விஜய் ஆசை? புறக்கணித்த முருகதாஸ்!

‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும் அவரது நாக்கில் இருக்குமல்லவா? கத்திக்கும் அப்படியொரு ஃபார்முலாவை கையாள திட்டமிட்டிருக்கிறாராம் அவர். இந்த நேரத்தில்தான் தனது ரீமேக் லட்சியத்திற்காக விஜய்யின் ஆசையை விட்டொழிக்க துணிந்துவிட்டார் மிஸ்டர் களவாணி.

தெலுங்கில் விஜய்க்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது. இருந்தாலும் நேரடியாக ஒரு படத்திலும் நடித்ததில்லை விஜய். கத்தி அங்கு தமிழிலேயே வெளியானது. அங்கிருக்கும் தமிழ்ப்பட ரசிகர்கள் மட்டும் தியேட்டருக்கு வந்து கத்தியை ரசித்திருக்கிறார்கள். இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்பது விஜய்யின் விருப்பம். இதை நேரடியாக முருகதாசிடமே கூறியிருந்தாராம். இருந்தாலும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை முருகர். தெலுங்கில் டப்பிங் செய்து கத்தியை வெளியிட்டு விட்டால், அதற்கப்புறம் இந்த படத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுத்து அதே ஏரியாவில் வெளியிட முடியாதே? அதனால்தான் இந்த அலட்சியம்.

சரி… அவரது அடுத்த ஸ்டெப். கத்தி படத்தை தெலுங்கின் முன்னணி ஹீரோவான பவன் கல்யானுக்கு போட்டு காண்பித்தாராம். அவர் உதட்டை பிதுக்கிவிட்டார். அதிர்ச்சியான முருகதாஸ், இப்போது மகேஷ்பாபு வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்.

அங்கும் இது திருட்டுக்கதை என்கிற விஷயம் தெரிந்துவிட்டதோ, என்னவோ?

Read previous post:
Anegan Press Meet Stills

Close