜயின் தலையை பதம் பார்க்க துடிப்பதும் இந்த வெளிநாட்டு வியாபாரம்தான். இதை மோடி எப்படி சரி செய்ய முடியும்?

கருத்து கணிப்புகளும், மக்கள் விருப்பமும் மோடிதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று இருப்பதால், விஜய்யும் அடுத்த பிரதமர் மோடிதான் என்று நம்புகிறார். அதனால் மோடி தன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல் அறிந்ததும் அக மகிழ்ந்தாராம். அதே நேரத்தில் மோடியை வழி நடத்துகிற தமிழக பொறுப்பாளர்கள், ரஜினிக்கு இருக்கிற செல்வாக்கு மாதிரியே தமிழகத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக இருக்கிறார் விஜய். அவரையும் சந்தியுங்கள் என்றார்களாம். கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இந்த சந்திப்புக்கு ஓ.கே சொல்லியிருந்தாராம் விஜய்யும்.

வழக்கம்போலவே ‘இந்த அம்மா கோவிச்சுக்க போறாங்க?’ என்று விஜய்யை யோசிக்க சொன்னவர்களும் உண்டு. நிச்சய வெற்றி என்கிற நிலையில் இருக்கும் மோடியே தன்னை சந்திக்க பிரியப்படும் போது, நாம் வேண்டாம் என்று மறுப்பது அழகல்ல என்று நினைத்தாராம் விஜய். அதே நேரத்தில் பிரதமரே கையிலிருந்தால் கத்திக்கு எதிராக வாள் சுற்றுகிறவர்களை ஈசியாக அடக்கி விட முடியும் என்றும் நினைத்தாராம்.

தன்னை சந்தித்த மோடியிடம், தனது படங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தடங்கல்கள் பற்றியும் விஜய் மேலோட்டமாக பேசியதாக கூறுப்படுகிறது. தேர்தல் நெருங்குகிற நேரத்தில் விஜய் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று மோடி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பாவிடம் கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் என்று கூறியிருக்கிறாராம் விஜய்.

தேர்தலுக்கு முந்தைய தினம் விஜய்யிடமிருந்து பரபரப்பான ஒரு அறிக்கை வரக்கூடும் என்பதுதான் இப்போதைய விறுவிறுப்பு. இந்த அறிக்கையும் வருங்கால பிரதமர் மோடியும் ‘கத்தி’க்கு உறுதுணையாக இருந்தால் விஜய்க்கு கொஞ்சம் கொஞ்சம் அரசியலும் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவேளை சொதப்பினால், விஜய் அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய… என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகை- ஹீரோ ரகசிய குடித்தனம்?

அட... நல்லவங்களையெல்லாம் இப்படி போட்டு தாக்குதேப்பா கள்ளக் காதல்? இப்படியொரு வேதனை குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அதுவும் ஒரு ஹீரோவை பற்றி! குடும்பம், குழந்தைகள் என்று...

Close